6.விஷ்ணு தத்துவம்

Lord-Krishna

6.விஷ்ணு தத்துவம்

கடவுளின் அவதாரம் பத்து – 4. கண்ணன்

உலகம் எவ்வாறு உருவானது? சூரியன் எவ்வாறு உருவானது? உயிரணு எவ்வாறு உருவானது? தாவர இனங்கள் எவ்வாறு உருவானது? என்பதை நமது காவியங்கள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.

அதில் உயிரினங்களிடத்தில் “கண்கள் உருவானதை” நான்காவது அவதாரமாகக் கண்ணன் தோன்றுகின்றான் என்று விளக்கியுள்ளனர்.

  1. “பார்க்க வேண்டும்” என்ற உணர்வுகள் எப்படித் தோன்றுகிறது?

ஒரு உயிரணு கடலைச் செடியிலிருந்து வெளிப்படும் மணத்தைத் தனக்குள் கவர்ந்து தனது உடலாக மாற்றி புழுவாக உருப்பெறுகின்றது. பின் இந்தப் புழு இதே வாசனையை நுகர்ந்து தனது உணவிற்காக கடலைச் செடி இருக்கும் இடத்திற்கு நகர்ந்து செல்லும்.

புழுவிற்குப் பசி எடுத்து பசியின் உணர்வுகள் உந்தப்படும் பொழுது “சாப்பிட வேண்டும்..,” என்ற எண்ணங்கள் வந்து அதனின் உணர்வின் துணை கொண்டு புழு தன் உடலை நகர்த்திச் சென்று தாவர இனத்தை உணவாக எடுக்கின்றது.

இதை விஷ்ணு தத்துவத்தில் “எந்தச் சுவையின் தன்மையை நுகர்ந்ததோ.., அந்த எண்ணங்கள் கொண்டு.., அந்த இடத்திற்கு உடலை அழைத்துச் செல்கின்றது” என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

கடலைச் செடி சாந்தமானது. சாந்தத் தன்மை கொண்ட கடலைச் செடியைத் தேடி மணத்தால் நுகர்ந்து நகர்ந்து செல்லும் புழு தான் செல்லும் வழியில்.., “ஒரு விஷச் செடியின் காற்றினைச் சுவாசித்துவிட்டால்.., மயங்கி விடுகின்றது.., வேதனைப்படுகின்றது.”

அப்பொழுது அதனின் இரை தேடும் செயலும் தடைபடுகின்றது.

அதனால் புழுவிற்குத் தனது உணவினைப் “பார்க்க வேண்டும்” என்ற உணர்வின் எண்ணங்கள் வருகின்றது.

ஆனாலும் புழு தான் பார்க்க முடியாத நிலைகள் கொண்டு மற்ற விஷத் தாவர இனங்களை நுகர்வதால்.., “வேதனையின் உணர்வுகள் இதற்குள் வேதனையை உருவாக்கும் அணுக்களாக உருவாகி..,” முதலில் உருவான அணுக்களைக் கொல்லுகின்றன.

அப்பொழுது வேதனையான உணர்வின் எண்ணங்கள் உருவாகி அதன் நிலைகளில் அணுக்கள் உருவாகின்றன.

“NEGATIVE, POSITIVE” என்ற விஷத்தின் தன்மை கொண்டு எப்படி சூரியன் இயங்குகின்றதோ இதைப்போன்று எதிரிமறையான அணுக்களின் மோதலில் அங்கே புழுவாக உருவாகின்றது.

மோதலில் ஒளியின் தன்மை ஆவது போன்று இந்த உணர்வின் தன்மை நினைவின் ஆற்றல் “பார்க்க வேண்டும்…,” என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

  1. சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் – விளக்கம்

அந்த உணர்ச்சியின் தன்மை பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் புழுவின் உடலில் இரண்டும் எதிர்மறையாகி நுகர்ந்த உணர்வின் தன்மை சேர்ந்து புழுவின் உடல் மடிந்து உணர்வுகள் எண்ணத்தால் உருவாக்கப்பட்டு இணைத்துக் கொண்ட நிலைகொண்டு மாற்று உருப்பெறுகின்றது.

பரிணாம வளர்ச்சி அடைகின்றது. இப்படிக் கண் உருவாகும் நிலைக்குத்தான் காரணப்பெயர்களைக் கொடுத்தார்கள்.

1.வாசு என்பது உயிர்.

2.தேவகி என்பது தேவையான சக்தி

வாசுதேவன் தான் சுவாசித்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது.., தேவகி தமக்குத் தேவையான சக்தியின் துணைகொண்டு தான் எண்ணும் பொழுது.., “வாசுதேவனுக்கும் தேவகிக்கும்” சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்.

அதாவது கண்கள் உருப்பெற்றது.

கம்சன் என்பது “இருள்”. இருள் சூழ்ந்த சிறையிலிருந்து தன் “அன்னை தந்தையை மீட்கக் கண்ணன் பிறந்தான்..,” என்ற நிலையைக் காண்பித்துள்ளார்கள்.

