துன்புறுத்தும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்த்தவர்களே மகான்கள்…!

துன்புறுத்தும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்த்தவர்களே மகான்கள்…!

 

காந்திஜியின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகின்றோம். மற்றவர்கள் அடிமைத்தனத்திலிருந்தும் பிறிதொரு தீமையின் விளைவுகளிலிருந்து நம்மை எல்லாம் மீட்டிய மகான் இந்த நாட்டிலே ஜெனித்த நாள் தான் அது.

ஞானிகள் கண்ட உணர்வினைத் தன்னிலே அவர் வளர்த்துக் கொண்டவர். சாந்தம் என்ற நிலைகள் கொண்டு பகைமையற்ற உணர்வுகளை வளர்த்து… பகைமைகளைத் தவிர்த்துத் தீமையில் இருந்து விடுபட்டு அதன் வழி கொண்டே சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர் மகாத்மா காந்திஜி என்பதனை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அவர் வாழ்ந்த காலங்களில்
1.தன் உடலைப் பற்றி எண்ணாது
2.தனக்குள் வரும் சுகத்தை எண்ணாது
3.நமது நாடு… நமது மக்கள்… நமது என்றே… தன்னுடன் அரவணைத்து வாழும் நிலையாக
4.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளும் அந்த அருள் சக்தியை
5.வெறுமனே சொல்லால் அல்ல… செயலாலேயே அதைச் செயலாக்கிக் காட்டினார்.

உடலை விட்டு உயிர் பிரியும் போது கூட…
1.தன்னை ஒருவன் கொலை செய்தான் என்று எண்ணவில்லை
2.அந்த நேரத்திலும் அவனை எதிரியாகக் கருதவில்லை
3.தீயவன் என்றும் அவனைச் சொல்லவில்லை
4.அவனை அறியாது இயக்கும் தீய விளைவுகளிலிருந்து அவன் காக்கப்பட வேண்டும்
5.அவன் காப்பாற்றப்பட வேண்டும் என்று தான் ஜீவன் பிரியும் பொழுதும்
6.அத்தகைய நினைவு கொண்டுதான் தன் செயலாக்கங்களை வெளிப்படுத்தினார்.

அவர் எண்ணி வெளிப்படுத்திய அந்த உயர்ந்த உணர்வலைகள் அனைத்தும் நமக்கு முன் பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

மனிதனுக்குள் செயல்படும் உணர்வுகள் அனைத்தும் பண்புடன் இயக்கப்பட வேண்டும். சகோதர உணர்வுகள் உருப்பெற வேண்டும். ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ வேண்டும். மனிதர்கள் என்ற பண்பு கொண்டு இயங்க வேண்டும் என்று தான் மகான்கள் அனைவரும் கூறியுள்ளார்கள்.

அந்த மகான்கள் காட்டிய வழிப்படி நாம் நடந்தால் நாமும் உயர்ந்த நிலையை அடையலாம். உடலுக்குப் பின் பேரானந்த நிலையான அழியா ஒளிச் சரீரமும் பெறலாம்.

Leave a Reply