நமக்குள் இருக்கும் பிற உணர்வின் உந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

act of soul

நமக்குள் இருக்கும் பிற உணர்வின் உந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள ஆவிகளின் சுமையுடன் நம்மை அறியாமலேயே அவற்றின் சக்திகள் பலவற்றை நம்முடலில் நாம் ஏற்றிக் கொண்டுள்ளதினால் தான் நம்முள் உள்ள குண நிலையை
1.நம் குண நிலைக்கு மேல் பிற அணுவின் செயலை நம்முள் ஏற்படுத்தி
2.அதனால் நமக்கு வரும் பல இன்னல்களின் நிலையுடன் வாழ்கின்றோம்.

நம் சக்தியின் செயலை நாம் பெற வேண்டும். பல அணுக்கள் நம் உடலிலிருந்து செயல்பட்டாலும்…
1.அவ்வணுக்களின் எண்ணத்திற்கு நம் புத்தியை அடிபணிந்து செல்லாத நிலைப்படுத்தி
2.நம் தியான சக்தியின் ஜெபத்தை நாம் பெற வேண்டும்.

எண்ணத்தில் கலக்கத்தை அண்ட விட்டால் நம் உடலிலிருக்கும் பிற அணுவின் துரிதம்தான் செயல்படும். நம் நிலை ஒரே நிலையிலிருந்தாலும் நம்முடன் கலந்து வாழ்பவர்களின் எண்ண நிலையின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் தாக்கும் பொழுது நம் நிலையும் மாறுபடும்.

சந்தோஷமான சூழ்நிலை உள்ள இடத்தில் நாம் உள்ள பொழுது நம் நிலையும் அங்குள்ளோரின் நிலையும் மகிழ்ச்சியுடன் உள்ளதல்லவா…? அதே நிலைபோல் துக்கம் உள்ள இடத்திலும் அங்குள்ளோரின் நிலையும் கவலை கொண்டதாக உள்ளதல்லவா…?

ஏனென்றால் இந்தக் காற்றினில் அனைத்து நிலைகளும் கலந்துள்ளன.

நாம் எந்நிலையில் உள்ளோமோ அந்நிலையில் சுற்றிக் கொண்டுள்ள சுவாசத்தின் துரித நிலை நம் நிலைக்கும் வந்து தாக்கி நம்மையும் அச்சூழ்நிலையில் கலக்கச் செய்கிறது.

இக்காற்றினில் உள்ள துரித நிலை கொண்டு எந்த இடத்தில் நாம் உள்ளோமோ அந்த நிலையின் சூழ்நிலைகேற்ப நம்மை அறியாமலே நாம் அடிமைப்பட்டு செயல்படுகின்றோம்.

இவ்வெண்ணத்தின் நிலைதான் இவ்வனைத்து நிலைகளுக்கும் நம்மை அடிகோலுகிறது.

நம்மில் வாழ்ந்த பெரியோர்கள் இந்நிலையிலிருந்து நாம் மாறுபடுவதற்குத்தான் இப்பக்தி நிலை தியான நிலை என்று நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லப் பல வழிகளை நமக்கு உணர்த்தினர்.

இந்நிலையை அறிந்த சிலரும் சில வினாக்களை எழுப்புகின்றனர். ஆண்டவன் அருள் பெற்று மகான் என்று பலரும் போற்றும் நிலையில் உள்ளவருக்கும் பல கஷ்டங்களும் பல உபாதைகளும் அவர் உடலில் வருகிறதல்லவா…? அது எதனால்…?

நம் கலியுடன் வாழ்ந்த மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற நாமம் கொண்டவர் வாழ்ந்த கடைசிக் காலத்தில் அவர் உடலில் பல உபாதைகள் இருந்தனவே.

அவர் தான் இவ்வுலகத்திற்கு இக்கலியில் வாழும் மனிதர்களுக்காக அவர்கள் நிலைக்கு புரியும்படி பல அருட்சொற்களை வெளியிட்டு பல ஜெபங்கள் இருந்து பல வழிகளைப் புகட்டினார். பலருக்குப் பல நல் நிலைகளைப் புகட்டிய அவர் உடலிலேயே பல நோய்கள் ஏன் தாக்கின..?

அவர் அவ்வுடலை அவரின் சொந்தமாகக் கருதவில்லை. மக்களுடன் மக்களாக வாழ்ந்தது தான் இவரின் நிலை.

இவரிடம் உபதேசம் பெற வருபவர்களின் எண்ணத்திற்கும் மற்ற நிலையில் வருபவர்களுக்கும் இவரின் நிலையை ஆண்டவனாக எண்ணி அவர்களின் கஷ்டத்தை இவரிடம் செப்பிடும் பொழுது இவரின் ஜெபத்தின் பயனால் இவரிடம் அருள் வேண்டி வருபவர்களின் உடல்களில் உள்ள உபாதைகளை இவர் ஈர்த்து இவர் உடலில் ஏற்றுக் கொண்டு அவர்களை நலமுடன் வாழும் நிலைப்படுத்தி அனுப்பினார்.

இவர் பெற்ற சக்தி இவரைக் காண்பவரின் நிலையிலுள்ள உபத்திரவத்தைத் தான் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலை பெற்றிருந்தார்.

ஆனால் அந்நிலையில் அஜ்ஜெப நிலை செய்யும் பொழுது ஈர்த்து உடனே வெளிப்படுத்தா விட்டால் இவர் இஜ்ஜெப நிலைக்கு வரும் காலத்திற்கு முதலில் இவர் உடலில் இருந்த அணுக்களின் வேகத்தினால் மற்றவரிடமிருந்து இவர் ஈர்த்த அவ்வியாதியின் அணுக்கள் இவர் உடலிலேயே தங்கிவிடுகின்றன.

இந்நிலையில் வந்ததுதான் அவரின் அந்திமக் காலத்தில் நடந்த நிலை. நிலை அறிந்தேதான் அவரும் வாழ்ந்தார். இத்தவயோக முனிவர்களின் நிலையெல்லாம் இதைப்போல்தான்.

உடல் உபாதையில் மற்றவர்கள் நிலை இருக்கும் பொழுது அவற்றைத் தான் ஈர்த்து வெளிப்படுத்திட முடியும். அவர்களைக் குணமாக்கிடவும் முடியும்.

இதுவே இவ்வுடல் தசைப் பாகத்தில் மட்டும் இந்நிலையைச் செய்திட முடியுமே தவிர இவ்வுடலிலுள்ள எலும்பின் நிலையில் உள்ள மாற்றத்தையும் பிணியையும் எம்முனிவனாலும் சித்தனாலும் ஈர்த்துச் செயலாக்கிட முடியாது.

ஆவி நிலைகொண்ட தசையில் உள்ள நிலைகளை மட்டும் தான் குணப்படுத்திட முடியும்.

1.சக்திக்கும் சக்தி வாய்ந்த அச்சக்தி தேவனின் அருளை வென்றிட
2.எந்த ரிஷி நிலை பெற்றாலும் அச்சக்தியேதான் ஓங்கி நிற்கும் நிலை உள்ளது.
3.அச்சக்தியின் சொரூப நிலையை எண்ணியே வணங்கிடத்தான் முடியும்.

ஆகவே… நம்மில் நம் எண்ணத்தை நல் நிலைப்படுத்தி
1.நமக்குள் இருக்கும் மற்ற அணுக்களின் செயல்களிலிருந்து
2.நம்மை நாம் பாதுகாப்புடன் வாழும் நிலைக்கு முதலில் பக்குவம் கொண்டு வந்திட வேண்டும்.

Leave a Reply