தீமைகளை நீக்கக் கண்ணன் காட்டும் திருட்டு வழி

தீமைகளை நீக்கக் கண்ணன் காட்டும் திருட்டு வழி

 

இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர் துடைக்கக் கேட்டுணர்ந்த அந்தத் துயரமான உணர்வுகள் நமக்குள் வந்த பின் அந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.

பின் அது ஓங்கி வளர்ந்து விட்டால்
1.நம் உடலை… மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை
2.அது செயல்படாது தடுத்து விடுகின்றது.
3.அதனால் உடல் நலிந்து… உணர்வுகள் குறைந்து… எண்ணங்கள் நலிந்து…
3.நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

இதிலிருந்து நம்மைக் காத்திட… இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் ஆத்ம சுத்தி செய்வோம் என்றால் நம்மைக் காத்திட முடியும்.

அதற்காக வேண்டித்தான்,,,
1.அந்த அருள் ஞானிகள் கண்டுணர்ந்த இந்த உணர்வின் சாரத்தை
2.உங்களுக்குள் காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
3.அதை வலுப் பெறச் செய்யும் நிலைக்கு இதை யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

மாமகரிஷி வியாசர் காட்டிய அருள் வழியில் கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு, “அதோ வருகின்றான் நாரதன்…!” என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திச் செயல்படுகின்றோம்.

1.நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி…
2.இப்போது உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றச் செய்ய வேண்டும்.

உயிரான கண் அகக்கண்… நம்முடய கண் புறக்கண். புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.

நம் உடலான சிவத்திற்குள்…
1.உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில்
2.புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி,
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
4.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
5.உள் நினைவில் கண்களை மூடி
6.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படர வேண்டும்” என்று செய்வதே கண்ணன் காட்டிய திருட்டு வழி.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு இந்த உணர்வுகளை (மகரிஷிகளின் உணர்வுகளை) உள் செலுத்தும் போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்”

அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெறச் செய்து அது வளர்ச்சியாகும் பொழுது
1.நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கும் பொழுது
2.அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருவதைப் போன்று
3.அந்த மணத்தின் வீரியத் தன்மை (ஞானிகளின் அருள் சக்தி) உள் நின்று வெளி வருவதை
4.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

முதலிலே சொன்ன… பிறர் துயர் துடைக்க எடுத்துக் கொண்ட துயரமான உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்க்கும் முன் நம் ஆன்மாவாக மணமாக மாறுகின்றது.

அது மடி மேல் ஆன்மாவாக இருந்தாலும்
1.நாம் கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணான கண்ணின் நினைவுகளை உள் செலுத்தப்படும்போது நாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்…!

அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவதை மடி மீது நம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையைப் பிளக்கின்றது.

இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்தால் எத்தகைய தீமைகளையும் நாம் பிளக்க முடியும். நாம் செய்த நன்மை நிலைத்திருக்கும். நமக்கும் உயர்வைத் தான் தரும்.

கணஹோமம்

கணஹோமம்

 

எந்த ஆலயத்திற்குள் நாம் சென்றாலும்…
1.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும்
4.எங்கள் அனைவரது உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
6.ஆலயத்திற்குள் வருவோருக்கெல்லாம் நல் வாழ்வு கிடைக்க வேண்டும்
7.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தான் உண்மையான பக்தி…!

இதைக் கணங்களுக்கு அதிபதி ஆக ஆக்கினால் கணஹோமம்…!

கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் என்று எப்படிச் செய்கின்றோமோ அது போல்
1.புருவ மத்தியில் இருக்கும் உயிருக்குள் அருள் உணர்வுகளை எடுத்து… அதை உயிரான நிலைகள் கொண்டு ஹோமம் ஆக்கி
2.அந்த அருள் உணர்வின் தன்மைகளை உடலுக்குள் பரப்பி
3.அதிலே வரும் மணத்தின் தன்மையை வெளிப்படுத்தி
4.எல்லோரும் போற்றும் நிலையாக… நம்மைப் பார்க்கும் பொழுதே மற்றவர்களுக்கு அந்த மகிழ்ந்த நிலை வர வேண்டும்.

இதைத் தான் ஒவ்வொருவரும் தனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் இந்தப் பரமான பூமியில்
1.பரமாத்மாவைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாகவும்
2.நமது ஆன்மாவைத் தெளிவுபடுத்தும் நிலையாகவும்
3.நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவை உயர்வுபடுத்தும் நிலையாகவும்
4.நம் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதும் ஆகும்.

ஆகவே இருளைப் போக்கி… ஒளி பெறும் நிலைகளாக உருவாக்குவதுதான் பக்தி. இதைத்தான் நாம் தியானமாக இருக்க வேண்டும்.

தனித்துத் தியானித்தாலும்… மேலே சொன்ன நல்ல ஒழுக்கத்தைத் தனக்குள் சேர்க்க்கவில்லை என்றால் அந்தத் தியானம் கைகூடாது.

அருள் ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்து… அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வை நமக்குள் தெளிவாக்கி… அதனின் நினைவு கொண்டே வாழ்க்கையில் கடைப்பிடித்து வர வேண்டும்.

வாழ்க்கையில் எத்தகைய தீமை செய்வோரைக் கண்டாலும்
1.அதனின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாக்கி விடக்கூடாது.
2.அவர் நிலைகளைப் பகைமையும் ஆக்கிவிடக் கூடாது.

நாம் மற்றவர்களுக்கு நல்லதையே செய்கின்றோம் வைத்துக் கொள்வோம். நம்மிடம் உதவி பெற்றவர்களில் ஒருவரைப் பார்த்தவுடன் அவரைக் கூப்பிடுகின்றோம்.

ஆனால் அவரோ ஏதோ அவசரத்தில் போகின்றார். (அது நமக்குத் தெரியாது…!) நம்மிடம் வரவில்லை. அப்பொழுது நாம் என்ன நினைக்கின்றோம்…?

அன்று என்னிடம் காசு வாங்கும் பொழுது என்னை மதித்தார். இப்பொழுது பார்… அவர் பாட்டுக்குப் போகின்றார்… கொஞ்சம் கூடக் கவனிக்காது செல்கிறார்…! என்று அவர் மேல் வெறுப்பை ஊட்டிக் கொள்கின்றோம்.

இத்தகைய வெறுப்பு நமக்குள் வளராது அந்தப் பகைமையற்ற நிலைகளாக உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள் அன்று ஞானிகள்.

அந்த ஆலயத்திற்குச் சென்று…
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு
2.நம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதும் ஜீவாத்மாவைத் தூய்மைப்படுத்துவதும் தான் கணஹோமம் என்பது.

ஆனால் அபிஷேகம் என்ற நிலையில் அங்கே ஆராதனை செய்து விட்டுக் கணஹோமம் என்று நெருப்பிலே பல பொருள்களைப் போட்டு வேக வைத்தால் இது தான் பக்தி என்று இன்று செய்கின்றோம்.

இப்படி மறைமுகமாக எடுத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு “காசை விட்டெறிந்தால் ஆண்டவனை விலைக்கு வாங்கலாம்…” என்று இறுமாப்புடன் செய்யக் கூடியவர்களும் மந்திரத்திலே சிக்கி… அடுத்தவன் கையில் சிக்கி… அவர்களுக்குப் பொருள் தேடும் நிலைகளுக்குத் தான் பயன்படுவார்கள். ஆக அவனும் அழிந்து இவனும் அழிந்தது போன்ற நிலைள் தான் ஏற்படும்.

யார் மந்திரத்தை ஒலித்தாலும் சரி… அல்லது அதைக் கேட்டாலும் சரி… அதன் நிலையிலே தான் சிக்க முடியும்… அதிலிருந்து தப்ப முடியாது.

நம்முடைய பற்று அதுவாக இருக்கக்கூடாது. ஞானிகள் காட்டியது அது அல்ல…!

ஆக… அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கி அந்தப் பக்தி கொண்டு யாரெல்லாம் எண்ணுகின்றார்களோ அந்த உணர்வு கொண்டு தான் அங்கே விண் செல்ல முடியுமே தவிர இங்கே சுற்றிக் கொண்டிருப்பதற்கு அல்ல…!

1.பிறர் நலமுடன் வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுங்கள்… இந்தப் பக்தியை கூட்டுங்கள்.
2.தீமையாகப் பேசுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
3.அவரும் உண்மையை அறியும் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4,அதைச் செயல்படுத்துங்கள்… இது தான் தியானம் என்பது.

ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காத்திடும் சக்தியாகப் பெருகட்டும். உங்கள் உணர்வுகள் மற்றவர்களின் தீமையை அகற்றும் சக்தியாக வளரட்டும்.

இதன் வழி செயல்படுவோர் பேரின்பப் பெருவாழ்வு பெற்று ஒளியின் சரீரம் பெற்றுப் பிறவி இல்லா நிலையை அடைவீர்கள் (ஞானகுரு).

அகண்ட அண்டத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் அவசியம் பெற வேண்டும்

அகண்ட அண்டத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் அவசியம் பெற வேண்டும்

 

1.2000 சூரியக் குடும்பத்திற்குள் விளையும் அந்த உணர்வின் தன்மையையும்
2.அந்த அண்டத்திலிருந்து வரக்கூடிய கோள்களின் உணர்வுகளையும் ஊடுருவி
3.துருவ தியானத்தின் மூலம் வலுக் கொண்டு எடுத்து அதை நாம் நுகர முடியும்.

அதை நுகர்ந்து சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொண்ட பின் அதனின் வலுக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் தனது உணர்வின் தன்மை வளரச் செய்து கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இவ்வாறு நாம் வளர்ந்த பின் அந்த அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று பெரும் சக்தியாகத் திகழ முடியும்.

1.ஒன்றின் பின் ஒன்று வளர்ச்சி அடைவதும்
2.ஒன்றில் சிக்குண்டு ஒன்றுக்குள் மடிந்து அது மாற்றங்களாவதும்
3.இயற்கையின் உண்மை நிலைகள் மாறிக் கொண்டு வரும் இந்த நேரத்தில்
4.உயிருடன் ஒன்றிய உணர்வுகள ஒளியாக மாற்றிடும் நிலையாக
5.அனைத்தையும் அறிந்திடும் அருள் சக்தி பெற்ற நாம் அந்த அகண்ட அண்டத்தின் சக்தியைச் செயல்படுத்துவோம் என்றால்
6.இந்த வாழ்க்கையில் என்றுமே ஏகாந்த நிலை என்ற நிலைகளில் வாழ முடியும்
7.அது தான் நமக்கு நிரந்தரமானது…!
8.இந்த உடல் நிரந்தரமானதல்ல… நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமும் நிரந்தரமானது அல்ல.

ஆகவே நம் உயிரின் உணர்வுடன் ஒன்றி அருள் உணர்வுகளை வலுக் கொண்டதாகச் சேர்க்க வேண்டும்.

அதைத் தான் இந்தப் பூமிக்கு ஓசோன் திரை என்றும் சூரியனுக்கு ஓசோன் திரை என்றும் மற்ற கோள்களுக்கும் அதனதனதற்குத் தக்கவாறு அந்தப் பாதுகாப்புக் கவசம் இருக்கின்றது.

ஆடு மாடுகளுக்கும் அது ஓசோன் திரையாக உள்ளது. ஏனென்றால் அது தன் உணர்வை மாற்றி விடாதபடி தனக்குள் எடுத்துக் கொள்வதும் இருந்தாலும் மற்றொன்று ஊடுருவிச் செயல்படுத்தும் பொழுது அதனுடைய மாற்றங்களானால் பல நோய்கள் ஆகி அது கெடுவதும் போன்ற நிலை ஏற்படுகின்றது.

நம் பூமிக்கும் இதே போன்று தான் அது நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பற்ற நிலைகளாகி… தீமையின் உணர்வுகள் ஊடுருவும் போது மாற்றமடைந்து ஓசோன் திரை கிழிகின்றது.

1.இருந்தாலும் இதை எல்லாவற்றையுமே பிளந்து
2.எதையுமே தகர்த்து எறியும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம்.
3.அது எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
4.அதை நாம் பெறுதல் வேண்டும்… நமக்குப் பாதுகாப்புக் கவசம் அது தான்…!

உதாரணமாக சர்க்கரை ஆலைகளில் சர்க்கரைப் பாகு உற்பத்தி செய்யும் போது அதிலே சில கெமிக்கல்களைப் போட்டு அது போகும் போதே அதில் உள்ள அழுக்கை பிரித்துவிட்டு தூய்மையான சர்க்கரையாக மாற்றுகின்றார்கள்,

அது போன்று தான் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து ஒவ்வொரு நொடியும் நமக்குள் தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மையாக ஒவ்வொரு அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்க்கும் பழக்கம் வர வேண்டும்.

