“ஆதிசக்தியின் சூட்சமம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Adi Sakthi Eswara

“ஆதிசக்தியின் சூட்சமம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
பெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.

மற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்… முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
குரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று
1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்
2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.

ஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்…” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.

இச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.

அவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்…
1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்
2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை
3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது
4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறி தாயான ஜீவ சரீரமாக
5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்
6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.

இன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது…? பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது…?

அதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”

மனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்
1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று
2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.

முள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி… காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது…!

அதைப் போன்று… நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி… வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..
1.மெய் உணர்வின் மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்
2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று
3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே
4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.

Leave a Reply