“மகரிஷிகளை எண்ண வேண்டிய சரியான முறை”

ம்கரிஷி

“மகரிஷிகளை எண்ண வேண்டிய சரியான முறை”

ஒரு வேப்ப மரம் தன் கசப்பின் வலுவைக் காட்டப்படும்போது தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. அந்தக் கசப்பின் உணர்வு கொண்டு மற்றவைகளைத் தன் அருகிலே வராதபடி வெளியே தள்ளுகிறது.

இதைப் போல நாம் நமக்குள் எத்தகைய உணர்வின் தன்மைகளை இணைத்துக் கொண்டுள்ளோமோ அதனின் செயலாக்கமாகத் தன்னைப் பாதுகாக்கும் நிலைக்கு அது இயக்கும்.

ஆக, நாம் பரிணாம வளர்ச்சியில் தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து இன்று மனிதனாக உருவாகியுள்ளோம்.

அப்படித் தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் பெற்ற நாம் நஞ்சை ஒளியாக மாற்றிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இப்பொழுது அதிகமாக நமக்குள் கூட்ட வேண்டும்.

இந்தக் கணக்கைக் கூட்டினால் இந்த மனித வாழ்க்கையில் தீமைகள் அகலும். இதில் உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லை.

எத்தகையை தீமையான நிலைகள் வந்தாலும் அடுத்த நிமிடம் உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று பல முறை செலுத்திக் கொள்ளுங்கள்.

“மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்..,” என்ற இந்தப் பாசத்தை வளர்த்துவிடுங்கள். இந்தப் பாசத்தால் தீமைகளை அகற்றிடும் உணர்வாக அந்தக் கணக்கின் பிரகாரம் உங்கள் உயிருடன் ஒன்றி வாழும் நிலை பெறுங்கள்.

ஆக, இந்தச் சக்திகளை எங்கிருந்து பெற்றீர்களோ அதன் அரவணைப்பில் தீமைகளை அகற்றிய உணர்வின் செயலாக உங்கள் உயிரின் தன்மையில் என்றுமே உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அது இயங்கத் தொடங்கும்.

இதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார். “கோடி கோடி..,, கோடி கோடி..,” என்று சொல்லைச் சொல்லி “விண்ணிலே” அந்த உணர்வைப் பரப்பினார்.

அந்த உணர்வுகள் எவ்வாறு செயலாக்குகிறது என்ற “சில உண்மை நிலைகளை” உணர்த்தினார். அதை நீங்கள் பெறுதல் வேண்டும்.

அவர் உணர்த்திய அந்த ஆற்றல்களை உங்களை எளிதில் பெறச் செய்வதற்குத்தான் முதலிலே “ரிஷிகளின் அருள் சக்தி” என்று சொல்லி உங்களுக்குள் பதிவு செய்தேன்.

அடுத்துச் “சப்தரிஷிகள்” என்று இணைத்தேன். அதைக் காட்டிலும் நீங்கள் வலு பெறுகின்றீர்கள்.

அந்த வலுப் பெற்ற நிலைகள் கொண்டு “சப்தரிஷி மண்டலம்” என்றேன். அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அங்கே உங்களை இணைக்கின்றோம்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அது படிப்படியாகக் கொண்டு போக வேண்டும்.

ஏனென்றால், “முதலில் இப்படிச் சொன்னார்.., இப்பொழுது இப்படி என்று எதைச் சொல்வது?” என்ற சந்தேகக் குறிகள் ஏற்பட்டுவிடும்

சப்தரிஷிகள் ஆனாலும் அவர்களும் “சாதாரண வாழ்க்கையின்” நிலைகளில் பெற்றவர்கள் தான்.

இன்று எடுத்துக் கொண்டால் இது இந்த ரிஷி கட்டிய ஆலயம், அந்த ரிஷி கட்டிய ஆலயம் என்று சொல்வார்கள். இதுவெல்லாம் ஒவ்வொரு ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைகளே.

அவரின் புனை பெயராக வைத்து இவர்கள் “ஓர் ரிஷி என்றும்.., ரிஷி வம்சம் என்றும்.., இந்தக் குலம் இந்தக் குல வழி என்றும்.., ரிஷியின் குலங்கள்” என்று இப்படியெல்லாம் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், அந்தக் குல வழியில் ரிஷிகள் என்றாலும் “இந்த மனித உணர்வுடன்” இது ஒன்றிவிடும். இது எளிதில் கிடைக்கும்.

ஆனால், “விண் சென்ற மகரிஷியின் ஆற்றல்” எளிதில் கிடைக்காது.

ஏனென்றால், நம்முடைய கூர்மை அனைத்தும் முழுமை பெற்ற நிலையில் சித்ரன் (கண்ணின்) நினைவின் ஆற்றல் அங்கே விண்ணிலே இருக்க வேண்டும்.

“விண்ணிலிருந்து.., அதைப் பருக வேண்டும்..,” என்று எண்ண வேண்டும்.

“வெறும் வார்த்தையில்” அந்த ரிஷிகள்.., இந்த ரிஷிகள்.., என்று எண்ணினால் அதற்குண்டான.., “மனித உணர்வுகள் கலந்த நிலைதான்” நம் ஈர்ப்புக்கு வரும்.

“அகஸ்தியன் பெயரை வைத்து” அந்தக் குல வழியில் தான் வளர்த்து கொண்டு நம்முடன் உறவாடிய (மனிதனின்) உணர்வுகள் தான் அதிகமாகப் பதிவாகின்றது.

இதன் மேல் இச்சைப்பட்டால் இதுதான் வரும்.

பின், “நான் அகஸ்தியரையும் மற்ற ரிஷிகளையும் நினைக்கின்றேன்.., ஆனால் எனக்கு இப்படி வருகிறதே..,” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

“விண் சென்று” ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் அருளாற்றல்களை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் யாம் பதிவு செய்கின்றோம்.

பதிவான அந்த உணர்வு கொண்டு நீங்கள் விண்ணை நோக்கி ஏகி சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அதைப் பெறவேண்டும்.

இந்த உணர்வின் வழிப்படி விண்ணின் நிலைகளில் ஏகும்போது தான் அதனுடைய இயக்கத் தொடர் இங்கே பரவியிருக்கும் ஆற்றல்கள் “அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள்” கிடைக்கும்.

இல்லையென்றால், இன்று மதத்தின் அடிப்படையில் குலத்தின் நிலை கொண்டு பதிவு செய்த இந்த ரிஷிகள் உங்களுக்குள் இதுவும் கலந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் மாறுபடவேண்டும்.

1.உங்களுக்குள் தெளிவாக்குவதற்குத்தான் இதையெல்லாம் உணர்த்துகின்றோம்.
2.நீங்கள் தெளிந்திட வேண்டும்.
3.தெளிந்த உணர்வுகள் தெளிவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்
4.பிறருடைய மனங்களையும் தெளிந்திடும் நிலையாக்க வேண்டும்.

ஏனென்றால் உலகம் அனைத்தும் நலம் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம்.

ஆனால், நன்மை பெறவேண்டுமென்றால் நமக்குள் இருக்கும் உணர்வின் அலைகளை எவ்வாறு பெருக்குகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டே வரும்.

ஆகவே, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.“கோடி… கோடி…” என்று விண்ணின் ஆற்றலைப் பெறுங்கள்.
2.அருள் வழி வாழுங்கள்.
3.மெய் ஞானம் பெறுங்கள்.

என்றுமே அழியாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாகப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து அவர்களைப் போன்றுமெய்ஞானிகளாக நீங்கள் உருவாகுங்கள்.

எமது அருளாசிகள்.

 

Leave a Reply