துன்பம் வரும் நேரத்திலே யாம் (ஞானகுரு) சொன்னதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்

துன்பம் வரும் நேரத்திலே யாம் (ஞானகுரு) சொன்னதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்

 

உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் துன்பத்தைத் துடைக்கத் தான் அருள் ஞானிகளுடைய சக்திகளை வாக்காகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

திட்டியவர்களையோ குறை சொல்பவர்களையோ நீங்கள் எண்ணும் பொழுது துன்பங்கள் எப்படி உண்டாகின்றதோ… அந்தத் துன்பம் உண்டாகும் நேரத்திலே யாம் (ஞானகுரு) சொன்னதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.உங்கள் துன்பங்கள் உங்களை விட்டு அகலும்.

ஏனென்றால் வான்மீகியோ வியாசரோ “எல்லாம் தெரிந்து” அவர்கள் அந்த நிலை பெறவில்லை.
1.சமைத்து வைத்தது… “சப்தரிஷி மண்டலத்தில் இருக்கக்கூடிய மெய் ஞானிகள்”
2.அந்த உணர்வின் மணம் அங்கிருந்து வெளிப்பட்டது.
3.வெளிப்பட்டதை அந்த சந்தர்ப்பம் யாரெல்லாம் எடுக்கின்றார்களோ அவர்கள் ஞானியாகின்றார்கள்.

அது போன்று தான் இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கும்…! எண்ணி எடுக்கப்படும் பொழுது நீங்களும் அந்த ஞானியாக முடியும் அத்தகைய நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் எம்முடைய ஆசை…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவேன்
2.என் பேச்சால் மூச்சா’ல் உலகம் நன்மை பெறச் செய்வேன்
3.இந்த உடலை விட்டுச் சென்றால் விண்ணின் நிலைகளை நான் அடைவேன்.
4.எந்த மகரிஷி வழி காட்டினானோ அவன் வழியிலே செல்வேன்
5.மெய் வழியிலே நான் செல்வேன்… மெய் ஒளி பெறுவேன்…!

உயிர் விண்ணிலே ஒளியாகத் தோன்றியது… பூமிக்குள் விஜயம் செய்து உடல் பெற்றது… மனித உடல் பெற்ற நிலையில்
1.உணர்வுகள் அனைத்தையும் “உயிரைப் போன்ற ஒளியாக மாற்றி விண் செல்வேன்…” என்ற
2.இந்த உணர்வுகளை உங்களுக்குள் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

எது நிறைவேற வேண்டும் என்று நான் (ஞானகுரு) ஆசைப்பட்டேனோ அதற்காக வேண்டி குருநாதர் காட்டிய வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உங்கள் உடலை ஆலயம் என்று மதிக்கின்றேன்… உங்களுக்குள் இருக்கக்கூடிய குணங்களைத் தெய்வங்களாக மதிக்கின்றேன்…!

நீங்களும் இதே போன்று உயிரைக் கடவுளாக வைத்து உடலை ஆலயமாக மதித்துப் பிறரிடமிருந்து தீய உணர்வுகள் வந்தாலும்… அவர்கள் தீமையாகப் பேசினாலும்… உங்கள் உடலுக்குள் சேராதபடி மாற்றிக் கொள்ளுங்கள்.

பிறருடைய உணர்வுகளை நாம் சேர்க்க வேண்டியது இல்லை. உயிரான ஈசனிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிப் பிற உணர்வுகள் உள்ளே புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி “அவரின் துணை கொண்டு”
2.மெய் அறிவின் ஆற்றலைப் பெறும் தகுதியின் வித்தை செம்மையானபடி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துன்பப்படும் நேரங்களில் எல்லாம் “மகரிஷிகளின் அருளைப் பெறுவேன்…” என்று எண்ணுங்கள்… தீமைகள் புகாது தடுக்க இது உதவும்…!

மனித வாழ்க்கையில் எவ்வளவு கௌரவமாக வாழ்ந்தாலும் உடலை விட்டு உயிர் சென்று விட்டால்… அடுத்து இந்த உடலைத் தூக்கி எறியத்தான் செய்கின்றார்கள்.

எவ்வளவு கோடிப் பணம் சம்பாதித்தாலும் அவர்களுக்கும் இந்த நிலைதான்…! அவர் இறந்த பின் செல்வத்தை மற்றவர்கள் எப்படிப் பங்கிட்டு கொள்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படிச் சாடிக் கொள்கிறார்கள்…? எப்படி வெறுக்கும் நிலை வருகிறது…? என்பதையும் பார்க்கலாம்.

ஆகவே அது போன்ற நிலையில் சிக்காதபடி இந்த மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்களைப் பார்க்கும் போது அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அவர்களுக்குள் வர வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆகவே அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று உங்கள் மூதாதையரின் உயிரான்மாக்கள் விண் சென்று… விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதியை நீங்கள் பெற்று… இருளை நீக்கி ஒளியின் தன்மையாக “நீங்கள் விண் செல்லும் நிலைக்கே இதை உபதேசிப்பது…”

நீங்கள் வளர்ச்சியாவது போன்று உங்கள் குடும்பத்தில் குழந்தைகளையும் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகளை வளர்த்திடும் சக்தியாக பிஞ்சு உள்ளங்களிலும் வேரூன்றி வளரட்டும்.

சூரியனின் ஈர்ப்பில் கோள்கள் விளைவது போன்று
1.குழந்தைகள் உங்களுடன் இணைந்து செயல்பட்டுப் பிரகாசிக்கும் சொல் தொடராக அவர்கள் வெளிப்படுத்தி
2.வீட்டுக்குள் நீங்கள் தெய்வமாகவும் வீட்டிற்குள் சுடர் விளக்காகவும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு இருளை நீக்கிடும் நல்ல உணர்வாகப் படர வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply