ஆண்டவனை வணங்கும் முறையை முன்னோர்கள் ஏன் வழிப்படுத்தினார்கள்…? – ஈஸ்வரபட்டர்

ஆண்டவனை வணங்கும் முறையை முன்னோர்கள் ஏன் வழிப்படுத்தினார்கள்…? – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பென்னும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது. எல்லா ஆன்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இந்த உடலுடன் வாழ்கின்றது.

அந்த அன்பிற்காகத்தான்… …
1.அந்த அன்பு கிடைக்காத நிலையில் சோர்வாகி
2.மன நிறைவைப் பெற்றிடாமல் பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
3.அந்த மனம் என்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்களாக்கி வாழ்ந்திடுகிறார்கள் மனிதர்கள்.

பரலோகம்.. எமலோகம்… நரக லோகம்… பூலோகம்… சொர்க்கலோகம்… இப்படிப் பல லோகங்களைச் சொல்கிறார்கள்…! அல்லவா. இவைகள் எல்லாம் என்னப்பா…?

மனம் என்னும் அந்த அன்பு லோகத்தை அந்த அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அந்த ஆத்மலோகத்திற்காக நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத்தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. ஆகவே எந்த நிலை கொண்டும் இன்று இருக்கும் இந்த விஷமான விஞ்ஞான உலகில்
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பென்னும் பொக்கிஷத்தை அவ்வுயிர் ஆத்மாவிற்கு ஊட்டம் தந்தே வாழ்ந்திடுங்கள்.

ஏனென்றால் அன்பினால் தான் நம் உடலும் நம் மனதும் நம் ஆத்மாவும் புத்தொளிர் பெற்று வாழ்கிறது என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் ஏன் உணர்த்தினார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சஞ்சலக்கூடு நிறைந்த இந்த மனத்தை அன்பு என்னும் நிலையில் தான் அவ்வாத்மாவை அமைதிப்படுத்த முடியும் என்ற நிலைக்காகத்தான் ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தினார்கள் முன்னோர்கள்.

மனமென்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட அவ்வாண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து நம் ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழி காட்டி வந்தார்கள்.

அவர்கள் காட்டிய மெய் வழியில் ஆண்டவனை வணங்குகின்றோமா…?


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.