சித்தர்களின் சுவாச நிலை போல் நம் சுவாச நிலையும் இருத்தல் வேண்டும்

சித்தர்களின் சுவாச நிலை போல் நம் சுவாச நிலையும் இருத்தல் வேண்டும்

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்நிலை தான் நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் ஒருநிலைப்படுத்தி
3.பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூட வருகின்றது.

1.அவ்வாண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அந்நிலையை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே
2.நாம் நம்மையையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இந்நிலையைப் புரிந்து கொண்டு இந்நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அச்சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
3.உயிர் என்னும் ஆத்மாவிற்குப் பெரும் நிலையைத் தேடிடலாம்.

உயிர் குருவைச் “சைவ சித்தமாக்க வேண்டும்”

உயிர் குருவைச் “சைவ சித்தமாக்க வேண்டும்”

 

ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால் “வளர்ப்பிற்கே வழியில்லை…!”

ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.

1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
3.அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே – தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.

ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்… ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி… தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்…!”

மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை… அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக… அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3,மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.

தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்

தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்

 

“மதம்…” என்ற சொல்லின் முந்தைய நிலை மனித இனம் வாழ ஏற்படுத்தப்பட்ட “சமூக அமைப்பு” என்ற உலக வாழ்க்கை நிலை. ஆனால் இன்றோ மதம் என்ற சமூக அமைப்பே… “கடவுள்” என்ற பெயரால் ஒன்றுக்கொன்று ஏற்காது போர் முறையாகி ஆகிவிட்டது.

1.மனிதர்கள் உலகோதய ஆசைப் பிடிப்பில் சிக்குண்டு
2.இந்த உடல் வாழ்க்கையையே பிரதானமாகக் கருதி
3.ஆன்மாவை உயர்த்தும் அறிவின் ஆற்றல் குறைவுபட்டு
4.மனிதனின் எண்ணமே மீளாப் பிடிக்குள் ஆட்பட்டு
5.மீளும் வழி அறியும் செயலையே அறிய முடியாத காலங்களில்
6.மனித குலம் காக்கப்பட அவதார புருஷர்கள் அவதரித்த பூமி தான் நாம் வாழும் இந்தப் பூமி.

அன்று காட்டப்பட்ட நெறி முறைகளில் மனிதன் தன்னிலை உயர்த்த சுட்டிக் காட்டப்பட்ட அறிவின் ஆற்றல் அந்த மகான்களுக்குப் பின் வழி வந்த சீடர்களால் மதம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு விட்டார்கள்.

1.நாபிமனு முதல் வர்த்தமான மகாவீரர் வரை என்று சொல்லும் வரைமுறைகள் (பாரம்பரியம்) எல்லாம் எதற்கப்பா..?
2.வரையறையின்றிக் காட்டுவதே மதங்களின் பிடியில் அகப்படச் செய்வதற்குத்தானா…?
3.அந்த வரைமுறையை இன்று காட்டுபவன் அன்றைய நிலையைச் சிந்தித்தானா..?
மனித வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று சிந்தித்த நாபிமனு அதைச் செயல்படுத்த முனைந்து
1.ஞானப் பாதையை காட்டிய ரிஷப தேவர் (ஆதிநாதர்) வழியில் வந்த எத்தனையோ மகான்கள்
2.(தம் ஆன்மாவைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்கள்)
3.ஜீவ காருண்யம் நல்லொழுக்கம் நற்செயல் என்று போதித்த வழி முறைகள் எல்லாம் “மதம் கொண்ட…!” மதத்தினை வளர்க்கத்தானா…?

“ஜீன தீர்த்தங்கரர்கள் இத்தனை பேர் தான்…!” என்ற பட்டியல் கொடுத்து விட்டால் அதைக் கண்டு என்ன செய்யப் போகிறான்..? மீண்டும் மதத்தின் பிடியில் அகப்பட்டு தத்தளிக்கப் போகின்றான்.

வர்த்தமானர் பெற்றதும் ஓர் நல் நிலை தான்…! அவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட கடமை.. விதி… சரீரம் தொட்டுச் செயல்படுத்த முனையும் வாய்ப்பு இன்றைய பரபரப்பான உலகியல் வாழ்க்கை நெறியில் இல்லையப்பா…!

1.சன்னியாசிக்கு என்று ஒரு வழி முறையும்
2.சம்சாரிக்கு என்று ஒரு வழி முறையும் அன்று காட்டியவற்றில்
3.உணர்ந்து கொண்டார்களா அனைத்தையும்…? அவைகளிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது.

வர்த்தமானன் கடவுளையா சொன்னான்..? இல்லயே…! மதம் என்ற பெயர்படுத்த மனித ஆத்மாவின் வளர்ச்சியை அல்லவோ கூறினான்.

நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியானத்தின் வழி முறையில் காக்கப்பட வேண்டியது ஆன்மா தான் என்று கூறிட்டாலும் காக்கப்பட வேண்டியது சரீரமும் தான்,

அன்று சமுதாய அமைப்பில் மனித இனத்தின் எண்ணிக்கை குறைவு பட்ட காலச் சூழலில் மகான்கள் நடைமுறைக்குக் காட்டிய செயல்களைச் செயல்முறைக்குக் கொண்டு வரும் வழி வகைகள் இருந்தன.

ஆனால் இந்தக் கலியில் உடலை வருத்திடும் செயல்கள் தேவை தானா…?

உன் கண்ணிலிருந்து நீர் வழிகின்றது. மனம் வேதனைச் சூழலில் ஆட்படுகின்றது, மனம் சங்கட அலைகளில் சிக்குண்டிருக்கும் பொழுது ஆத்மா வேதனையுறாவிட்டால் உடல் வருந்திட நீர் வரக் காரணம் என்ன..?

துக்கம் சந்தோஷம் அனைத்துமே ஆன்மாவில் பதிவு நிலைகள் தான்.

1.மனித மன நடை முறைச் செயலுக்கு
2.நல் வாழ்வு நற்கதிக்கு இதை விட வேறு ஆக்கமில்லை என்ற நிலையில்
3.இந்தத் தியான வழி கொண்டு உண்மையை உன்னுள்ளே ஊன்றிப் பார்.

வாழ்க்கையில் நேரும் சந்தர்ப்பங்களை எல்லாம் நல்லதற்காகப் பயன்படுத்தப்படும் பொழுது அதிலே நிறைவு காணும் மனம் பெற்று விட்டால் தன் ஆன்மாவை உயர்த்தும் மெய் வழியை நிச்சயம் ஒவ்வொருவரும் உணரலாம்.

உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் நாம் பிறப்பு எடுக்கவில்லை

உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் நாம் பிறப்பு எடுக்கவில்லை

 

இந்தப் பூமியின் இயற்கைக் கதியுடன் வளர்ந்த பலா மரம் அது வளர்ந்து பலன் தருகிறது. அதனுடைய பலனாக ஒவ்வொரு தருணத்திலும் காய்த்துப் பல ஆண்டுகள் அந்த மரத்தினுடைய பலனை வெளிப்படுத்தியபின் அந்த மரம் பட்டு விடுகின்றது.

1.அந்த மரத்தின் பலனான பலாப் பழத்தின் சுவை பக்குவப்படும் நாள் இரண்டு தினங்களே (அறுத்த பின்)
2.அதனுடைய மணமும் சுவையும் அந்த இரண்டு தினங்களுக்குத் தான்…!
3.அந்த நேரத்தில் அந்தக் கனியை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்கின்றான்.

இரண்டு தினங்களுக்கு மேல் அப்படியே வைத்திருந்தால் அழுகிய துர்நாற்றமும் ஈ கொசு எறும்பு போன்ற பூச்சிகள் மொய்க்கத் தொடங்குகிறது. அதற்குப் பிற்பட்ட நாளில் அந்தக் கனியிலேயே புழுக்கள் புழுத்து விடுகின்றது.

பலாக் கனியின் பயனை இரண்டு நாளில் சுவையாக மனிதன் உட்கொள்கின்றான். அதே சமயத்தில் அந்த இரண்டு நாளிலேயே அதனைத் தன் உணவுக்காகப் பல நாட்கள் கெடாமல் பக்குவப்படுத்தும் வழியையும் மனிதன் செய்து கொள்கின்றான்.

பலா மரத்தின் கனியின் சுவையைச் சுவைப்பதற்காக மனிதன் அதனை மீண்டும் மீண்டும் பயிர் செய்கின்றான். மனித இனத்தின் உணவின் பெருக்கத்திற்கு வித்தாக்கி வளர்க்கின்றான்.

மனிதனின் பக்குவத்தால் பலா மரத்தின் வளர்ச்சியின் விகிதங்கள் பூமியின் இயற்கையில் கூடுகின்றது. ஏனென்றால் பலா மரம் தானாக வளரக்கூடிய நிலை அதிகம் இல்லை.

1.மனிதனின் செயல்பாட்டினால் பூமியின் இயக்கத்தில் தாவரத்தின் இனப் பெருக்கத்தை வளர்த்துக் கொள்வது போல்
2.உலோகக் கனி வளங்களின் வளர்ச்சியை மனிதனின் செயலால் இந்தப் பூமியின் இயக்கத்தில் வளர்க்க முடியவில்லை.

அதே போல் பூமியின் ஜீவ ஜெந்துக்களின் இன விருத்தியையும் நீர் நிலைகளில் வளரும் முத்துக்கள் போன்ற சில இனங்களையும் மனிதனின் செயல்பாட்டால் வளர்க்க முடிகின்றது.

