என்னிடம் (ஞானகுரு) வாக்குகளை வேண்டிய சரியான முறை

என்னிடம் (ஞானகுரு) வாக்குகளை வேண்டிய சரியான முறை

 

1.என்னிடம் (ஞானகுரு) ஆசீர்வாதம் வாங்க விரும்புவோர் உடல் நலம் பெற வேண்டும் “எனக்கு அருளாசி கொடுங்கள்..”
2.என் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் “அந்த அருள் பெற வேண்டும்” என்று கேட்டுப் பழகுங்கள்.

அருள் வழியில் பெற வேண்டிதைக் கேட்டு நீங்கள் வேண்டி வந்தால் அது உங்களுக்குள் பதிவாகும். “யாம் கொடுக்கும் வாக்கு” உங்களுக்குள் அது சீராக இயங்கும்.

குடும்பத்தில் திருமணமோ மற்ற நல்ல நிகழ்ச்சிகளோ நடக்க வேண்டும் என்று அதற்கு அருளாசி வேண்டும் என்று கேட்டால்… அதன் வழியில் நடக்கும் என்று கொடுத்தால்… அதை நீங்கள் பதிவாக்கினால்… சுப நிகழ்ச்சிகள் நிச்சயம் நடக்கும்.

வரன் வரவில்லை… ஒருவரும் கிடைக்கவில்லை…! வந்து பார்த்துவிட்டுச் சென்று விடுகிறார்கள்…! என்று அப்படி எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் ஒரு சிலர்
1.நான் என்ன செய்தாலும் அது நடக்கவே மாட்டேன் என்கிறது…! என்று எம்மிடம் இப்படிக் கேட்டு விடுகின்றார்கள்.
2.அப்பொழுது நான் எதைச் சொல்வது…?
3.நடக்காது… கிடைக்காது…! என்று சொல்வதா…?
4.நடக்கவே மாட்டேன் என்கிறது என்று அவர்கள் கேட்கும் பொழுது “நான் நடக்கும் என்று சொன்னால்…”
6.அது நடக்கும்…! என்று அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்…?

என் குழந்தைகளுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும்… அவர்கள் எதிர்காலம் சிறந்ததாக இருக்க வேண்டும். சீக்கிரம் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இப்படி வேண்டினால்… யாம் அதன்படி வாக்கு கொடுத்தால் அது செயலாகும். ஏனென்றால் இப்படித்தான் கேட்க வேண்டும்.

நான் வெளியிலே கொடுத்திருக்கக்கூடிய கடன்… பாக்கி பணம் வர வேண்டும். அவர்கள் அதைக் திருப்பி கொடுக்கக்கூடிய சக்தியாக அவர்கள் செய்யும் தொழிலில் வருமானம் வர வேண்டும். எனக்கு அந்த அருளாசி வேண்டும்.
1.நான் பொருளைக் கொடுத்தோர் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்
2.எனக்கு அவர்கள் பணத்தைக் கொடுக்க வேண்டும் அந்த அருள் வேண்டும் என்று என்னிடம் ஆசி வாங்கினால்
3.அதன் வழி யாம் நடக்கும் என்று சொல்ல முடியும்.

அதே பிரகாரம் நீங்கள் வழி நடந்தால் வர வேண்டிய பணம் சரியாக வந்து சேரும் வாழ்க்கை எதிர்காலமும் நலம் பெற இது உதவும்.

அருள் ஆசியின் தன்மைகள் நாம் எடுத்துக் கொண்ட தவத்தின் தன்மையால் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவான பின்…
1.நீங்கள் அதை எண்ணி வளர்த்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம்… உங்கள் நினைவு… உங்களைக் காக்கும்
3.ஆகவே சீராகப் பயன்படுத்தினால் யாம் கொடுக்கக் கூடிய வாக்கின் பலிதம் சரியாக இருக்கும்.

ஆனால் என்னிடம் கேட்கும் போது கஷ்டமாக இருக்கின்றது… நோய் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… பல காலம் பல டாக்டர்களைப் பார்த்து விட்டேன்…! என்று இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் “நான் எதைச் சொல்வது…?”

என் உடலில் உள்ள சர்வ பிணிகளும் நீங்க வேண்டும் எனக்கு அந்த அருள் ஒளி பெற வேண்டும் நான் உடல் நலம் பெற வேண்டும் அந்த அருள் ஆசி வேண்டும் என்று சொன்னால் “கேட்போர் யாரும் இல்லை…”

ஆகவே அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து நீங்கள் விடுபடுங்கள். குருவிடம் இருந்து பெற வேண்டிய நல்ல வாக்கினை நீங்கள் இழந்து விடக்கூடாது.

ஏனென்றால் எதிர்மறையான எண்ணம் கொண்டு நீங்கள் என்னிடம் கேட்டால்… நீங்கள் சொல்வதை இடைமறித்து நான் வாக்கினைக் கொடுத்தாலும் அது பலிதம் ஆவது சிரமமாகி விடுகின்றது.

நீங்கள் எண்ணிய உணர்வுக்கும் நான் சொல்வதற்கும் எதிர்மறையாகி விடுகின்றது. ஆக மீண்டும் அந்த துன்பத்தைத் தான் நுகருகின்றீர்கள். ஆகவே அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

ஒரு விஷச் செடியின் அருகிலே நல்ல மணம் சென்றால் அது விடுவதில்லை. அது போன்று
1.எந்தக் குணத்தின் தன்மை முன்னணியில் வைத்திருக்கின்றீர்களோ
2.அந்த உணர்வு… நான் கொடுக்கக்கூடிய நல்ல வாக்குகளை ஏற்றுக் கொள்ள விடாதபடி உங்களைத் தடைப்படுத்தி விடுகின்றது.

இதை எல்லாம் நீங்கள் மாற்றிப் பழகுதல் வேண்டும்.

எங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று கேட்டால் பரவாயில்லை.
1.துன்பம் போகவே மாட்டேன் என்கிறது
2.பல தொல்லைகள் வந்து கொண்டிருக்கின்றது
3.நான் என்ன செய்தாலும் ஒன்று முடியவில்லை…” என்று கேட்டால்
4.நான் ஒன்றும் சொல்ல முடியாது.

இதை மாற்றி அமையுங்கள்…! என்று தான் உங்களிடம் சொல்கின்றேன். எப்பொழுது உங்கள் எண்ணம் மாறுகின்றதோ… நல்லதைக் கேட்டு எம்மிடம் ஆசி பெறுகின்றீர்களோ… நாம் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் பலிதம் ஆகும்.

நான் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை மாற்றிவிட்டு… எதை நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ… அது பதிவாகின்றது. அதன் வழி உங்கள் எண்ணம் உங்கள் நினைவு உங்கள் செயல் அனைத்துமே நல்லவையாக இருக்கும்.

செயல்படுத்திப் பாருங்கள்.

Leave a Reply