நமக்குள் தீமைகளை மறந்து நமது உணர்வின் தன்மையை அது வருகின்றது

ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் சரியாகவில்லை… என் காரியங்கள் தோல்வி அடைந்து விட்டது… என் பையன் இப்படி இருக்கின்றானே…! என்றே எண்ணுவார்கள்.

இப்படி எண்ணுவதற்கு மாறாக… பையன் இப்படித் தான் நல்லவனாக வர வேண்டும் எங்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் உட்புகாது மன உறுதியும் மன வலிமையும் பெறும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சோர்வோ சங்கடமோ வந்தால் அதை எல்லாம் மறந்துவிட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து நாம் பழகிக் கொண்டால் அந்தச் சோர்வு அகலும். புதிய உணர்வு நமக்குள் தோன்றும்.

பரிவு பண்பு கொண்டவர்கள் பிறருடைய துன்பங்களைக் கேட்க நேர்ந்தால் அது எல்லாம் அவர்கள் உடலில் எளிதில் ஊடுருவிவிடும்.

அப்பொழுது பூமிக்கு ஓசோன் திரை எப்படிக் கிழிகின்றதோ இதைப் போல நமது ஆன்மாவில் இருக்கும் நல்லதைப் பிளந்து விட்டு உள்ளுக்குள் சென்று விடுகின்றது.

உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளைக் குறைவாக்கச் செய்கின்றது. அதனால் நம் உடலில் வேதனை ஏற்படும் நிலையும் நல்ல சிந்தனையை மாற்றிடும் நிலைகளும் வருகின்றது.

1.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட குருநாதர் கொடுத்த அருள் வழிப்படி
2.இந்த உலகத்தையும் அகண்ட அண்டத்தையும் அறியக் கூடிய சக்தியையும்
3.தீமைகளை அகற்றக் கூடிய வல்லமைகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று
4.உங்களுக்குள் துரிதமான நிலைகள் கொண்டு அரும் பெரும் சக்திகளைப் பதிவு செய்கிறேன்.
5.இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானம் செய்யும் போது நம் உடலுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்கள்

துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானம் செய்யும் போது நம் உடலுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்கள்

 

ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உயிர் வழி கவர்ந்து புருவ மத்தியில் ஏங்கி தியானியுங்கள்.

இப்பொழுது உயிரிலே அந்தச் சக்திகள் ஈர்க்கப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு மோதும் பொழுது அங்கே வெளிச்சம் வரும். இந்த உடலுக்குள் மகிழ்ச்சி வரும்.

1.உடலுக்குள் தீமை இருந்தால் எரிச்சல் வரும்… அது குறையும்… அந்தத் தீமை நீங்கும்.
2.எப்படி நெருப்பிலே ஒரு விஷத்தின் தன்மை பட்டால் அதிலிருந்து புகை வெளி வருகின்றதோ அதைப் போல
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலில் படும் பொழுது
4.தீமை என்ற உணர்வுகளைக் கருக்கி வெளி வரும்போது அந்த உணர்ச்சிகள் தெரியலாம்.
5.தீமைகள் அகலும்… நன்மைகளை உணர முடியும்… நன்மைகள் பெருகும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இவ்வாறு எண்ணி ஏங்கித் தியானியுங்கள். இது உங்களுக்கு ஒரு பயிற்சி…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இத்தகைய வீரிய உணர்வுகள் பெருகும் பொழுது அது ஓரளவுக்கு நம் இரத்தத்தில் உள்ள தீய அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் கோபம் குரோதம் பயம் ஆத்திரம் போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்தால்
1.அது உமிழ் நீராக மாறி அதுவே இரத்தமாக மாறி
2.இரத்தத்தில் அந்தந்த உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக – “கரு முட்டைகளாக…” விளைந்து விடுகின்றது.

ஏனென்றால் இப்படி அது எது விளைந்ததோ அதன் உணர்வை அது இயக்கும். தீமையான உணர்வாக அது இயக்கத் தொடங்கும்.

