நுகரும் ஆற்றல் பெற்றால் தான் மெய் ஞானத்தை வளர்க்க முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Treaure of breathing

நுகரும் ஆற்றல் பெற்றால் தான் மெய் ஞானத்தை வளர்க்க முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
ஒருவர் காப்பியை ஆற்றிப் பருகுவதைப் போன்று தெரிகின்றது.

விளக்கம்:
நீரைக் கொதிக்க வைத்து… அதில் காப்பித் தூளைப் போட்டு பாலைத் தனியாகக் கொதிக்க வைத்து… காப்பியில் எடுத்த நீரையும் பாலையும் சேர்த்து அதற்குகந்த பக்குவத்தில் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்து… “நம் உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய சூட்டிற்கு” அதை நாம் பருகுகின்றோம்.

பாலையும் நீரையும் காப்பித் தூளையும் சர்க்கரையையும் அதற்குகந்த உஷ்ணத்தைக் கொடுத்து காய்ச்சிச் சுவைப்படுத்திப் பிறகு அந்தச் சுவைக்குகந்த உஷ்ணத்தில்…
1.நம் உடல் ஏற்கக்கூடிய பக்குவத்திற்குக் காப்பியை ஆற்றிய பிறகுதான்
2.நாம் அதனைப் பருக முடிகின்றது.

அதைப் போன்று நம் உணர்வின் எண்ணமுடன் பல விதமான செயலுக்குகந்த எண்ண ஓட்டங்கள் கலக்கப் பெறும் பொழுது… உணர்வின் சமைப்பாய் உயிர் சமைக்கும் உஷ்ணத்தைக் கொண்டு… ஆத்மாவினைச் சுவைப்படுத்தி… ஆத்மாவின் சுவையை மீண்டும் செயலாக்க…
1.உணர்விலிருந்து வெளிப்படும் “நம் சொல்லின் ஒலி”
2.பக்குவப்படுத்தப்பட்ட பருகக்கூடிய தன்மைக்கு
3.ஆற்றிய காப்பியைப் போல் வெளிவரல் வேண்டும்.

பலவற்றையும் நாம் சமைக்கும் பொழுது… அதற்குகந்த உஷ்ணத்தைத் தந்து சமைத்த பிறகுதான் பிறிதொரு பக்குவத்திற்குச் செயல் கொள்ள முடியும்.

ஆரம்ப நிலை இயற்கையின் தொடர்பில்… வளர்ச்சியின் செயல் யாவையுமே விஷத் தன்மை கொண்ட வளர்ப்புத்தான்.

ஜீவ ஜெந்துக்கள் அதனுடைய சுவையின் உணர்விற்கொப்ப அதனதன் உடல் நிலைக்குகந்த உணவை மட்டும்தான் உட்கொள்ளும். மாற்று நிலை… சமைப்பு நிலை… ஏற்படுத்திக் கொள்ளாநிலை தான் ஜீவஜெந்துக்களின் நிலை.

இப்பூமியின் தொடர்பில் இப்பூமி எடுக்கும் அமிலத்தின் தொடர்பில் நாம் வாழ்ந்தாலும்…
1.நாம் உண்ணக்கூடிய உணவு எது எது மனிதனுக்கு ஏற்றது…? என்பதை
2.நம் முன்னோர்கள் நமக்கு தொடர்புப் படுத்திய உணவு முறையைப் பக்குவப்படுத்தி நாம் உண்ணுகின்றோம்.

மிருகங்களைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற மனித நிலையில் இயற்கையில் வளர்ந்துள்ள பல நிலைத் தாவரங்களை வழிப்படுத்திய நிலைத் தொடரில்தான் நாம் சமைத்து உண்டு வாழ்கின்றோம்.

நம்மைக் காட்டிலும் அறிவில்… செயல் திறனில் ‘செயலற்ற மிருகங்கள்…” நம்மைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் “தன் உணர்வின் சுவாசத்தால்” பல உண்மைகளை முன் கூட்டி அறியக்கூடிய நிலைக்குச் செயலாக்கும் பொழுது அறிவில் உயர்ந்த மனித ஞானம் ஏன் உயர்வில் செயலாக்க முடியாது…?

