எங்கும் எதிலும் மகிழ்ச்சி பெறச் செய்யும் “ஆடிப் பெருக்கு”

blissful- ADI PERUKKU

எங்கும் எதிலும் மகிழ்ச்சி பெறச் செய்யும் “ஆடிப் பெருக்கு”

 

ஒருவர் நரக வேதனைப்படுகின்றார் என்றால் நாம் அந்த வேதனை உணர்வை நுகர்ந்தால் நம் நல்ல உணர்வையும் அது மடியச் செய்கின்றது. ஆகவே அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி மகரிஷிகளினுடைய அருள் சக்தியைத் தனக்குள் கவர்ந்து உடல் முழுவதும் பரவச் செய்து முதலில் நம் நல்ல உணர்வைக் காத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை வேதனைப்படுவோர் உணர்வுகளிலே பாய்ச்சி அவர் உடல்களிலும் அதை விளையச் செய்ய வேண்டும்.
1.அவர் பேரின்பப் பெரு வாழ்க்கை வாழ வேண்டும்
2.மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அவருக்குள் வளர வேண்டும் என்ற அந்த எண்ணத்தை
3.நமக்குள் வலுவாக எண்ணி அதை அவருக்கு பாய்ச்சுதல் வேண்டும்.

அவர்கள் நாம் சொல்வதைக் கேட்டு அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால்
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் மெய் ஞானம் பெறுவீர்கள்…
2.உயர்ந்த வாழ்க்கை வாழ்வீர்கள்…! என்று மீண்டும் இதை நாம் வாக்காகக் கொடுக்க வேண்டும்.

அப்பொழுது அவருக்குள் அந்த அருள் ஞானத்தின் நிலைகள் பெருகி வேதனைகளிலிருந்து மீண்டு மகிழ்ச்சியான நிலைகளை அவர் வெளிப்படுத்துவார்.

அப்பொழுது அவரிடமிருந்து வெளிப்படும் மகிழ்ச்சியான உணர்வை நாம் கவர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு உணவாகக் கொடுத்து மகிழ்ச்சி பெறும் அணுக்களாக ஒளியின் சுடராக நாம் பெருக்க வேண்டும்.

வாடிய பயிர்களைக் காப்பதற்காக அதற்குத் தேவையான சக்தி வாய்ந்த உரங்களையும் பலவிதமான சத்துக்களையும் கொடுத்த பின் தாவர இனங்கள் வளர்ச்சியாகி அது நல்ல மணி முத்துக்களைப் பெருக்கிக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான் வாழ்க்கையில் வேதனைப்படும் நிலைகள் வந்தால் அல்லது வேதனைப்படுவோரைப் பார்த்தால் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நல்ல குணங்களுக்கு உரமாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

ஆகவே யார் வேதனைப்பட்டாலும் துன்பப்பட்டாலும் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும்
1.அவர் உடல்களில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு படர வேண்டும்
2.அங்கிருக்கும் நஞ்சான உணர்வுகள் குறைய வேண்டும்
3.அவர்கள் உடலில் மகிழ்ச்சி பெறும் சக்திகள் பெற வேண்டும் என்ற
4.இந்த உணர்வின் எண்ண ஒலிகளை (சொல்லை) அங்கே பாய்ச்ச வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை ஏங்கிப் பெறுங்கள்… உங்கள் துன்பம் போகும்… இருள் சூழ்ந்த நிலைகள் குறையும்… அருள் ஞானத்தை நீங்கள் பெறுவீர்கள்…! என்று இந்த உணர்வினை நாம் போதித்தல் வேண்டும்.

இப்படி இதைச் சொல்லிச் சொல்லித்தான் அந்த நல்லதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவ்வாறு சொன்னால்தான் நமக்குள் வரும் அவர்கள் பட்ட துன்பமோ துயரமோ நோயோ நமக்குள் வராது தடுக்க முடியும்.

இல்லை என்றால் அவருடைய வாழ்க்கையில் எப்படி விஷத்தின் தன்மை கொண்ட உணர்வுகள் உடலில் அவருடைய நல்ல உணர்வுகளைக் குறையச் செய்ததோ அதை நாம் எண்ணிவிட்டால் அந்த விஷத்தின் தன்மைகள் நமக்குள் வளர்ந்து பெருகிவிடும். நம் நல்ல குணங்களைக் குறைக்கச் செய்யும்.

அதற்காக வேண்டித்தான் அருள் ஞானிகளின் உணர்வைப் பெருக்கி அந்த உணர்வின் தன்மையைக் கலவையாக்கித் துன்பப்படுவோர் மனதில் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்று சொல்வது.

அப்படிப் பதித்தோம் என்றால் அந்த உணர்வின் ஆற்றல் அங்கே பெருகி அவருடைய வாழ்க்கையில் இருளை வென்று ஒளி பெறும் உணர்வாக மகிழ்ச்சி பெறும் சக்தியாகப் பெருகுகின்றது.

அதைக் கண்டு நாம் பேரானந்தப்பட்டு அதில் விளைந்த அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும். அது நம் உடலுக்குள் இருக்கும் அனைத்தையும் ஒளி பெறும் சரீரமாகப் பெருக்கும்.

1.பகைமையோ தீமைகளையோ மற்ற தீமை கொண்ட உணர்வுகளையோ நமக்குள் வளர்த்திடாதபடி
2.நிறைவு பெற்ற உணர்வுகளை இணைத்து நம் எண்ணங்களை மகிழ்ச்சி பெறச் செய்து
3.நம் சொல் பிறரை மகிழ்ச்சி பெறச் செய்வதும்
4.நமது பார்வை பிறரை மகிழச் செய்வதும்
5.நம்முடைய செயல்கள் அனைத்தும் மகிழச் செய்யும் நிலையாகப் பெருக்குவதே ஆடிப் பெருக்கு.

உதாரணமாக ஒருவர் தன் வாழ்க்கையில் சோர்வடைந்து இருந்தால் அப்போது அவரை அந்த இருண்ட நிலைகளிலிருந்து மீளச் செய்து அவர் மகிழும் நிலையைப் பார்த்து நமக்குள் அந்த மகிழ்ச்சியைப் பெருக்குவதே ஆடிப் பெருக்கு.

ஆகவே
1.யாருடைய தீமையைக் கண்டாலும் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் பெருகாது
2.அந்தத் தீமையை நீக்கிடும் அருள் சக்தியாக அருள் ஞானிகளின் உணர்வைப் பெருக்கி
3.எங்கும் எதிலும் மகிழ்ச்சியைப் பெருக்குவதே ஆடிப் பெருக்கு…!

Leave a Reply