அதை மாற்ற வேண்டும் என்றால் அந்தக் கருமுட்டைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த… அண்ட நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஒரு தட்டான் பூச்சி தான் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு எந்தப் பூ மீது அமர்ந்து தன் முட்டைகளை இடுகின்றதோ அந்தப் பூவைப் போல நிறம் கொண்ட ஒரு பட்டாம் பூச்சியாக வருகின்றது.

தட்டான் பூச்சி தான் பல வண்ணங்களில் பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. நெல் செடிகளில் தட்டான் பூச்சி முட்டை இட்டால் நெல் பூச்சிகளாக உருவாகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பரவச் செய்து
1.இரத்த நாளங்களில் உள்ள அந்த அணுக்கருக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணையச் செய்தால்
2.அது நல்ல கரு முட்டையாக மாற்றி நல்ல அணுக்களாக நமக்குள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதன் வழியில் உடலிலே நோய் வராது தடுக்க முடியும். பகைமைகளையும் வேதனைகளையும் அகற்றிக் கொள்ள முடியும்.

முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவது தான் நம் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்

முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவது தான் நம் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானப் பயிற்சி கொடுக்கின்றோம் (ஞானகுரு).

இந்தப் பயிற்சி மூலம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுப்படுத்திக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிர் ஆன்மாக்களை விண் செலுத்துவது தான் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நம்மைக் காக்க… நம்மை வளர்க்க… அவர்கள் எத்தனையோ வேதனைப்பட்டு இருக்கின்றார்கள். அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் கூட்டி அந்த ஆன்மாக்களின் விண் செலுத்துவதே முறை…!

நம்முடைய முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில்
1.சந்தர்ப்ப பேதத்தால் விபத்துக்களில் சிக்கி இருப்பார்கள்…
2.ஒரு சிலர் தற்கொலை கொலை கூடச் செய்திருப்பார்கள்…
3.எத்தனையோ வகையான சாபங்கள் இட்டும் அவர்கள் மடிந்து இருக்கலாம்.

இதைப் போன்ற உணர்வுகள் குல வழி என்று தொடரப்படும் போது குடும்பங்களில் கர்ப்பமுறும் தாய் கருவிலே இது இணைந்து பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

அப்படிப் பிறக்கும் குழந்தைகளின் குடும்பங்களில் ஏராளமான இன்னல்கள் வந்து விடுகின்றது. பிறக்கும் குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் இது போன்று இயக்கமாகின்றது.

ஆகவே எந்த வழியில் முன்னோர்கள் உயிரான்மாக்கள் உடலை விட்டுச் சென்றிருந்தாலும் அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால்
1.அவர்களை அறியாது இயக்கிய விஷத்தன்மைகள்…
2.அவர்களை மாய்க்கச் செய்த அந்த விஷத்தின் தன்மைகளை
3.கூட்டுத் தியானங்கள் மூலம் விண் செலுத்த முடியும்… சப்தரிஷி மண்டலத்தில் இணைக்க முடியும்.
4.ஏனென்றால் அவர்கள் கடும் விஷத்தையும் முறித்தவர்கள்.

குடும்பத்தில் இருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பாகத் தியானித்து எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளி அங்கே அனுப்பப்படும் பொழுது அந்த அலைகளுடன் கலந்து விஷத்தின் தன்மை குறைந்து விடுகின்றது.

முன்னோர்கள் துர்மரணமடைந்திருந்தாலும் கூட அவர்கள் ஒளி உடல் பெறுகின்றனர். துர்மரணத்திற்குக் காரணமான அந்த உணர்வுகளும் மடிந்து விடுகின்றது. அவர்கள் ஒளி உடல் பெற்றுச் சப்தரிஷி என்ற நிலை அடைகின்றனர்.

இப்படி அடையச் செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் (துயரப்பட்டது நோய்வாய்ப்பட்டது) நம்மிடத்தில் பதிந்திருந்தாலும் இருளை நீக்கிப் பொருள் காணும் உணர்வாக அது செயல்படுத்தும்.

குடும்பத்தில் நமக்குத் தெரியாமல் அறியாமலே சூட்சமத்தில் எத்தனையோ வகையில் தீமைகள் நடக்கின்றது.

