சூட்சம சக்திகளைப் பெறச் செய்யும் இடம் தான் ஆலயங்கள் – ஆதி சங்கரர் சொன்னது

சூட்சம சக்திகளைப் பெறச் செய்யும் இடம் தான் ஆலயங்கள் – ஆதி சங்கரர் சொன்னது

 

“சூட்சமத்தில் இருக்கும் சக்தியை…!” ஆலயத்தில் அந்த உருவத்தைக் காட்டும் பொழுது காவியமாகப் படைத்ததை எண்ணத்தில் பதிவு செய்து நம் எண்ணம் கொண்டு தான் எடுக்க வேண்டும் என்று அன்று 2000 ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் உணர்த்தினார்.

ஆலயத்திற்குச் சென்று “எல்லோரும் நலம் பெறவேண்டும்” என்று நாம் எண்ணினால் “எல்லோரையும் நலமாக்கும் சக்தியாக…, நமக்குள் உருவாகிறது” என்று தான் ஆதிசங்கரர் சொன்னார்.

அவருக்குப் பின் வந்த சீடர்கள் என்ன செய்தார்கள்? (யாரையும் குறை கூறவில்லை).

குருவை மறந்தார்கள். மதத்தைக் காக்க எண்ணினார்கள். மடாதிபதியானார்கள்.

அதன் வழிகளில் தான் இன்றும் தெய்வத்திற்கு அபிஷேகத்தைச் செய்து ஆராதனை செய்துவிட்டு யாகங்களைச் செய்துவிட்டு அப்படிச் செய்தால் “அதற்காக மகிழ்ந்து தெய்வம் நமக்குச் செய்யும்” என்ற உணர்வை நமக்குள் பரப்பிவிட்டார்கள்.

ஆதிசங்கரர் உணர்த்திய மூலம் காலத்தால் மறைந்து போய்விட்டது. மெய்ப்பொருளை நாம் பெறும் தகுதியும் இழந்துவிட்டோம்.

1.உயிரைக் கடவுளாக்கி

2.நம் உடலை ஆலயமாக்கி

3.உணர்வைத் தெய்வமாக்கி அதுவே இறைவனாக்கி

4.அதன் வழியில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும்? என்று தான் நம் சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஞானிகள் காட்டிய வழிப்படி நாம் ஆலயத்தில் வழிப்பட வேண்டும். அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்

தெய்வ குணங்களை வளர்ப்போம். உலகைக் காக்கும் எண்ணங்களை நமக்குள் வளர்ப்போம். நம் மூச்சும் பேச்சும் “உலக நன்மை பயக்கும் சக்தியாக” வளரட்டும்.

உலக மக்கள் அனைவரும் அவர்கள் உயிரைக் கடவுளாக மதித்து மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று நாம் ஏகோபித்த நிலையில் இந்த உணர்வைப் பரப்புவோம்.

ஆலயங்களுக்குச் சென்று உலக மக்கள் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம் பிரார்த்திப்போம் தவமிருப்போம்.

ஆதிசங்கரர் சொன்னது போன்று சூட்சமத்தில் இருக்கும் ஆற்றல்மிக்க அருள் சக்திகளை எல்லோரும் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் தெளிந்து வாழ்ந்திட எண்ணுவோம்.

உலக மக்கள் அனைவரும் பேரருள் பெற்று பேரொளியாகி மரணமில்லாப் பெருவாழ்வாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்று வேண்டுவோம்.

ஆதிசங்கரரின் அருளாற்றல் மிக்க சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

Leave a Reply