மகரிஷிகளுடன் பேசுங்கள்

ஈஸ்வரபட்டர்

1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது?

நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது.

மனிதனுடைய ஆறாவது அறிவோ

எதையுமே சிருஷ்டிக்கும் வல்லமை பெற்றது.

ஆக, தீமைகளை நீக்கும் அத்தகைய ஆற்றல் நமக்குள் இருந்தாலும்

நாம் இப்பொழுது எதை சிருஷ்டிக்கின்றோம்?

 

வேதனை, சங்கடம், சலிப்பு, இன்றைக்கு என்ன செய்வது? நாளைக்கு என்ன செய்வது? நான் அவனுக்கு இப்படியெல்லாம் செய்தேனே என்ற இந்த விஷத்தைத்தான் நாம் அதிகமாக நமக்குள் சிருஷ்டிக்கின்றோம்.

 

சாதாரணமாக, யாராவது ஒரு சிறிய சொல்லைச் சொல்லிவிட்டால் போதும் தாங்க முடியவில்லை. அடிக்கடி வேதனைப்படுபவரைப் பார்த்தவுடனே, கை கால் குடைச்சல் இருக்கும். முதுகு வலி இருக்கும்.

 

பெண்கள் எல்லாம் பாசமாக இருப்பார்கள். “ஐயோ, என் பிள்ளை இப்படி இருக்கின்றானே, அவனுக்கு சரியாகப் படிப்பு வரவில்லையே” என்று இவர்கள் வேதனைப்பட்டால் போதும், உடல் வலிக்கும், நிச்சயம் தலை வலிக்கும்.

 

அதே போன்று மூட்டுக்கு மூட்டு வலிக்கும். எதாவது ஒரு பொருளைத் தூக்க வேண்டுமென்றால் முடியாது.

பெண்ர்கள் யார் யார் மேலே பாசமாக இருந்து

எதை எதை நினைத்து அவர்கள் செய்யவில்லையோ,

உடனே என்ன செய்யும்?

இந்த ஒரு தலைவலி அவர்களுக்கு வரும்.

அடிக்கடி தலைவலி வரும்.

2. நாம் சுவாசிக்கும் தீமையான உணர்வுகளால் தான் உடலில் வலி, நோய் வருகின்றது

அதே சமயத்தில், முதுகுத்தண்டு எலும்பு நான்காவது எலும்பில் வந்து கடுகடுப்பு அதிகம் வரும். ஏன் நான்காவது தண்டு எலும்பில் அப்படி வருகிறது என்றால் நம் எடையைத் தாங்கி இருப்பது அதுதான்.

 

அந்த நேரத்தில் டாக்டரிடம் போனால் எலும்பு தேய்மானம் ஆகிவிட்டது பேண்டேஜ் போடவேண்டும், பெல்ட் போட்டுத்தான் ஆகவேண்டும், இல்லையென்றால் இப்படித்தான் முதுகு வலி இருக்கும் என்பார்.

 

இதெல்லாம் நம் உணர்வால் ஏற்படக்கூடிய நிலைகள். நாம் எடுத்துக் கொண்ட சுவாசம் நஞ்சாக மாறி, பல நிலைகளைச் செய்கின்றது. இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றவேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

3. “முருகு” மாற்றி அமைக்கும் சக்தி நமக்கு உண்டு

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும். பின் பூமியின் வட கிழக்குத் திசையில் விண்ணிலே நினைவைச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தோடு ஒன்ற வேண்டும்.

 

உங்கள் அருளால் (நம் உயிரான ஈசனின் அருளால்) துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

 

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி

எங்கள் உடலில் உள்ள ரத்தங்கள் முழுவதும் படர்ந்து,

உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்று

உயிர் வழி கவர்ந்த அந்த ஆற்றல்மிக்க சக்தியை

கண்ணின் நினைவைக் கொண்டு

உடல் முழுவதும் படரச் செய்யவேண்டும்.

 

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படரவேண்டும் என்று எல்லா அணுக்களுக்கும் அந்த சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

 

அடுத்து, நம் உடலில் எங்கெங்கெல்லாம் வலியோ, வேதனையோ, அல்லது நோயோ அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகள் அங்கே படர்ந்து, தீமை செய்யும் அணுக்கள் ஒழிந்து நன்மை செய்யும் அணுக்களாக உருவாக வேண்டும் என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

4. மகிழ்வாகனா, மகிழ்ந்து வாழமுடியும்

எப்பொழுதெல்லாம் நமக்கு தீமைகள் வருகின்றதோ, அந்த நேரத்தில் இப்படிச் செய்து வந்தால் தீமைகளை வேக வைத்து அது நமக்குள் வளராமல் தடுக்க முடியும். மகிழ்ந்து வாழ முடியும்.

 

அதனால்தான், நமது ஆறாவது அறிவை சேனாதிபதி என்றும் 

முருகா என்று ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள். 

“முருகு” என்றால் மாற்றி அமைக்கும் சக்தி என்று பொருள்.

 

அதே சமயத்தில் மகிழ்வாகனா என்றும் உணர்த்தியுள்ளார்கள். தீமைகளை நீக்கினால் மகிழ்ச்சி என்ற நிலைகள் உருவாகின்றது.

 

ஆகவே, நாம் அனைவரும் தீமைகளை நீக்கி, உணர்வை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் ஆற்றல மிக்க சக்திகளை நமக்குள் சிறுகச் சிறுக சேர்ப்போம். அனைவரும் பெற தவம் இருப்போம்.

 

பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம். இந்த உடலுக்குப் பின் அழியா ஒளி சரீரம் பெறுவோம். என்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வோம். எமது அருளாசிகள்.

%d bloggers like this: