உபதேசக் கருத்துக்களைத் திரும்பத் திரும்ப எண்ணி வலு கூட்டிக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன…?

உபதேசக் கருத்துக்களைத் திரும்பத் திரும்ப எண்ணி வலு கூட்டிக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன…?

 

நம்முடன் வாழ்க்கையில் எத்தனையோ பேர் பழகுகின்றனர். அவர்களைப் பற்றி நாம் கேட்டறிகின்றோம். அவர் உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு.

அத்தகையவர்கள் சந்தர்ப்பத்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் அந்தச் செய்தியைக் கேட்டறிந்தவுடன் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்..?

சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் ஒரு இரண்டு நிமிடமாவது வலு சேர்த்துக் கொண்டு
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து பெரு வீடு பெரு நிலை அடைந்து
3.அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
4.அந்த ஆன்மாக்களை விண் செலுத்த… இந்த முறைப்படி செய்து பழக வேண்டும்.

ஏனென்றால் அவரின் உடலின் உணர்வுகள் நாம் கேட்டறிந்து நமக்குள் அதிகமாக இருப்பின் அந்த ஆன்மா நமக்குள் வந்து விடும். அப்படி ஆகாதபடி தடுக்க வேண்டும்.

அல்லது அந்த ஆன்மா பிரிந்து போன பின் நாம் இந்த உணர்வின் தன்மை மற்றவர்கள் சந்தித்தோர் மூலம் கேட்டறிந்தாலும் அவரின் உடல் உணர்வுகள் நுகர்ந்தறிந்தால் அவர் உடலில் இருந்த நோயின் தன்மையை நமக்குள் உருவாக்கும் தன்மை வந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட
1.நண்பர்களானாலும் மற்றவர்களானாலும் எந்த உடலிலிருந்து ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
3.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

இத்தகைய நிலையை நாம் எண்ணினால் நம் ஆன்மாவில் அத்தகைய வளர்ச்சி பெறும் தன்மைகள் தடைப்படுகின்றது. உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் அனைத்தும் அங்கே சென்று விடுகின்றது.

உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது. அதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து கொள்கிறது.
1.ஞானிகள் கண்டுணர்ந்த அருள் வழிப்படி நாம் அந்தக் கணமே ஒளிக் கடலிலே தான் கலக்கச் செய்ய வேண்டுமே தவிர
2.இங்கே ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றிலேயோ குளத்திலேயோ கடலிலேயோ சுட்ட சாம்பலைக் கரைத்து அதிலே கரைந்து போவதில்லை.

ஆகவே இதனை நாம் தெளிவாக்கி அனைவருக்கும் இத்தகைய உண்மைகளைக் கூறுதல் வேண்டும்.

கூட்டுத் தியான அமைப்புகளில் யாம் (ஞானகுரு) வெளியிட்ட நூல்களையும் ஒலி உபதேசங்களையும் ஒரு அரை மணி நேரமாவது அந்த உணர்வுகளை அங்கே கேட்கும்படி செய்து அந்த அலைகளைப் பரவச் செய்யுங்கள்.

அதன் பின் இதன் வழிப்படி தியானத்தை வழி நடத்துங்கள். அனைவருக்கும் இந்த அருள் சக்தி கிடைக்கும்படி செய்யுங்கள். உங்கள் குடும்பத்திலேயும் இந்த அருள் ஞான கருத்துக்களைப் பரவ முயற்சி எடுங்கள். ஒரு அரை மணி நேரமாவது கேட்கச் செய்யுங்கள்.

அதை ஏங்கிப் பெறச் செய்து உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஊட்டுங்கள்.

1.உபதேசத்தைப் படித்து விட்டோ அல்லது கேட்டு விட்டோ பேசாமல் விட்டு விடக் கூடாது
2.ஏனென்றால் குடும்ப வாழ்க்கையில் அல்லது பிறர் வாழ்க்கையில் வரும் தீமைகளோ நம் உடலில் புகாது தடுக்க
3.அருள் உணர்வை இப்படி வலு கொண்டு செருகேற்றினால் தான்
4.நம் உடலில் உள்ள அணுக்கள் தீமைகளை ஒதுக்கித் தள்ளும் வலிமை பெறும்.

இல்லை என்றால் விஷம் என்ற உணர்வுகள் அதை அடக்கிவிடும். இதைப் போன்ற தீமைகளிலிருந்து மீள கூட்டாக உங்கள் வீட்டிலேயாவது செய்து வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும்… யாம் கொடுக்கும் இந்த உபதேசங்களைச் சிறிது நேரம் கேட்கச் செய்யுங்கள்.
1.அமைதி கொண்டு இருக்கும் நேரத்தில் இது அவர்களின் செவிகளில் பட்டபின்
2.கேட்க வேண்டும் என்ற உணர்வு தோன்றினால்
3.அவர்களுக்குள்ளும் இந்தப் பற்று வளர்ந்து குடும்பத்தில் பற்றுடன் வாழும் நிலை வரும்.

வெறுக்கும் போது இதைச் சொல்ல வேண்டாம்…!

ஆனால் அமைதி கொண்டிருக்கும் போது நீங்கள் அதை அவர்கள் பெற வேண்டும் என்று சொல்லால் வெளிப்படுத்துங்கள். அவர்கள் செவிகளில் விழுந்தால் அந்த உணர்வுகள் அவருக்குள்ளும் விளையும். உங்கள் குடும்பத்தில் பற்றும் பாசமும் வரும்.

தீமைகளை அகற்றும் பேரருளையும் பேரொளியையும் உங்களுக்குள் உருவாக்க இது உதவியாக இருக்கும். அதற்குத் தான் இதை எல்லாம் சொல்கிறோம்.

Leave a Reply