உருவத்தில் சிறிய எறும்பு… மழைக் காலத்தில் தன் ஆகாரத்தை உண்ணுவதற்காக மழை வருவதற்கு முதலிலேயே அறிந்து சேமித்துக் கொள்கின்றது.

நாம் பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ள பொருளைத் தனக்கு ஒத்த உணவு என்று முன் கூட்டி அறிந்து தன் இனத்தின் கூட்டில் தனக்குகந்த உணர்வின் சுவாசத்தால் எறும்பு எடுத்து விடுகின்றது.

ஆனால்… மனிதன்
1.மூடி வைத்துள்ள பாத்திரத்திலுள்ள பொருளை அதன் மூடியை எடுத்தால் தான்
2.உள்ளே என்ன இருக்கின்றது…? என்பதை அறிய முடிகின்றது.

நம்மைக் காட்டிலும் சிறு எறும்பு அதை அறியும் பொழுது மனித ஞானம் எங்குள்ளதப்பா இன்று…?

மழை வருவதற்கு முன்னும்… எதிரி தன்னைத் தாக்க வருவதற்கு முன்னும்.. பல மைல்களுக்கு அப்பாலுள்ள நீர் நிலைகளைத் தன் சுவாசத்திலேயே அறியும் நிலையும் மிருக ஜெந்துக்களினால் அறிய முடிகின்றது.

இதனை எல்லாம் நாம் அதனுடைய இயற்கையின் செயல் என்கின்றோம்.

ஒவ்வொரு உருவக நிலையும்… அது அது எடுத்த சூரிய ஒளியில் உதித்த உயிரணுக்களின்… மண்டல ஈர்ப்பின் சுவைக்கொப்ப உருவாகும் உருவகத் தொடர் தன்மையில்… பூமியின் சமைப்பின் தொடர் உருவக உரு பெற்றிருந்தாலும்…
1.உருப்பெற்ற தன்மையின் உடல் அமைப்பின் செயல் நிலையை
2.மிருக ஜெந்துக்களினால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.

மனித நிலையில் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு இயற்கையின் உண்மையை உணர்ந்து எண்ணத்தின் மெய் ஞானத்தால் எதனையும் மாற்றி அமைக்கக் கூடிய செயல் தன்மைக்கு மனிதனால் தான் முடியும்.

மெய் ஞானத்தின் உண்மையை இயற்கையின் தொடர்பு கொண்டு வானக்கோள்களின் நட்சத்திர ஒளியை இச்சரீர உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் அமிலத்தின் ஒலியை உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சமைக்கப்படும் நிலையே ஆத்மாவின் பதிவு ஆகிறது.

இதே தொடரில் இப்பூமியின் தொடர்புகொண்ட நட்சத்திரக்கோள்கள் நவக்கோள்கள் ஒவ்வொன்றையும் எண்ணி நாம் தியானிக்கும்பொழுது எண்ணத்தின் உணர்வில் அக்கோளின் அமிலத்தின் அலையை இச்சரீரம் சமைத்து ஆத்மாவில் பதிவாக்கிக் கொள்கின்றது.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து மனித நிலை உயர வேண்டும் என்றால்…
1.இப்பூமிக்கு வளர்ச்சி கொடுக்கும் செயலாய் சுழலும் பிற கோள்கள் நட்சத்திரங்களின் தொடர்பில்
2.நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும்
3.அந்த அமிலத்தின் அலையைக் கொண்டுதான்
4.மனித நிலைக்கு அடுத்த நிலையான ஆத்ம ஜோதி என்ற ஒளியான வளர்ச்சி நிலை வலுக்கொள்ளும்.

இப்பூமியின் தொடர்பில் இருந்து… விஞ்ஞானி பல ஒலி ஆண்டுகளையும்… ஒளி ஆண்டுகளையும் கணக்கெடுத்து வான்கோளிலுள்ள உண்மைகளை எல்லாம் அறிந்தாலும்… அப்படி அறியக்கூடிய விஞ்ஞானியின் வாழ்க்கைக் காலம் “சரீரம் உள்ள வரைதான்…!”

1.ஆனால் மெய் ஞானத்தில் அறியக்கூடிய காலம் என்பது
2.வழி வழியாய் வளரக்கூடிய காலமப்பா…!

Leave a Reply