உடலுடன் வாழும் பொழுதே விண் செல்லும் ஆற்றலைப் பெருக்கிடல் வேண்டும்

cosmic propulsions

உடலுடன் வாழும் பொழுதே விண் செல்லும் ஆற்றலைப் பெருக்கிடல் வேண்டும்

 

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் மூதாதையர்களை மீண்டும் பிறவிக்கு வராத நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.

நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும். “இது தான் மனிதனுக்குண்டான முக்கிய உணர்வு…” இந்த உணர்வின் துணை கொண்டுதான் விண் செலுத்த வேண்டும்.

இன்று விஞ்ஞானிகள் இராக்கெட்டை பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபடச் செய்து அதில் உருவாகும் உந்து விசையால் மேலே விண்ணுக்குச் செல்லச் செய்து பேரண்டத்தின் நிலைகளையும் அறியச் செய்கின்றனர்.

இதைப் போலத்தான்…
1.நாம் அனைவரும் கூட்டுத் தியானத்தின் மூலம்
2.சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை நமக்குள் செருகேற்றி
3.அந்த உணர்வின் வலுவின் துணை கொண்டு
4.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்களை
5.விண்ணிலே உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்..
(ஒரு தடவை மட்டும் இவ்வாறு செய்வது அல்ல)

வீட்டிலே கூட்டுக் குடும்ப தியானங்கள் எடுக்கப்படும் போதெல்லாம் அதே எண்ணத்தின் வலுவான நிலைகள் கொண்டு நம் எண்ணத்தால் நம் மூதாதையர்களுடைய நிலைகளை “அடிக்கடி” விண் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

உதாரணமாக செயற்கைக் கோளை இராக்கெட் மூலம் ஒரு நாட்டிலிருந்து அனுப்புகின்றார்கள் என்றால் அதனுடைய சரியான வட்டப் பாதையில் வருவதற்குச் சிறிது கால தாமதமாகும்..

1.ஏனென்றால் நம் பூமியின் சுழற்சியின் நிலைகளுக்கும்…
2.செயற்கைக் கோளை நிறுத்தும் நிலைகளுக்கும்
3.இங்கிருந்து உந்து விசையால் சிறுகச் சிறுக அது ஒதுக்கி
4.அதனின் வட்டப் பாதையை அமைக்கின்றனர்.

இதைப் போலத்தான் நாம் அனைவரும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை உந்து விசையால் நாம் விண்வெளிக்கு அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பினாலும்…
1.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் போன்று எண்ணி… எண்ணி… எண்ணி…
2.அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிகளுடன் கலக்க வேண்டும் என்று
3.உங்கள் உணர்வின் துணை கொண்டு சரியான பாதையில் இணைக்க வேண்டும்.

என்னமோ பேருக்குச் சொல்லிவிட்டேன்… என் கடமை தீர்ந்தது… அடுத்தாற்படி நாம் பார்க்கலாம்…! என்று எண்ண வேண்டாம்.

நாம் சரியான பாதையில் அவர்களை உந்தும் நிலைகள் வரும்போது நமக்குள்ளும் அந்த ஆற்றல்மிக்க சக்திகள் துணை கொள்கின்றது. நம் நினைவலைகளும் அங்கே சேர்க்கப்படும்போது அந்தச் சப்தரிஷி மண்டல உணர்வும் நமக்குள் விளைகின்றது.

இந்த உணர்வின் துணை கொண்டு… நம் ஆன்மா எப்பொழுது பிரிந்தாலும்… அடுத்து இந்தக் கூட்டு தியானத்தில் உள்ளவர்கள் நம்முடைய ஆன்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றால் இலகுவாக அங்கே சென்றடைந்து விடுகின்றது. பிறவா நிலை அடைந்து விடுகின்றது.

அந்த விநாயகர் தத்துவத்தில் ஞானிகள் சொன்னபடி இதற்கு முன் இவ்வாறு செய்திருந்தால் இப்பொழுது எளிது. ஆனால் அதையெல்லாம் யாரும் செய்யவில்லை.

மோட்சத்திற்குப் போவதாக எண்ணி… நாம் பல பல நிலைகளைச் செய்து.. நம்மை அறியாமலேயே பூமியின் ஈர்ப்புக்குள்ளேயே நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களைச் சிக்க வைத்து விட்டோம்.

1.மந்திர ஒலியின் ஈர்ப்புக்குள் இந்த உயிராத்மாக்களைச் சிக்க வைத்து
2.அவர்களை ஆவியாக திரியச் செய்து
3.கடைசியில் அவர்களுடைய உயிராத்மாக்களை மனிதனல்லாதபடி
4.பரிணாம வளர்ச்சியில் கீழே தான் தள்ளி விடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகள் தான் அந்த அரச காலங்களிலிருந்து நடந்து வந்திருக்கின்றது. இனி அவ்வாறு இல்லாதபடி ஞானிகள் காட்டிய வழியில் முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகம் மனிதருடைய எண்ண அலைகள் முழுவதும் சிதறுண்டு போகும் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து விடுபட… நம்முடைய எண்ணங்கள் சிதறாத வண்ணம் காத்திட வேண்டும் என்றால்
1.நம் முதாதையருடைய உயிராத்மாக்களை
2.அவசியம் பிறவா நிலை அடையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் அவர்களை எண்ணும் போதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நாமும் அழியாத ஒளிச் சரீரம் பெறுவது திண்ணம்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருவம் இதைச் செவ்வனே கடைபிடித்திட வேண்டும்.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குக் கிடைக்கும்
2.சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகள் உங்களுக்குள் கிட்டும்.

இதனின் துணை கொண்டு இந்தப் புவியிலே உடலுடன் வாழ்ந்திருக்கும் போதே
1.விண்வெளி செல்லும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி
2.மெய் வழி காண்போம்… மெய் வழி செல்வோம்… என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.

Leave a Reply