நமக்காக வேண்டித்தான் ஆலயங்களுக்குச் சென்று வணங்குகின்றோம்… ஆனால் அந்தத் தெய்வம் நமக்கு எதைத் தர விரும்புகிறது என்று அந்தத் தெய்வத்தின் ஆசையை… எண்ணத்தை நாம் சிறிதளவாவது எண்ணுகின்றோமா…!

Desire of God

நமக்காக வேண்டித்தான் ஆலயங்களுக்குச் சென்று வணங்குகின்றோம்… ஆனால் அந்தத் தெய்வம் நமக்கு எதைத் தர விரும்புகிறது என்று அந்தத் தெய்வத்தின் ஆசையை… எண்ணத்தை நாம் சிறிதளவாவது எண்ணுகின்றோமா…!

 

கோவிலுக்குச் சென்று அவனுக்கு இரண்டு தேங்காய் பழத்தை வைத்து உடைத்தோம் என்றால் நம் காரியங்கள் அனைத்தும் நடக்கும். சிக்கல்கள் எல்லாம் சரியாகும் என்ற நிலையில் செல்வார்கள்.

விரதம் இருந்து இது எல்லாம் செய்த பின் “நினைத்தது நடக்கவில்லை” என்றால் என்ன சாமி இது…,?

நாம் எத்தனை நாள் விரதமிருந்தேன்…? எல்லாம் செய்தேன்…! எத்தனை நாள் தான் இந்தச் சாமி என்னைச் சோதிக்கிறது என்று பார்க்கிறேன்…! என்பார்கள்.

முதலில் சாமி கடவுள் என்று கும்பிடுவார்கள். கடைசியில் அதைக் “கல்” என்றே நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். கோவிலில் அப்படித்தான் நினைக்கின்றோம்.

அந்தச் சிலை தான் கடவுள் என்ற நிலைகளும் தெய்வம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோமே தவிர அந்த மெய் ஞானிகள் காட்டிய நிலைகளை எண்ணி எடுப்பார் யாரும் இல்லை.

நாம் எல்லோரும் சாமி சாமி என்று வணங்கினாலும் ஞானிகள் அந்தச் சாமி சிலை வைத்ததின் நோக்கத்தை எண்ணுவார் யாருமே இல்லை.

அருள் ஞானத்தை வாரி வழங்கும் அந்த ஞான ஸ்தானத்தில்

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்

2.அந்தத் தெய்வத்தின் சக்தியைப் பெறவேண்டும்

3.தெய்வீகக் குணத்தைப் பெறவேண்டும்

4.தெய்வீகப் பண்புகளைப் பெறவேண்டும்

5.மகரிஷிகள் பெற்ற மெய் ஞான சக்தி நாங்கள் பெறவேண்டும்

6.இந்த ஆலயம் வரும் அனைவருக்கும் இந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று

இதை எண்ணினாலே இந்த வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான எல்லாமே கிடைக்கும்.

ஆலயங்கள் காட்டப்பட்ட தெய்வமோ நமக்குப் அருள் ஞானப் பொக்கிஷத்தைத் தரத் தயாராக இருக்கின்றது. ஆனால் நாம் ஆதைப் பெறும் எண்ணம் இல்லாதபடி எதை எதையோ கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

“தெய்வத்திற்கு எல்லாமே தெரியும்…!” என்பார்கள். அப்படிப்பட்ட அந்தத் தெய்வத்திடம் அதனின் (தெய்வத்தின்) சக்தியை கேட்டுப் பெறும் எண்ணம் நம்மிடம் இல்லை.

எந்தவிதமான நோக்கமும் இல்லாமலா தெய்வத்தை ஞானிகள்  அங்கே வைத்துள்ளார்கள்…?

வரும் தீமைகள் அனைத்தையும் நீக்கக்கூடிய ஆற்றலையும் ஞானத்தையும் சக்தியையும் கொடுத்து நம்மை ஞானியாக உயர்த்துவதற்காக இருக்கும் தெய்வத்திடம் “எனக்கு அதெல்லாம் தேவையில்லை…! அன்றாடப் பிரச்சினைகளை மட்டும் நீ தீர்த்துக் கொடு…! அது போதும்…!” என்று வேதனைப்பட்டும் ஆத்திரப்பட்டும் துயரப்பட்டும் அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் கேட்டால் அதை எப்படி அந்தத் தெய்வம் கொடுக்க முடியும்…?

நன்றாக சிந்தித்துப் பாருங்கள். தீமையை நீக்கும் சக்தியை ஏங்கிப் பெற்றால் அந்த நல்ல சக்திகள் நமக்கு அங்கே கிடைக்கும். தீமைகளை எண்ணி வேதனைப்பட்டு தீமைகளைச் சொல்லி அதைக் கேட்டால் தீமைகள் தான் நடக்கும்.

கை அழுக்காகிவிட்டால் நல்ல தண்ணீரைத் தேடிச் செல்கிறோம். அழுக்குத் தண்ணீரைத் தேடுவோமா…? நல்ல நீரை விட்டுத் தூய்மையாக்கினால் தான் கை சுத்தமாகும்.

ஆகவே ஒவ்வொரு நிலைகளிலும் நம் வாழ்க்கையில் நல்லதைத் மறைக்கும் தீமைகளை எல்லாம் அகற்றிப் பழகுதல் வேண்டும்.

பிறர்படும் வேதனைகளைக் கேட்கின்றோம். “நல்ல உணர்வை அது மறைத்து விடுகின்றது”. அதை நீக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி இதைப் பிளத்தல் வேண்டும்.

ஒரு அணுவைப் பிளந்து அதை ஒருக்கிணைந்து அணு குண்டாகச் செய்து அதை வெடிக்கச் செய்கின்றனர். கல்லுக்குள்ளும் இரும்புக்குள்ளும் கதிரியக்கம் உண்டு.

தன் இனத்தைச் சேர்த்துச் சேர்த்து அந்த உணர்வின் தன்மை பரவப்படும் பொழுது ஒரு நொடிக்குள் இரும்பானாலும் கரைந்து காணாமல் போய்விடும். கல்லாக இருந்தாலும் உருகிக் காணாமல் போய்விடும். அதே கதிரியக்கம் தான்.

இதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்து அதனை நமக்குள் சேமிக்க வேண்டும்.

1.பின் உணர்வால் வளர்ந்த இந்த உடலை

2.இந்த உடல் பெறும் உணர்வைக் காணாது செய்துவிடும்.

3.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்து இருக்கும்.

அந்த மகரிஷிகள் எதைப் பெற்றார்களோ அதன் வழிக்குக் காரணப் பெயரை வைத்துக் காவியங்களையும் ஆலயங்களையும் அமைத்தார்கள்.

அதைக் கருத்துடன் ஏற்றுக் கொண்டால் அந்தக் கருத்தின் உணர்வு “உன்னை வாழ வைக்கும்…!” என்ற நிலைகளை நமது காவியங்கள் தெளிவுற எடுத்துரைத்துள்ளது.

 

Leave a Reply