நல்ல சக்திகளை நமக்குள் சேர்க்கும் முறையும், தீமைகளை அப்புறப்படுத்தும் முறையும்
1. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நமக்குள் மோதச் செய்யவேண்டும்
எப்படி நாம் காற்றடிக்கும் பம்பை வைத்துக் காற்றடிக்கின்றோமோ.., பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது.., “அதிலுள்ள பிஸ்டன்” இழுத்துத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றதோ.., இதைப் போல நம் உயிரின் ஈர்ப்பு அது துடிக்கும் பொழுது.., அதனின் “ஈர்ப்பின் சக்தி” அதிகமாகின்றது.
நாம் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் அழுத்தமாக எண்ணி உயிரின் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.
அப்பொழுது, பூமியின் வடக்குத் திசையில் துருவப் பகுதியில் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்த துருவ நட்சத்திரத்தை எண்ண வேண்டும்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருக்க வேண்டும்.
நம் நினைவுகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி நினைவுகளை அதிலே நிலை நிறுத்தி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியைப் புருவ மத்தி வழியாக நுகர வேண்டும்,
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் இளம் நீல ஒளி அலைகளை உயிர் வழியாக
- நாம் நுகர்ந்து.., சுவாசித்து
- கவர்ந்து..,
- இழுத்து..,
- புருவ மத்தியில் (நமக்குள்) மோதச் செய்ய வேண்டும்.
“இப்படி மோதச் செய்யும் பொழுது” ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும் அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது.
அப்பொழுது நம் உடலிலே “காந்த சக்தி” கூடுகின்றது. இந்த வேகத்துடிப்புடன் நம் சுவாசத்தை மேல் நோக்கி எண்ண வேண்டும்.
- சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்
அவ்வாறு இழுத்துச் சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் “நம் உயிருடன் சுழற்சியாகி” அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன் உயிரின் காந்தத் துடிப்புக்குள் மோதியவுடன்.., “அதனுடைய நுண்ணிய அணுக்கள்” அந்த உணர்வினுடைய நிலைகளைக் கவரச் செய்கின்றது.
புருவ மத்தியிலே நம் உயிர் இருப்பதனாலே நம் கண்ணின் புலனறிவை “ஈஸ்வரா.., என்று புருவ மத்தியில் எண்ணி.., உடலுக்குள் அந்த நினைவைச் செலுத்தும் பொழுது” எந்த பாகத்தில் அந்த நினைவைச் செலுத்துகின்றோமோ அங்கே அந்த உணர்வின் நிலைகள் “ஊடுருவிச் செல்லும்” நிலைகள் இருக்கின்றது.
இந்த அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி உடல் முழுவதற்கும் செல்கின்றது. அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்கின்றது.
இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்.
தீமைகளைக் கண்ட அடுத்த கணம் மேலே சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்தால் உடனடியாக அந்தத் தீமையான உணர்வலைகள் நம் ஈர்ப்பை விட்டுக் கடந்து செல்லும்.
ஒரு மேக்னட் ஈர்க்கும் நிலையை மாற்றிவிட்டால் எப்படி விலக்கிச் செல்கின்றதோ அதைப் போல நமக்குள் தீமை புகும் நிலையை தீமை புகாது தடுக்கும் பாதுகாப்பு அரணாக அமையும்.
இவ்வாறு நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும். “நம் ஆன்மா நலமானால்..,” உயிர், உடல், எண்ணம், உணர்வு, சொல், செயல் அனைத்துமே நலமாகும்.
செய்து பாருங்கள்.