
“பிறர் நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணினால் அது நமக்குள் நன்மையையே உருவாக்கும்
மெய் ஞானிகள் தமது மனித வாழ்க்கைக் காலத்தில் பேரண்டத்தினுடைய சூட்சம இயக்கங்களை அறிந்துணர்ந்தார்கள்.
1.இந்த மனித வாழ்க்கையில் தன்னை அறியாது வரும் தீமையான நிலைகளிலிருந்தும் தம்மைக் காத்து
2.உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளி பெறச் செய்யும் நிலையினையும் பெற்றனர்.
அந்த மெய் ஞானிகள் பேரண்டத்தின் பெரும் உண்மையினைக் கண்டுணர்ந்து உணர்வின் ஆற்றலைத் தம்முள் வளர்த்து வெளிப்படுத்தியது எல்லாம் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமியெங்கும் படர்ந்து பரவியிருக்கின்றன.
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அவர்கள் நமக்குக் காண்பித்த அருள் வழிகளை நாம் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியில் படர்ந்துள்ள அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகளை நாம் பெற முடியும்.
நீங்கள் அனைவரும் மெய் ஞானிகளின் அருள் ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக யாம் உயர்ந்த உண்மைகளை உங்களுக்கு உபதேசித்து வருகிறோம்.
1.அதனைக் கேட்கும் நீங்கள் அந்தத் தத்துவங்களை உங்களுடைய அகத்தில் இருத்தி
2.அதனைத் திரும்பத் திரும்ப எண்ணுவீர்கள் என்றால் உங்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மை பெருகுகின்றது.
அதன் வழியில் நீங்கள் உயர்ந்த செயல்களைச் செய்யும் பொழுது அதனின் உணர்வுகள் உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது.
உதாரணமாக… நாம் கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பொருளையும் தரம் பார்த்துத் தான் வாங்குகின்றோம்.
இருந்தாலும் வீடு வந்து சேர்ந்த பின் அந்தப் பொருள்களை எடுத்துப் பார்க்கும் பொழுது அவைகளில் ஒன்றிரண்டு பொருள்கள் உபயோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப் போயிருப்பதை பார்த்து “வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா…?”
1.கெட்டதைத் தூக்கி எறிந்துவிட்டு இனி அடுத்து எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
2.ஆகாததைத் தூக்கிப் போட்டுவிட்டு இனி அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.
இந்த மனிதன் முழுமை அடைய வேண்டுமென்றால் “இந்த உடலில் எவ்வளவு குணச் செல்வங்கள் இருந்தாலும்… வேதனை என்ற நஞ்சான உணர்வானால் குணச் செல்வம் அழிந்து விடுகின்றது…”
1.வேதனையைக் கேட்டறியும் நிலையில் அது நம்முள் வளர்ந்து
2.நமது பொருள் செல்வத்தையும் இழக்கச் செய்யும் என்பதை நாம் அறிய வேண்டும்.
அழியாப் பேரின்பப் பெரு வாழ்வு என்ற அருள் ஞானியின் உணர்வை நாம் கவர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும்.
பேரின்பப் பெரு வாழ்வை எண்ணி எடுக்கின்ற உணர்வுகளால் நம்முடைய சொல் செயல் புனிதம் பெறும். நம்மைப் பார்ப்பவர் அனைவரும் மகிழ்ச்சி பெறும் நிலை உண்டாகும். அறியாமை என்ற இருள் அகன்று அனைத்தும் அறியும் ஞானம் உருவாகும்.
சொல்லில் பொருள் இருப்பது போன்று நமது செயலில் நன்மைகள் இருக்க வேண்டும்.
1.நாமும் நமது சமுதாயமும் “ஒரே இனம்” என்ற நிலையில்
2.நமது நலத்தையும்.. பொது நலத்தையும் ஒன்றிணைப்பதாக நமது செயல்கள் இருக்க வேண்டும்.
3.ஏனெனில் பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
4.அதனின் உணர்வின் சத்து உங்களிடத்தில் விளைந்து நன்மையையே உங்களிடத்தில் விளையச் செய்யும்.
இவ்வாறு இதனின் உண்மைகளை அறிந்து அருள் ஞானிகள் வகுத்துக் கொடுத்த அறங்களை கடைப்பிடித்து அதனின் வழியில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் அனைவருக்கும் எமது ஆசிகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.