நம் குழந்தையோ பையனோ செய்யும் தவறிலிருந்து “அவர்களை நாம் எப்படி நல்வழிப்படுத்துவது…?”

Sakthivel

நம் குழந்தையோ பையனோ செய்யும் தவறிலிருந்து “அவர்களை நாம் எப்படி நல்வழிப்படுத்துவது…?”

 

பாசத்தால் நம் குழந்தையை வீட்டில் சீராக வளர்த்தாலும் அவன் சந்தர்ப்பத்தால் தகாதவனுடன் சேர்ந்து விளையாடச் சென்று விட்டால் அவன் இப்படிச் செய்கிறானே…! என்று வேதனைப்படுகிறோம்.

வேதனை என்பது நஞ்சு. அவன் மேல் எவ்வளவு பற்று இருந்ததோ அவன் செயலைச் சந்தர்ப்பத்தால் கண்ணுற்றுப் பார்க்கும் போது இவன் இப்படி ஆகி விட்டானே…! என்ற வேதனை உணர்வுகள் தோன்றுகின்றது.
1.அந்த வேதனையான உணர்வுகளை நாம் நுகர்ந்து கொண்ட பின்
2.அவன் மீது பாசமாக இருக்கும் நம் நல்ல உணர்வை மறைக்கச் செய்து விடுகிறது.

பால் தெளிவாக இருக்கின்றது. அதிலே பாதாமைப் போட்டால் அது உயர்ந்த சுவை பெருகுகின்றது. உடலுக்கு வலுவும் கொடுக்கின்றது.

அதைப் போல் நாம் தெளிந்த மனம் கொண்டு இருக்கும் போது பையனை நல்ல முறையில் வளர்க்க வேண்டுமே என்ற எண்ணம் கொண்டு அவனுக்கு வேண்டிய உபகாரங்கள் செய்து அவன் வளர வளர நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். அவன் வளர்ந்து வரப்படும் போது நாம் நினைத்தபடி வரவில்லையென்றால் என்ன செய்கின்றோம்…?

சந்தர்ப்பத்தால் அவன் தகாதவனோடு சேருகிறான். அல்லது தகாத செயலை அவனையறியாது செய்கின்றான் என்றால் அதை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது நம்மை வேதனைப்பட வைக்கின்றது. இந்த வேதனை என்பதே நஞ்சு.

1.ஒரு பொருளைச் சீராக வைத்திருந்தாலும்
2.மற்றொரு பொருள் அதனுடன் உராய்ந்த பின் இரண்டும் தேய்மானம் ஆகின்றது.
3.இதைப் போல தான் அவன் செய்யும் தகாத செயலின் உணர்வுகள்
4.நம் நல்ல உணர்வுடன் உராயச் செய்யும் போது வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிய பின் அவனுக்கு எப்படி எந்த நல்லதைச் சொல்ல வேண்டும் என்ற நிலையில்லாது நாம் நிலைகுலைந்து விடுகின்றோம்.

பாலில் நஞ்சினை விட்டுக் குடித்தால் அந்தப் பாலின் சத்தை இயக்காது நஞ்சு நம்மை மடியச் செய்வது போல் நாம் சுவாசித்த வேதனை என்ற நஞ்சு நம் நல்ல உனர்வை மாற்றி விடுகின்றது. பின் நாம் சிந்தித்துச் செயல்படும் திறனை இழந்து விடுகின்றோம்.

நம் பையன் “நல்லவன் தான்…!” என்றாலும் அவனை வளர்க்க வேண்டும் என்ற நிலையில் வாழ்க்கையில் இத்தகைய சந்தர்ப்ப பேதங்கள் உருவாகி விடுகின்றது. இப்படிப்பட்ட பேதங்கள் உருவாக்கப்படும் போது சிந்தித்து அவனுக்கு நல்ல வழி சொல்வதற்கு மாறாக கோபமான உணர்ச்சிகளைப் பேச வைக்கிறது.

