கடவுளைக் காண்பது பற்றி ஒவ்வொரு ஞானியும் சொன்னது…!

God exists

கடவுளைக் காண்பது பற்றி ஒவ்வொரு ஞானியும் சொன்னது…!

 

இன்று சினிமாக்களில் காட்சிப் பொருளாக வேஷமிட்டு அதன் உணர்வை நிஜமாக நடப்பது போல் காட்டுகின்றார்கள். நாமும் பார்க்கின்றோம். அந்த உணர்வை வளர்க்கவும் செய்கின்றோம்.

அதைப் பெறுவது போல மதங்களின் அடிப்படையில் தெய்வங்களை வணங்கி அதற்குண்டான சாங்கியங்கள் சாஸ்திரங்கள் செய்து அதை வளர்த்துக் கொண்ட பின் மனிதன் மடிந்தால் என்ன ஆகின்றது…?

மனித உணர்விற்குள் மதத்தால் இனத்தால் உருவாக்கப்பட்ட உணர்வின் தன்மைகள் கொண்டு
1.உருவமாகத் தெரிவதைக் கவரப்படும் பொழுது
2.அது அருவ நிலைகளாக மனிதனுக்குள் விளைந்து
3.அதே உணர்வின் இயக்கமாகக் கடவுளாகக் காட்டுகின்றது.

எந்தெந்த குணத்தின் உருவமாக அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் பூஜித்து வணங்கினார்களோ அந்த உணர்வின் செயலாகவே செயல்படுகின்றது. மற்றவர்களுக்குள் அந்த உணர்வின் அலைகள் வந்து காட்சியாகவும் தெரிகின்றது. அது உண்மையான கடவுள் அல்ல.

ஆகவே மனிதனைப் பேணிக் காக்கும் உணர்வின் தன்மையை அந்த உயர்ந்த குணங்களை எடுத்து அவன் உயர வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்தால் அதன் உணர்வே உன்னைத் தெளிவாக்கும் என்று இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.

அவர் சீடரான விவேகானந்தரும் அதைத் தான் செய்தார். நீ தெய்வமாக வேண்டும் என்றால் உயர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மற்றவர்கள் – அவர்கள் உயர்ந்து வாழ வேண்டும் என்று நீ எப்பொழுது எண்ணுகின்றாயோ அன்று நீ மனிதன் என்ற நிலையை அடைகின்றாய்.

அதுவே உன்னை உயர்வாக்கும் உணர்வின் நற்குணங்களாக உனக்குள் வளரும். உன் சொல்லும் பிறரை உயர்வாக்கும் நிலைகள் பெறும். ஆகவே
1.ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக நீ மதி
2.கடவுள் வீற்றிருக்கும் அந்த உடலில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நீ எடுத்து வளர்த்துக் கொள்
3.அந்த எண்ணமே உனக்குள் தெய்வ சக்தியாகச் செயல்படும்
4.அப்பொழுது அங்கே கடவுளாகின்றாய்…! என்ற உணர்வினை விவேகானந்தர் தெளிவாக்கியுள்ளார்.

ஒருவருக்கொருவர் பண்புடன் ஈகையுடன் மற்றவர்களுக்கும் உணவருந்தச் செய். அந்தப் பண்பினை வளர்த்தால் அதுவே உயர்ந்த நிலைகளாக உனக்குள் கடவுளாக வளர்கின்றது. அப்பொழுது நீயே அவனைக் காப்பவனாக ஆகின்றாய்.

அன்பு கொண்டு பிறரை உயர்த்தும் மார்க்கத்தில் ஒருவருக்கு இல்லை என்றால் “கொடுத்து உதவு…!” என்று தான் இயேசுவோ நபிகளோ ஏனைய மகான்கள் அனைவரும் சொல்லியுள்ளார்கள்.

உயர்ந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்து பகைமையிலிருந்து மீள வேண்டும். எல்லோருக்கும் சேவை செய்யும் பண்புகள் வர வேண்டும். உயர்ந்த எண்ணங்கள் கொண்டு ஏழ்மையில் வாடுகின்றவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும். அவர்களையும் உயர்த்திடும் நிலைகள் கொண்டு வளர்க்க வேண்டும்.

இந்த உணர்வின் தன்மையை உனக்குள் உருவாக்கி விட்டால் அதுவே கடவுளாக நின்று செயல்படும்…! என்று குருநானக் சொன்னார்.

ஆனால் இவை எல்லாமே பின்னாடி மதமாக்கப்பட்டு மதத்தின் நிலைமை கொண்டு பகைமைகளை உணர்த்தி அதற்குள் மதப் பித்து கொண்டு அந்த மகான்களின் தத்துவத்தையே மாற்றிவிட்டு மதப்போர் இனப்போர் என்று நடந்து கொண்டுள்ளது.

ஆனால்
1.உயர்ந்த குணங்களே மனிதர்களை ஆளுகின்றது.
2.அதை நீ ஆண்டவனாக வணங்கு…! என்று தான்
3.அன்று தோன்றிய மகான்கள் அனைவருமே சொல்லியுள்ளார்கள்.
4.யாரும் மதத்தை உருவாக்கவில்லை.

உயர்ந்த குணம் கொண்டு ஒருவொருக்கொருவர் காக்கும் நிலையைத்தான் “கடவுள்…!” என்று அந்த நிலையை உருவாக்கினார்களே தவிர அதை அரசியலாகவோ மதமாகவோ இனமாகவோ ஆக்கவில்லை.

இதை நாம் ஒவ்வொருவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…!

Leave a Reply