1.பூமியில் உருவாகும் அனைத்துத் தனிமங்களையும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தும் மனிதனால்
2.அந்த உலோகத் தன்மையைத் தன்னுடைய செயலால் வளர்க்க முடியவில்லை விளைய வைக்கவும் முடியவில்லை.
3.ஆனால் இந்தப் பூமியின் ஜீவ நாடியே பூமிக்குள் விளையும் உலோகங்கள் தான்…!
(அதை விஞ்ஞானிகள் இது வரை உணரவில்லை)

ஆக இன்றைய மனிதனுடைய திறமை உயிரினங்களையும் தாவரங்களையும் தனக்கு உணவாக்கிக் கொள்ளும் தேவைக்காகச் செயல்பட்டு
1.அதனுடைய பெருக்கத்தின் வளர்ச்சிக்காகத்தான்
2.இன்றைய மனிதனின் ஞானச் செயலும் விஞ்ஞானமும் இந்தப் பூமியில் வளர்த்து வாழ்கின்றது.

இந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம் அந்த உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும்
1.மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால்
2.இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக” ஆகலாம்.

உலோகத்தின் சத்தைக் கொண்டு தான் இயற்கையின் கதியை இந்தப் பூமியின் பெருக்கத்தின் ஜீவ நாடியாக்க முடியும் என்பதனை மனிதனின் மெய் அறிவு இனிமேலாவது விழிப்படைதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதன் என்பவன் உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் இந்தப் பூமியில் பிறப்பு எடுக்கவில்லை. ஞானத்தின் பகுத்தறிவை மெய்யின் விழிப்படைந்து மனிதன் இந்தப் பூமியின் இயக்கத்தின் செயல் சூட்சமத்தில் சுழல வேண்டும்.

சூரியனும் பல கோள்களும் இந்தப் பூமியின் தொடர்புடன் சுழலும் பொழுது இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியில் வாழும் மனிதன் “இந்த மெய்யை அறிதல் வேண்டும்…!”

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆண்டவனா பொறுப்பாளி…?

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆண்டவனா பொறுப்பாளி…?

 

1.மனித எண்ணத்தின் வேகம் என்பது
2.இந்த உலகிலுள்ள எல்லா வேகங்களுக்கும் மேல் துரிதமான வேகம் என்று
3.பல முறை சொல்லியுள்ளேன்.

நம் எண்ணத்தைப் பிறரின் எண்ணத்தில் மோதவிடும் பொழுது பிறரின் நிலையும் மாறுபட்டுச் செயல்படும் தன்மை வலுவாகிறது.

இந்த எண்ணத்தை வைத்துத்தான் உலக நிலையும்… உயிர் உதிக்கும் நிலையும்… உடலை விட்டு ஆத்மா பிரியும் நிலையும்… எல்லாமே வருகின்றன.

இந்த எண்ணத்தில் நாம் எந்த நிலையில் ஆசைப்படுகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் வேதனையும் மகிழ்ச்சியும் வருகின்றன. எண்ணத்தின் ஆசையை வளர விடுவதனால் பல வேதனையான நிலைகளை நம் வாழ்க்கை நிலையில் கண்டு வேதனைப்படுகின்றோம்.

இந்த எண்ணத்தினால் தான் எல்லா நிலைகளுமே வருகின்றன என்றேன்.
1.இந்த எண்ணத்தை வைத்தே ஒவ்வொரு ஆத்மாவும் அந்த உடலில் இருக்கும் நிலை கொண்டு
2.தன் எண்ணத்தை “ஓ..ம் ஈஸ்வரா…” என்ற நாதம் கொண்டு
3.ஒரே நிலையில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
4.இந்த உடல் வேறு… இந்த ஆத்மா வேறு…! என்ற நிலையைக் கண் கூடாகக் கண்டிடலாம்.
(சீராகத் தியானமிருப்பவர்களால் இதை நிச்சயம் உணர்ந்திருக்க முடியும்)

நம் ஆத்மாவின் நிலையை நாம் போற்றிப் பாதுகாத்தால் வாழ்க்கை நிலையில் நாம் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியதில்லை. ஏனென்றால் நம்மையே நாம் உணராத நிலையில்
1.பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது
2.பிறரின் அன்புக்கும் நம் ஆன்மாவை நாம் அடிமையாக்கிக் கொள்கிறோம்.
3.அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசை நிலை தான்.

ஆண்டவனையே ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். அந்த ஆண்டவன் நமக்கு எப்படி அன்பைப் பொழிவான்…?

நம்முள் அதிக ஆசையை வளரவிட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
1.நம்முள்ளேயே சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
2.நம்மையே நாம் வெறுக்காமல்
3.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
4.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து
5.நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளேயே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் அவ்வாத்மா அமைதியுற்று அந்த ஆண்டவனின் சக்தியே
8.நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.

நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்த நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடலாகாது.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு அந்த ஆண்டவனா பொறுப்பாளி…? நம்மில் இருக்கும் ஆண்டவனைக் கண்டிட நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அப்பொழுது தான் அந்த ஆண்டவனின் ஜெபத்திற்கும்
2.ஆண்டவனின் ஆசியைப் பெறுவதற்கும் உகந்தவர்களாகின்றோம்.