ஆண்டவனைத் தேடிக் கொண்டே தான் உள்ளார்கள்…! ஈஸ்வரபட்டர்

ஆண்டவனைத் தேடிக் கொண்டே தான் உள்ளார்கள்…! ஈஸ்வரபட்டர்

1.அமிலத்தின் கூட்டால் சிவ பிம்பம் (உடல்கள்) பெற்று
2.சக்தி ஒளி ஈர்ப்பில் ஜீவன் கொண்ட ஜீவத் துடிப்பு அனைத்துமே
3.ஆண்டவனுக்குப் பொதுவானது தான்.

ஆண்டவனின் சக்தி என்று ஆண்டவனை வேண்டி… இறைஞ்சிப் பணிந்து பல பாடல்களைப் பாடி… ஆண்டவனைப் பெண்ணாகவும் ஆணாகவும் ஒளியாகவும் தாயாகவும் சகோதரர்களாகவும் அவரவர்கள் வழி வந்த மதக் கோட்பாட்டின் முறைப்படியெல்லாம் இறைஞ்சித் துதி பாடுகின்றனர்.

இந்த ஆறறிவு படைத்த மனித ஜெந்துக்களுக்கு மட்டும் தான் ஆண்டவன் சொந்தமா…?

1.சிறு அணுவும் “அவனன்றி அசையாது…!” என்று உணர்த்துபவனும் மனிதன் தான்.
2.ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அவ்வணுவையே உயிராகக் கொண்ட ஆடு மாடுகளையும்…
3.தன்னை ஒத்த மனித இனத்தையே கூட நரபலி தருபவனும்
4.ஆண்டவனுக்குச் சமர்ப்பித்துத் தன் வேண்டுதலை நிவர்த்திக்கடன் செய்து ஆண்டவனை வணங்குபவனும் இதே மனிதன் தான்…!

ஆடு மாடுகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அந்த ஆண்டவன் சொந்தமில்லையா…?
1.மனிதனுக்கு மட்டும் தான் அந்த ஆண்டவன் சொந்தம் என்றால்
2.மற்ற ஜீவராசிகளும் ஆண்டவன் படைப்பே…! என்று துதிபாடும் அந்த ஆண்டவன் எங்குள்ளான்…?

தவறான வாழ்க்கை நெறியில் உள்ளவனும் வாழ்கின்றான். நல் ஒழுக்கக் கோட்பாட்டில் உள்ளவனும் வாழ்கின்றான்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஆண்டவன் உள்ளான் என்று உணர்த்தும் எல்லா மதத்தினரும் தன் சுவை உணவிற்காகத் தன்னை ஒத்த ஜீவ பிராணிகளை உண்டு தான் வாழ்கின்றார்கள்.

இவனுக்குச் சொந்தமான அந்த ஆண்டவன் வந்து மற்ற ஜீவ பிராணிகளைப் பலியிட்டு உண்ணாதே…! என்று உணர்த்தியிருக்கலாம். அஜ்ஜீவன் பிரியும் நேரத்தில்… அதன் ஓலத்தைக் கேட்டு… ஏன் அந்த ஆண்டவன் வந்து அவற்றைக் காப்பாற்றியிருக்கக் கூடாது..?

ஆண்டவனைச் சொந்தம் பாராட்டி ஆண்டவனைத் துதித்து வணங்குபவனுக்கு அந்த ஆண்டவன் சொந்தம் என்றால் மற்ற பிராணிகளுக்கு ஆண்டவனின் சக்தி சொந்தமில்லையா…?

அப்படிப்பட்ட ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…?

1.தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்…
2.நீரிலும் இருப்பான் நெருப்பிலும் இருப்பான்…
3.நினைத்த நினைப்பிலும் இருப்பான்… என்னும் ஆண்டவன்
4.எப்படி மனிதனுக்கு மட்டும் சொந்தமாகின்றான்…?

மதத்தவர் என்ற அடிப்படையில் குறிப்பிடுவதாக எண்ணி யாரையும் சாடுவதாக நினைக்க வேண்டாம்..! உள்ள உண்மையை உணர்த்துகின்றோம்.

எல்லா மதங்களிலுமே கடவுள் அன்பானவன் என்று சொன்னாலும் பிற பிராணிகளை அடித்து உணவாக உட்கொள்ளும் நிலை தான் உள்ளது.

ஆண்டவனின் செயலை இந்த மாமிசம் புசிப்பவர்கள் செய்யும் முறையில் மட்டும் குற்றம் காணவில்லை. மாமிசம் புசிக்காதவரின் செயல் என்ன…?

1.ஆண்டவனைப் பக்தித் துதி பாடி பஜனைகள் பல செய்து
2.ஆண்டவனாகக் கோவிலில் உள்ள கர்ப்பச் சிலைக்கு நீராலும் பாலாலும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் ஆராதனை செய்து
3.சுத்தமாக ஆச்சாரமுடன் கோடி அர்ச்சனைகளையும் பல கோடிப் புஷ்பங்களைச் சாத்தி வணங்கி
4.அந்த ஆண்டவனின் அருள் பரிபூரணமாகப் பெற்றுவிட்ட உவகையுடன் வருபவனுக்கு
5.அவன் வரும் வழியில் அவன் ஜாதிப் பிணைப்பு என்ற இனத்தவரன்றி
6.மற்றவரின் உடலோ சில கழிவுகளோ தன் மேல் பட்டுவிட்டாலும் உடனே பெரும் கோபம் கொண்டு
7.அந்த ஆண்டவனுக்குத் தான் செய்த பூஜை முறையிலேயே அபசாரம் நடந்து விட்டதாக உள்ளம் உலைந்து…
8.நீ வணங்கும் ஆண்டவன் என்பவன் யார்…? அந்த ஆண்டவனுக்கு உள்ள சக்தி யாவை…? என்று வினவினாலும்
9.உடனே கோப அலையைத் தன்னுள் ஏற்றிப் பெரிய தவறு நடந்து விட்டதாகச் செயல்படும் ஒரு சாராரும் உள்ளனர்.

என் (ஈஸ்வரபட்டர்) வினாவில் ஆண்டவன் யார் என்பது யாரென்றே புரியவில்லை.
1.ஆண்டவனின் உண்மை நிலை உணராதவன்
2.எங்கோ காணத் துடிக்கின்றான் அந்த ஆண்டவனை.

மரக்கறியும் அணு தான்.. மற்ற பிராணிகளின் உடலும் அணு தான்…! எல்லாமே அணுவாக உள்ள பொழுது… “அணுவின் அணுவாக” அக்காந்த மின் அலையின் ஜீவ சக்தியில் கலந்துள்ள அனைத்துமே ஆண்டவனின் சக்தி தான்.

1.ஒன்றின் துணையுடன் ஒன்று வாழ
2.ஒன்றை அழித்துத்தான் மற்றொன்று வாழ முடிகின்றது.
3.ஆவியாகி அமிலமாகி ஜீவனாகிப் பிம்பமாகி..
4.பிம்பம் ஆவியாகி அமிலமாகி ஜீவனாகி பிம்பமாகி ஆவியாகி…
5.மீண்டும் மீண்டும் சுழன்று ஓடும் சுழற்சி கதியின் சக்திக் கூட்டிற்கு
6.எல்லாமில் எல்லாமாக நிறைந்துள்ள ஆண்டவனின் சக்தி பிறந்து… வளர்ந்து… மடிந்து… பிறந்து… சுழன்று கொண்டே உள்ளது.

Leave a Reply