எத்தனையோ ரிஷிகளின் கூட்டு முயற்சி தான் இங்கே கொடுக்கும் போதனைகள்… நான் ஒருவன் மட்டும் அல்ல…

எத்தனையோ ரிஷிகளின் கூட்டு முயற்சி தான் இங்கே கொடுக்கும் போதனைகள்… நான் ஒருவன் மட்டும் அல்ல…

 

இப்பொழுது மெய் ஞானத்தின் தத்துவத்தை யான் (ஈஸ்வரபட்டர்) தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

மாமரத்தில் மரம் முழுவதற்கும் எல்லாக் கிளைகளிலும் கனிகள் ஒன்றைப் போல் கிடைக்கப்படும் நிலையில் மனித ஆத்மாக்கள் ஒத்து வாழ்ந்த நிலை தான் முந்தைய காலங்களில் இருந்தது.

அது மாறி அரசன் என்ற ஒருவரின் கீழ் ஆதிக்கம் பெற்று குடிமக்களாக வழி வந்த வாழையின் நிலையில் ஒரு மரம் ஈனும் குலையில் பல பழங்கள் உள்ள நிலை போன்று வழி வந்தது.

அதுவும் மாறி இப்பொழுதைய நிலையோ பலா மரத்தை ஒத்த ஜாதியின் மரம் ஒன்று தான் அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தில் ஒவ்வொரு பழத்திற்குள்ளும் பல சுளைகள் அடக்கம் பெற்றுள்ள நிலை போல் ஜாதி என்ற ஐக்கியப் பிணைப்புடைய நிலையாக இருக்கின்றது.

அப்படி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் “மெய் ஞான விழிப்பு…” என்ற நிலையில் பேருண்மைகளைக் கூறினாலும் சுழன்று கொண்டேயுள்ள ரங்கராட்டினத்தை உடனே நிறுத்தும் பொழுது அது அப்படியே நிற்காது. ஓர் அசைவு பட்டுப் பின்னோக்கி முன் வந்து தான் அதை நிறுத்துவது போல் தான்
1.சுழன்று கொண்டுள்ள இந்தப் பிணைப்பான வழி முறை மாற்றத்திலிருந்து
2.நம் மனித ஆத்மாக்களை அவர்களின் எண்ணத் தொடரையே சிறுகச் சிறுக வழிப்படுத்தித்தான்
3.உண்மையின் ஸ்வரூபத்தை உணர்த்திக் காட்டிடல் முடியும்.

ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு… மனித ஆன்மாக்களை ஞான மார்க்கத்திற்கு வழிப்படுத்தும் யோகமார்க்கங்களும் பக்திமார்க்கங்களும் மனிதனைத் தன் இச்சையில் வழிப்படுத்தும் நிலையிலேயே விட்டுவிட்டனர்.

பல மகான்கள் இந்த உலகிற்கு நல்வழி புகட்டப் பல வழிகளைச் செயல்படுத்தி வந்தாலும் ஈர்த்து எடுக்கும் பக்குவ குணமுள்ள மனித ஆன்மாக்களைச் செயலாக்குவது கடினப்பட்டுவிட்டது.

அதனால் தான் அந்த மகான்கள் தான் உணர்ந்த வழிகளை மட்டும் அனுபவக் கதையாக்கி கடைசியில் ஆண்டவன் என்றால் யார்…? என்று ஒரு ஞானத்தைப் புகட்டிவிட்டு இந்நிலை பெற மனித ஆன்மாக்கள் எந்த நிலை பெற வேண்டும் என்பதனை உணர்த்தாமல் சென்றுவிட்டனர்.

இவ்வளவு காலங்களுக்குப் பிறகு உம்மால் (ஈஸ்வரபட்டர்) உணர்த்தப்படும் நிலை என்ன…? என்ற வினா எழும்பலாம்.
1.இந்த நிலையை இப்பொழுது இங்கே உணர்த்துவது என்பது என் ஒருவனின் செயல் மட்டுமல்ல..!
2.இந்தப் பூமியில் அவதரித்து ஆண்டவனான சப்தரிஷிகள் பலரின் ஆவலை
3.இந்தப் பூமியின் ஆத்மாக்கள் உண்மை உணர்ந்து உயர போதனைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.

இதற்கும் வினா எழும்பலாம்… இப்பொழுது மட்டும் அது எப்படி என்று…?

1.எந்தச் சக்தி பரப்பப்பட்டதோ..
2.அந்நிலையில் ஏற்றுக் கொண்ட நிலைப்பட்டவரினால்…
3.பலருக்கும் நிலைப்படுத்த இச்செயல் நடந்து வருகின்றது.

ஒவ்வொரு ஆத்மாவும் “தன்னுள் உள்ள ஜீவத் துடிப்பே தான் ஆண்டவன்…!” என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

அந்த ஜீவனுக்கு ஜீவன் தந்த காற்றும்.. ஒளியும்.. நீரும்… கொண்ட ஜீவ ஆண்டவன்களை ஜோதி கொண்டு வணங்கியே வழித் தொடர் பெறும் நடை முறைச் செயல்களை உணர்த்திடுவோம்.