மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் – ஞானகுரு

மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் – ஞானகுரு

 

காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ உணர்வுகளை எண்ணத்தால் நாம் எண்ணி எடுத்தாலும் அதிலே அறியாது வரும் தீமைகளைத் தடுக்க வேண்டும் அல்லவா.

அதற்காகத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம்
1.மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).
2.அதைச் சாதாரணமாக எண்ண வேண்டாம்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து
4.”கொஞ்சம்…” நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும்.

கோபித்தான்… துன்பப்பட்டான்… கஷ்டப்பட்டான்.. என்ற உணர்வு வரப்படும் போது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.

ஆனால் முதலில் கண்ணின் நினைவைக் கோபித்தவர் மேல் அல்லது துன்பப்படுவோர் மீது வைத்தோம். அதை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கினோம். அவர் உடலிலிருந்து வந்த கோபமான உணர்வுகள் அல்லது வேதனையான உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறுகின்றது.

நுகர்ந்து (சுவாசித்து) உயிரில் பட்டவுடனே உணர்ச்சிகள் எழும்புகிறது. விஷ்ணு என்ன செய்கிறான்…? வரம் கொடுக்கின்றான். ஒலி எழுப்புகிறது. உடல் முழுவதும் அந்த உணர்ச்சிகள் பரவுகிறது.

அவன் கோபமாகப் பேசியதை…
1.ஒன்று – நாம் கொஞ்சம் வலு கொண்டவராக இருந்தால் சண்டைக்குப் போவோம்.
2.இரண்டு – நாம் வலு குறைவாக இருந்தால் கிடு… கிடு… என்று பயமாகி இப்படிப் பேசுகிறானே.. என்று வேதனைப்படுகின்றோம்.

அதற்கடுத்து ஏதாவது அவனிடம் வாய் திறக்கின்றோமா..? நமக்கு வேதனை என்ற உணர்வு வருகின்றது. அந்தக் கார உணர்வுடன் வேதனை உணர்வைச் சேர்த்தவுடனே என்ன செய்யும்…?

மிளகாயை எடுத்து அரைத்தால் கையில் எரிச்சல் ஆவது போல் நம் உடலில் எரிச்சல் ஆகின்றது. ஆகவே அத்தகைய தீமைகள் புகாது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்ல வேண்டும்.
1.உயிரான ஈசனிடம் நாம் வேண்ட வேண்டும்…
2.அவனிடம் கேளுங்கள்… அவனிடம் தான் கேட்க வேண்டும்
3.ஏனென்றால் எல்லாவற்றையும் அவன் தான் நமக்குள் உருவாக்குகின்றான்.
4.இத்தனையும் தெரிய வைப்பது அவன் தானே…!

ஆனால் நாம் ஈசனை எங்கேயோ தேடிக் கொண்டிருக்கின்றோம்.

உருவாக்குவது அவனே தான். நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது எல்லாவற்றையும் இயக்கிக் காட்டுவது அவனே தான். நம்மை ஆண்டு கொண்டிருப்பது உயிர் தான் என்கிற வகையில் நாம் மறந்துவிடுகின்றோம்.

அழகான துணிகளைப் போடுகின்றோம்… நம்மை அழகுபடுத்துகின்றோம். இருந்தாலும் யாராவது ஒரு கடும் சொல் சொல்லிவிட்டால் நம்மால் தாங்க முடியவில்லை.

உயிர் வெளியே போய்விட்டால் என்ன செய்கிறது…? கோடீஸ்வரனின் மகனாக இருந்தாலும் உடல் சவமாகி விட்டால் சீக்கிரம் தள்ளி விடப்பா…! என்று தானே நாம் சொல்கிறோம்.

சொத்து எல்லாம் இருந்து என்ன செய்வது…? அவனால் அதை அனுபவிக்க முடிகிறதா…? இல்லையே…!

இது எல்லாருக்கும் தெரிகிறது. தெரிந்தாலும்
1.இந்த உடலில் எடுத்து நாம் வளர்த்துக் கொண்ட வேதனையான உணர்வு… அதற்குச் சாப்பாடு தேவை.
2.அந்த உணர்ச்சிகள் உந்தி நம்மைச் சிந்திக்க விடாதபடி செய்கிறது.

ஆகவே… பிறர் செய்யும் தீமையான எண்ணங்களும் குற்றச் செயல்களும் நம் உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? அந்தத் தீமையின் உணர்வாக அதனுடைய வலிமை கொண்டு இயக்க ஆரம்பித்துவிடும்.

நம் நல்ல குணம் வேலை செய்யுமோ…? அது செயலற்றுப் போகும். இப்படி நாம் நல்லதைச் செய்து வந்தாலும் தீமைகள் உடலுக்குள் வருகிறது. வெளியிலிருந்து தான் அது வருகிறது.

அதனால் தான் இராமாயணத்தில் வாலியை இராமன் குகைக்குள் போட்டு மூடி விடுவதாகக் காட்டுகிறார்கள். அதாவது “தீமைகள் நமக்குள் உட்புகாதபடி தடுக்க வேண்டும்…” என்று உணர்த்துகிறார்கள்.
1.குகைக்குள் வாலி இருக்கின்றான்.
2.இராமன் அம்பை எய்து ஒரு கல்லைப் போட்டு அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான்.
3.ஆனால் அவனைக் கொல்லவில்லை.
4.அவன் வீரியத்தைத் தடைபடுத்துகிறான்…! என்று காட்டுகின்றார்கள்..

தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அதைத் தடுக்க வேண்டும்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

Leave a Reply