உலக யுத்தத்திலிருந்து “உங்களைக் காக்கும் பாதுகாப்புக் கவசம்”

divine-oneness-people-circle

உலக யுத்தத்திலிருந்து “உங்களைக் காக்கும் பாதுகாப்புக் கவசம்” 

இன்றைய விஞ்ஞான அறிவு மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்குப் பயன்படுகிறது.

ஆனாலும், இதே விஞ்ஞான அறிவு மாற்று மத இன மொழி கொண்ட மக்களை அழிப்பதையும் பகைவர்களின் உணர்வுகளைச் செயலற்றதாக ஆக்குவதையும் அதிகப்படியான நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதே சமயத்தில் இது போன்ற தீமையான நிலைகள் “தம்மையும் பாதிக்கும்” என்ற நிலையில் எண்ணுவது இல்லை.

இன்று இங்கே ஒவ்வொருவரும் கொடி பிடித்துக் கொண்டு தனக்குப் பிடித்தது என்றால் “வாழ்க.., என்றும் பிடிக்கவில்லை என்றால் ஒழிக..,” என்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அவன் அங்கிருந்து ஒரு அணுகுண்டைப் போட்டால் இவர்கள் தப்புவார்களா…? எல்லோரையும் பாதிக்கத்தான் செய்யும்.

ஆக மொத்தம்.., தான் பிறந்த மண் என்ற நிலைகளை மறந்து மதம் இனம் மொழி என்ற நிலைகளில் செயல்பட்டோம் என்றால் நம்மை “ஆண்டவன் காப்பாற்றுவான்” என்று எண்ணுகின்றனர்.

மாற்று மதத்தினர் “பிசாசை வணங்கக்கூடியவர்கள்” என்றும் பிசாசு ஒழிந்துவிட்டால் ஆண்டவனுக்கு நல்லதாகிறது என்கிறார்கள்.

இதனால் பிசாசுத் தன்மை கொண்ட நூறு பேரை அழித்தான் என்றால் ஆண்டவன் அவனுக்கென்று தனி இடத்தைச் சொர்க்கத்தைத் தருகிறான் எனறும் கூறுகின்றனர்.

தீவிரவாதிகள் என்ற நிலையில் ஒரு இனத்தில் மட்டுமல்ல இன்று எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருப்பது இதுதான்.

இந்தத் தீவிரவாதத்தின் தன்மையை ஆண்டவனுக்குச் செய்யும் சேவையாகச் செய்கின்றார்கள்.

ஒருவன் நூறு பேரைக் கொல்வதனால் தவறில்லை. வயிற்றுக்கு உணவோ மற்றவைகளுக்கோ நீ என்ன சுகம் வேண்டுமோ அனுபவித்துக்கொள்.

உனது குடும்பத்திற்குத் தேவையான வசதி வாய்ப்பைக் கொடுத்துவிடுகின்றோம் என்று இப்படித்தான் மூளைச் சலவை செய்துள்ளார்கள்.

எல்லோரும் தீயவர்கள். சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவர்களைக் கொன்றுவிடு. உனக்கு ஆண்டவன் சொர்க்கத்தில் இடம் தருவான் என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

ஒரு மதத்திற்குள் இன்னொரு மதம், இன்னொரு இனம் என்று இருந்தால் அவன் ஆண்டவனுக்கு விரோதமாகச் செய்கிறான். அதனால் அவனைக் கொல்வதனால் தவறில்லை என்ற நிலை உலகம் முழுவதற்கும் பரவியுள்ளது.

இது வளர்ந்து வளர்ந்து இன்று பழிதீர்க்கும் உணர்வுகள் தான் சாதாரண மனிதன் உடலிலும் உருவாகிவிட்டது. எதிரி என்ற நிலைகளில் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வுகள்தான் வருகின்றது.

யானை புலி போன்ற மிருகங்களிடமிருந்து தப்பிப்பதற்குச் சில உபாயங்கள் உண்டு. ஆனால், நாட்டிற்குள் இது போன்ற மோசமான நிலைகள் இருக்கின்றன.

இதிலிருந்து தப்புவது எப்படி?

காட்டிற்குள் உள்ளவைகளைக் கட்டுப்படுத்த முடியும். நாட்டிற்குள் உள்ளவைகளைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது. நீங்கள் நன்மையே செய்தாலும் உங்களுக்கு என்ன இடைஞ்சல் செய்ய வேண்டுமோ அதைச் செய்தேதான் ஆகும்.

நீங்கள் ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள். அவர்.., “சிறிது நிமிர்ந்தவுடனே (முன்னேறியவுடன்).., நீங்கள் அவரிடம் தாழ்ந்துதான் போகவேண்டும்”.

இத்தகைய நிலைகள்தான் காற்று மண்டலத்தில் அதிகமாகப் படர்ந்து பரவி இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

உலகில் அனைத்து நிலைகளிலும் அது வளர்ந்து வந்திருக்கின்றது. இதிலிருந்தெல்லாம் தப்ப நீங்கள் வாழும் இடத்தில் கூட்டுத் தியானத்தை வலுப்படுத்துங்கள்.

“அனைவரும் ஒன்று சேர்ந்து” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து அந்த அருள் ஒளியின் சுடரை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் வசிக்கும்
1.வீடு முழுவதும் படரவேண்டும்,
2.தெரு முழுவதும் படரவேண்டும்,
3.ஊர் முழுவதும் படரவேண்டும்,
4.இந்த உலகம் முழுவதும் படரவேண்டும் என்று நீங்கள் ஏகோபித்த நிலையில் அந்த மூச்சலைகளைப் பரப்புங்கள்.

“கூட்டமைப்பாகப் பரவச் செய்யும்” அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும்.

அதன் வழியில் நாம் வாழும் இடங்களில் இத்தகையை தீமைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

 

1.”உங்கள் எண்ணம்” உங்களைக் காக்கட்டும்.
2.”உங்கள் மூச்சலைகள்” இந்த உலகை அமைதி பெறச் செய்யும் சக்தியாக மலரட்டும்.

Leave a Reply