நாம் உயர்ந்த நிலைகளில் மகிழ்ச்சியாக இருப்பினும் ஒரு ஏறும்போ தேளோ கொட்டி விட்டால் “தையா.. தக்கா…!” என்று தான் குதிப்போம். அட என்னய்யா… என்னய்யா…? என்று கேட்டால் “இருய்யா…!” என்று தான் நாம் சொல்வோம். அது போல
1.நஞ்சின் உணர்வுகள் (வேதனை) நமக்குள் கலந்த பின் சீரான பதில் கொடுக்காது
2.நம் நல்ல உணர்வுகள் அனைத்தும் துடிக்க ஆரம்பித்துவிடும்.
3.அந்தத் துடிப்பின் நிலைகள் கொண்டு பையனை ஏசவும் பேசவும் செய்து விடுகின்றோம்.

அவன் மேல் பற்றான நிலைகளில் நாம் இருந்தாலும் மீண்டும் மீண்டும் “இப்படிச் செய்கிறானே…!” என்ற வேதனையைச் சுவாசிக்கும் பொழுது பற்று கொண்டிருந்த நல்ல உணர்வுக்குள் நஞ்சு கலந்து விடுகின்றது.
1.நம்மைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு வெறுப்பு
2.அவனைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு வெறுப்பு

நம்முடைய ஆறாவது அறிவால் கருணைக் கிழங்கில் உள்ள நஞ்சை எவ்வாறு நீக்குகிறோமோ அதைப்போல நமக்குள் கலந்த இந்த நஞ்சை நீக்க அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்.

நமக்குள் அதை வலுவாக்கிக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் பையன் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அவனுக்குள் அதைப் பாய்ச்சி அவனை அறியாது இயக்கும் உணர்வுகளிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும். நமக்குள் மகிழ்ச்சியான உணர்வுகளை ஊட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள்ளும் எடுத்து அவனுக்குள்ளும் பாய்ச்சப்படும் பொழுது
1.அவன் மீது எவ்வளவு பற்றுதலோடு நாம் இருந்தோமோ
2.அவனின் தவறான செயலால் நம் நல்ல சிந்தனைகள் இழக்காது
3.நம் ஆறாவது அறிவின் துணையால் நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

“முருகனின் இயல்பு…!” என்று நம் ஆறாவது அறிவின் தன்மையைத் தெளிவாக எடுத்து உருவகப்படுத்தித் தெளிவுபடுத்திக் காட்டியவர் இந்தப் போகமாமகரிஷி தான்.

ஆகவே அந்த ஆறாவது அறிவின் தன்மையின் இயக்கம் எவ்வாறு…? என்று முந்தைய நிலைகளில் மற்ற மகரிஷிகள் சொல்லி இருந்தாலும் அதனைப் பின்பற்றி
1.நஞ்சினை நீக்கும் ஆற்றல் மிக்க செயலைத் தனக்குள் கற்றுணர்ந்து
2.அவனின்று வெளிப்பட்ட உணர்வின் ஆற்றல் தன் இன மக்கள் எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று
3.அந்தத் தெளிந்த உணர்வை ஊட்டி வளர்த்தவன் போகமாமகரிஷி.

அந்தப் போகமாமகரிஷியை நாம் எண்ணி அவர் உணர்வின் சத்தை நமக்குள் சேர்த்து மயில் எவ்வாறு நஞ்சினை வென்றதோ அதை நினைவுபடுத்தி அந்த மகரிஷிகளை எண்ணி நமக்குள் வரும் தீமைகளை வெல்ல வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் குழந்தை உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவனை அறியாது புகுந்த நஞ்சுகள் நீங்க வேண்டும் என்று உயர்ந்த உணர்வை அங்கு ஊட்டி அதனின் துணை கொண்டு நாம் நமக்குள் சேர்ந்த தீய உணர்வைத் துடைத்து விட்டு
1.எத்தகைய நஞ்சான உணர்வுகளும் நமக்குள் இயக்காது
2.நாம் “பேரானந்தப்பட வேண்டும்…!”

Leave a Reply