வயதாகி விட்டாலே நோய் வரும் என்று ஏன் சொல்கிறோம்…?

வயதாகி விட்டாலே நோய் வரும் என்று ஏன் சொல்கிறோம்…?

 

பெரும்பகுதியானவர்கள் எனக்கு வயதாகி விட்டது. அதனால் என் உடலில் நோய் வந்து விட்டது என்பார்கள். இப்பொழுது செய்ததனால் வந்ததல்ல அந்த உடல் நோய்.

இளமையிலிருந்தே ஏங்கிப் பெற்ற… சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்த தீமைகள் அதிலிருந்து விடுபட…
1.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் போது விதி என்ற நிலையாகி
3.விதிப்படி வினைகள் விளைந்து நோயாகி… வேதனையாக நமக்குள் வளர்க்கின்றது.

அப்படிப்பட்ட விதிப்படி விளைந்த உணர்வுகளை அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து “அந்த விதி என்ற இருளை நீக்கி அருள் ஞானியுடன் ஒன்றச் செய்வதே மதி…!” . மகரிஷிகளின் அருள் சக்தி என்ற மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.

தன் மதி கொண்டு தான் மனிதருக்குள் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது… எத்தனையோ அருள் ஞானம் உருப்பெற்றது.

ஆகவே… அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்துவோம். நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்… அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

ஏனென்றால் ஒவ்வொரு நோடியிலேயும் நம் வாழ்க்கையில் முன்பு செய்து கொண்ட வினையே (விதியாக) இது வருகின்றது.

ஒருவர் விபத்தில் சிக்கினாலோ அல்லது அதைக் கேட்டுணர்ந்தாலோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற்றால் நம் நல்ல குணங்களையும் அது இருள் சூழச் செய்து விடுகிறது.

அந்த விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… அதே நிலைகள் நம்மை இயக்கி நம்மை அறியாமலே சில நோய்கள் வந்து விடுகின்றது… விபத்தும் ஏற்பட்டு விடுகின்றது.

இதைப் போல் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று… அந்த வினைகளுக்கு ஆளாக்கி… அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகின்றது.

இதைப் போன்ற தீயவினைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

சுத்தப்படுத்திய பின்பு நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெறவேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் எண்ணும் இந்த நல் உணர்வுகளை உயிர் நமக்குள் விளையச் செய்கின்றது. அந்த வலுவாக வளரச் செய்கின்றது.

எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுவதற்குண்டான தகுதியை நாம் பெற வேண்டும்.

அதற்கு… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

இந்த வாழ்க்கையில் வந்த இருளை வென்று அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து அறிவின் ஒளியாக நம் முன்னோர்களை நிலைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி நிலைக்கச் செய்து… அந்த அறிவின் ஒளியின் தன்மையை நமக்குள் பெறும் போது…
1.நம்மை அறியாது வரும் இருளை நீக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.
2.பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையும் நாம் அடையும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே குருநாதர் நமக்குக் காட்டிய இந்த அருள் ஞான வழியில் செல்வோம்.

Leave a Reply