“பூனைக்குக் கொண்டாட்டம்… எலிக்குத் திண்டாட்டம்…!” என்ற நிலைகளில் தான் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்

deepavali-greetings

“பூனைக்குக் கொண்டாட்டம்… எலிக்குத் திண்டாட்டம்…!” என்ற நிலைகளில் தான் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்

 

தீபாவளி என்று வந்து விட்டாலே நிறையக் குடும்பத்தில் அன்று திண்டாட்டமாக இருக்கின்றது.

மகளைத் திருமணம் செய்து கொடுத்தாகி விட்டதென்றால் மருமகனையும் கூப்பிட வேண்டும் மகளையும் கூப்பிட வேண்டும். தங்கத்தில் செயினோ மோதிரமோ கொடுக்க வேண்டும். சேலை துணிமணிகள் கொடுக்க வேண்டும். இதெல்லாம் கட்டாயமாகிவிட்டது.

மரியாதைக்காகச் செய்ய வேண்டும் என்றாலும் குறைந்தது ஒரு பவுன் எடுக்க வேண்டும் என்றாலும் 25000 ரூபாய் ஆகிவிடும். அதனுடன் பட்டுச் சேலையும் எடுக்க வேண்டும் என்றால் அது ஒரு 10000 ரூபாய் ஓடிப்போய் விடும்.

எடுத்துக் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வார்கள்…? தீபாவளிக்கு என்ன செய்தார்..? உங்கள் அப்பா…! என்று அங்கே இரண்டு பேச்சுப் பேசுவார்கள்.

ஆகவே இப்படிப் பேச்சு இல்லாமல் இருக்க கடன் வாங்கியாவது அந்தத் தொல்லைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்னும் சில இடங்களில் கௌரவத்திற்கு ஒரு வாட்ச்… அப்புறம் ஒரு தங்கச் செயின்…! என்று வரிசையில் அடுக்கிக் கொண்டே போவார்கள். மருமகனுக்கு இப்படி மரியாதை செய்ய வேண்டும் என்பார்கள்.

1.”நரகாசுரனைக் கொன்ற நாள் தான் தீபாவளி” என்று சொல்லிக் கொண்டு
2.இருள் சூழ்ந்த நிலைகளை அந்த நரக வேதனைகளைத் தான்
3.தீபாவளி அன்றைக்கு அணைத்துக் கொள்கின்றோம்.

யாரும் இல்லை என்று மறுக்க முடியுமா…!

வேலை பார்க்கும் இடத்தில் தீபாவளிக்குப் போனஸ் வாங்குவதிலும் தகராறு. எப்படியோ வாங்கி வந்தவுடனே பட்டாசை வாங்கி வெடித்துத் தள்ளிவிட வேண்டும்.

அப்புறம் வட்டிக்குப் பணத்தை வாங்கி அவனுக்குக் கொடுத்தோம் இவனுக்குக் கொடுத்தோம் என்ற நிலையில் இது தனிக் கணக்கு.

பற்றாக்குறைக்கு கவனக்குறைவாகிப் போனது என்றால் பட்டாசு வெடிக்கும் பொழுது முகத்தில் பட்டுவிட்டது என்று டாக்டரிடம் போய் இன்னும் கொஞ்சம் வேதனைகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

1.தீபாவளி அன்றைக்கு பூனைக்குக் கொண்டாட்டம்….
2.எலிக்குத் திண்டாட்டம்…! என்கிற மாதிரித் தான் நாம் இருக்கின்றோம்.

இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றுக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தால் அவர்களுக்கு அந்தத் தீபாவளி திண்டாட்டம் தான். ஏனென்றால் தீபாவளி முடிந்த பின் வாங்கிய கடனைக் கட்ட முடியாத நிலை ஆகிவிடுகின்றது.

இந்த மாதிரி ஒவ்வொரு குடும்பத்திலேயும் தனக்கு வேண்டியதை “வரவுக்கு மீறிய செலவாக மாற்றி…” நமக்குள் துயரத்தை எடுத்துக் கொள்ளும் நாளாகத்தான் பண்டிகைகளை உருவாக்கி வைத்திருக்கின்றோம்.

அந்த நாளில் ஞானிகள் காட்டிய வழியில் மெய் உணர்வுகளைப் பெற்று வாழ்க்கையில் வரும் துயரத்தைத் துடைத்து சிக்கனமாக இருந்து இருள் சூழ்ந்த நிலைகளை அக்ற்றிச் சிந்திக்கும் திறனை ஒவ்வொருவரும் நாம் வளர்க்கின்றோமா…..?

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஞானிகள் தீப ஒளித் திருநாளைப் பற்றி மக்களுக்கு உணர்த்தியது என்ன…?

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் கெட்டதிலிருந்து மீட்டிக் கொள்ளும் உடலாக நம்மை அமைத்துக் கொடுத்தது நமது கண்கள் தான்…!

தன்னைத் தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட “பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்ற நிலையில் கூர்மையாக உற்றுப் பார்த்து தன்னை மீட்டிடும் உணர்வுகள் வளர்ந்து… வளர்ந்து… கூர்மையாகி…! நாம் வலுவாக ஆனதற்குக் காரணமும் இந்தக் கண்கள் தான்…!

தன்னை மீட்டிக் கொள்ளும் உணர்வுகள் கூர்மையான பின் அதனின்று வலுவான நாற்றத்தைப் பிளந்து நல்ல சக்தியை நுகரும் வராகனாகின்றது.

தீமைகளைப் பிரித்து நல்லதை நுகரும் சக்தியாக வலுவான நிலைகள் கொண்டு உயிர் நம்மை மனித உடலாக உருவாக்கினாலும் அத்தகைய இருள் சூழா நிலைகள் பெற ஒவ்வொரு நிமிடமும் நமக்கு வழி காட்டியது இந்தக் கண்கள் தான்…!

இப்படியெல்லாம் நம்மை நமது கண்கள் காத்து வளர்ந்து வந்த நிலையில் மனித வாழ்க்கையில் நாம் சந்தர்ப்பத்தால் வரும் கொடிய தீமைகளிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற
1.அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்
2.நம் “கண்ணின் நினைவாற்றலை…” விண்ணிலே கூர்மையாகச் செலுத்தி
3.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து (வராகனாக) நமக்குள் வலிமை பெற்றதாக ஆக்கி
4.நம் வாழ்க்கையில் வந்த அசுர சக்திகளைக் கொன்று
5.ஆறாவது அறிவின் துணை கொண்டு எந்தத் தீமையும் நமக்குள் இயங்காதபடி அடிமைப்படுத்தி
6.என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் தன்மையை நினைவுபடுத்தும் நன்னாள் தான்…
7.ஞானிகள் உணர்த்திய தீப ஒளித் திருநாள்…!

ஒவ்வொரு மாதமும் மக்களை ஒருங்கிணைக்கச் செய்து மகிழ்ச்சியாக வாழச் செய்வதற்குத்தான் ஞானிகள் பண்டிகைகளை பன்னிரெண்டு மாதங்களிலும் கொடுத்தார்கள்.

இனியாவது நாம் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிகளை இந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்..,!

Leave a Reply