1.இந்த உயிரும்

2.தான் எண்ணிய சக்தியும் இரண்டும் சேர்ந்து

உணர்வின் கருவாக விளைந்து “கருவிழியாக” உருவாகியது.

கருவிழியின் தன்மை கூர்மையாக உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவாகி அந்த அலைகளைத் தனக்குள் எடுத்து தான் எப்படி எண்ணி மாறவேண்டும் என்ற நிலை உருவானதைத்தான் தெளிவாக்குகின்றார்கள்.

ஆகவே, நாராயணன் துவாரகாயுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் கண்ணனாக உருப்பெற்று உடலின் தன்மையைக் காக்கும் உணர்வாகக் “கண்ணன் தோன்றினான்” என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

  1. கண்ணன் சங்கநாதம் செய்கின்றான்

நமது உடலினுள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் குருவாக இருப்பது நமது உயிர். நமது கண்கள் உணர்வுகளைக் கவர்ந்து நம்மை நுகரச் செய்து உயிருடன் இணைக்கின்றது.

அது “பதிவாகவில்லை..,” என்றால் இங்கு நமக்குள் நுகரும் திறன் இல்லை.

உதாரணமாக இப்பொழுது யாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டுள்ளோம். இப்பொழுது, உங்கள் நினைவின் ஆற்றலானது இங்கே இருக்க வேண்டும்.

ஆனால், “இன்றைக்குக் கடையில் வேலைக்காரன் என்ன செய்கின்றானோ…? விட்டுவிட்டுப் போய்விட்டானோ..,?” என்று உங்களுடய நினைவினைச் செலுத்திவிட்டால் யாம் சொல்லும் உணர்வுகள் உங்களுக்குள் “பதிவாகாது”.

யாராவது திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது. பதிவானால்தான் இந்த உணர்வின் அலைகளை நுகர முடியும்.

கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் வேதனை கொண்ட உணர்வின் அலைகளைக் கவர்ந்து நுகர்கின்றது. அதன் உணர்வின் தன்மை உயிருடன் இணைக்கப்படும் பொழுது உயிரான குருக்ஷேத்திரத்தில் “கண்ணன் சங்கநாதம் ஊதியபின்.., தான் குருக்ஷேத்திரப்போர் நடக்கிறது” என்று உணர்த்தியுள்ளார்கள்.

அதாவது, உடலை உருவாக்கிய அணுக்களின் தன்மை தனது பாதுகாப்பான நிலைகளில் வேகமாக உருவாக்கி எதிரிகளிடமிருந்து காக்கும் நிலைகளை உருவாக்குகின்றது.

இதைத்தான் “கண்ணன் சங்கநாதம் செய்கிறான்..,” என்று ஞானிகள் உரைத்தனர்.

  1. கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும்

நமது உடலிலுள்ள கண் ஒரு காட்சியின் உணர்வினைக் கவர்கின்ற பொழுது அந்த உணர்வின் வேகத்தை சத்தியபாமா நுகர்ந்தறிந்த நிலைகள் உண்மையைக் காட்டினாலும் அந்த உணர்வின் தன்மையைத் தன் உடலாக்கி அதன் அறிவாக இயக்கத் தொடங்கிவிடும்.

ஆகவேதான், சத்தியபாமா என்று கண்களின் இயக்கம், தனதாக உருவாக்கும் அந்தச் சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலைகள்தான் “கண்ணனுக்கு இரு மனைவி” என்று கூறுகிறார்கள்.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டுதான் தீமைகள் என்று நமக்குள் அறிகின்றோம். தீமை என்றால் உயிர் அதை உருவாக்கிவிடுகின்றது. உணர்வின் அணுவாக மாற்றிவிடுகின்றது.

இத்தகைய நிலைகள் பெற்றாலும் மனிதன் பல கோடிச் சரீரங்களிலிருந்து தீமைகளை வென்ற உணர்வுகளைக் கொண்டு இந்த உடலின் தன்மையில் வரும் ஆறாவது அறிவுதான் “கார்த்திகேயா”.

எதனையும் அறிந்திடும் அறிவாக உருவாகின்றது.

அவ்வாறு உருவான ஆறாவது அறிவின் துணை கொண்டு.., “நன்மை தீமை” என்ற நிலைகளை அறிந்து தீமைகளை அகற்றும் நிலையினைப் பெற்றிருக்கின்றோம்.

துருவ மகரிஷிகள் தம் உணர்வின் தன்மையினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக வானில் திகழந்து கொண்டுள்ளார்.

நாம் நமது ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமது உடலினுள் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். பதிவாக்கியபின்

1.நினைவின் தன்மையை கண்ணிற்குக் கொண்டு வந்து

2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி

3.நல் உணர்வின் தன்மையை உடலினுள் செலுத்தி

4.நமது உடலுக்குள் இருக்கும் நல் அணுக்களுக்குச் சக்திவாய்ந்த நிலையைப் பரவச்செய்து

5.அதனின் வலிமை பெற்றபின்

6.வேதனை என்ற உணர்வுகள் நமது உடலில் ஆன்மாவில் இருப்பதைப் பிளத்தல் வேண்டும்.

Leave a Reply