நேரத்தில் “நல்ல நேரம்” என்றோ “கெட்ட நேரம்” என்றோ எதுவுமே இல்லை

நேரத்தில் “நல்ல நேரம்” என்றோ “கெட்டே நேரம்” என்றோ எதுவுமே இல்லை

 

ஜோதிடம் சொல்வதும் நாடி சாஸ்திரங்கள் எழுதுவதும்  இவையெல்லாம்

1.ஒருவன் கற்பித்த உணர்வும் இதனுடன் இணைத்துக் கொண்ட உணர்வும் எதுவோ

2.எவர் பதிவு செய்து கொண்டாரோ அந்தப் பதிவு செய்தோர் கொண்ட உணர்வு தான் இங்கே இயக்குகின்றது.

3.அதிலே நன்மை என்ற நிலைகள் வராது,

4.தீமை என்ற உணர்வுகளைப் பதிவு செய்து தீமையின் நினைவாற்றலைத்தான் கூட்டும்.

5.தீமை செய்யும் உணர்வே தான் வருமே தவிர ஞானிகள் தீமையைப் பிளந்த உணர்வுகள் இங்கே சிறிதளவும் வராது.

 

நாடி சாஸ்திரமானாலும் சரி சாஸ்திர விதிப்படி ஜாதங்கள் குறித்தாலும் சரி இப்படி உருவாக்கப்பட்ட நிலைதான்.

இயற்கையில் ஒரு மனிதனுக்கு ஜாதகம் இல்லை. ஜாதகம் கணிப்பது “மனிதன் எண்ணத்தில்தான்”.

1.எதை எதையோ கூட்டிக் கழித்து

2.எந்த உணர்வின் எண்ணங்களைப் பதிவு செய்தார்களோ

3.அந்தப் பதிவின் நிலைகளை நாம் “தலைவிதியாக” வைத்து

4.அதனை மீண்டும் “விதியாக” மாற்றி

அதன் வழிகளிலே தான் நாம் வருகின்றோம்.

நமக்குள் பழக்கப்படுத்திவிட்டால் ஆயிரம் தான் சொல்லுங்கள். மீண்டும் ஜாதகத்தைத் தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா? கெட்ட நேரம் வருகின்றதா? என்றுதான் தேடிச் செல்ல முடியும்.

நேரத்தை உங்களால் மாற்ற முடியாது. இந்த உடலுக்கு நல்ல நேரம் வேண்டும் என்று தேடி அலைவீர்கள். பதிந்த உணர்வுகளில் ஆசை ஓங்கிக்கொண்டு இருக்கும்.

அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக்கொண்டுதான் இருக்கும். தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும். பின் அதனின் நிலைகள் மனித உருவைச் சீர் குலையச்செய்யும் நிலைதான் வரும்.

1.ஒருவருக்கு மிகவும் உடல் நிலை சீர்கெட்டது என்றால் நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா…?

2.விபத்து நடந்த இடத்தில் அடிபட்டவர்களை நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா…?

3.மருத்துவமனைக்குச் சென்றபின் நல்ல நேரம் பார்த்து அந்த நல்ல நேரத்தில் தான் நோயாளியையும் அடிபட்டவரையும் மருத்துவர் பார்க்கின்றாரா…?

நமக்குப் பசிக்கும்பொழுது உணவை உட்கொள்கின்றோம். இயற்கை உபாதைகளையும் உடனே கழிக்கின்றோம். நேரம் காலம் பார்த்துக் கழிக்கின்றோமா…?

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, நாம் எதை நமக்குள் பதிவாக்கியிருக்கின்றோமோ அதுதான் இயக்குகின்றது.

நல்லதை எண்ணிக் கொண்டிருக்கும் நேரம் எல்லாம் நல்ல நேரம் தான். கெட்டதை எண்ணிக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் கெட்ட நேரம் தான். இது தான் என்னுடைய அனுபவம்.

Leave a Reply