காரணம் பாசமும் பற்றும் கொண்டு இருந்தாலும் நம்முடன் வாழும் போது நோய்வாய்ப்பட்டிருந்தார் என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் உடலை விட்டுப் பிரிந்த பின் யார் மீது பற்று உள்ளதோ அந்த உடலுக்குள் வந்து அவர் உடலில் இருந்த தீமைகளும் இங்கே இயக்கத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலை ஆகாதபடி நாம் தடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்தவர்கள் எந்த நேரம் உடலை விட்டுச் சென்றாலும் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையாக அவர்களை ஒளியின் தன்மை பெறச் செய்ய வேண்டும்.

நம் தூதுவராக அங்கே விண்ணுக்கு அனுப்பினால் அவர்கள் முதலில் ஒளி உடல் பெறுகின்றனர். அடுத்து நாமும் பிறவியில்லா நிலை அடையலாம். வழி வழி நாம் இதைச் செய்தால் இதன் வழி சீராக வருகின்றது.

ஆனால் “எங்களுடன் வாழ்ந்தீர்கள்… சம்பாதித்துக் கொடுத்தீர்களே… இப்படி எங்களை விட்டுப் போய்விட்டீர்களே…!” என்று பாசத்துடன் எண்ணினால் அந்த ஆன்மா நமக்குள் வந்து அவர் பட்ட கஷ்டத்தை நமக்குள்ளும் இயக்கும்.

இந்த உடலுக்குள் வந்து மீண்டும் வேதனையைத் தான் வளர்க்கும். இந்த உடலை விட்டு வெளியிலே செல்லும் போது கடைசியில் மனிதனல்லாத உயிரினமாகத் தான் பிறக்கும்… நம்மையும் அதே வழியிலே வீழ்த்திவிடும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மூதாதையர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம். அதற்கு அந்த அருளைப் பெறுவோம்.

1.இதைச் செய்வதற்குக் காசு பணம் எதுவும் தேவையில்லை
2.எல்லோருக்கும் அனுமதி கொடுக்கின்றோம்… தாராளமாகச் சொல்கின்றோம்
3.உங்களால் முன்னோரை விண் செலுத்த முடியும்
4.தீமைகளை நீக்க முடியும்… நன்மைகளைப் பெற முடியும்
5.ஆகவே நன்மை பெறும் சக்தியைத்தான் கொடுக்கின்றோம்.

திட்டியவனை எண்ண்ணும் பொழுது… அது தீமைகளைத் தான் செயல்படுத்தும். வேதனைப்படுவோரை எண்ணும்போது அது வேதனைப்படுத்தும் உணர்வாக வருகின்றது… மற்றவர்களையும் வேதனைப்படுத்தும் நிலைதான் வருகின்றது.

அதே போன்று
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால்
2.தீமையை நீக்கும் அருள் சக்தியாக நிச்சயம் வளரும்.

கடலிலே செல்லப்படும் பொழுது அதிலே எத்தனையோ அலைகள் வருகின்றது. அதிலே ஒரு தீவிற்குப் போக வேண்டுமென்றாலும் அந்த அலைகளைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் பெரிய அலை வந்து விட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்.

ஆக… உங்கள் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் கோபமும் போன்ற கடினமான அலைகள் வரும் போது அதிலே நீங்கள் கவிழ்ந்து விட்டால் கோபப்பட்ட உடலுக்குள்ளோ அல்லது வெறுப்படைந்த வேதனை அடைந்த உடலுக்குள்ளோ சென்று அங்கே அதே தீமைகளைத் தான் வளர்க்க முடியும்.

இதையெல்லாம் கடந்து வர வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தைத் துடுப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த மனித உடலில் பெற்ற பாவங்களை நீக்க முடியும். பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

ஆகவே தீமையை நீக்கும் ஒன்பதாவது நிலையிலிருந்து பத்தாவது நிலையான கல்கி ஒளி நிலை அடையக்கூடிய தகுதி பெற்றால் விஜய தசமி.

1.விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் வந்து
2.ஒளியின் உணர்வாக மாறி விண்ணிலே மீண்டும் ஐக்கியமாகி
3.என்றும் ஏகாந்த நிலைகள் பெறுவதுதான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த மார்க்கம்…!

அதிகாலையில் தினசரி எடுக்க வேண்டிய உண்மையான விரதம்

அதிகாலையில் தினசரி எடுக்க வேண்டிய உண்மையான விரதம்

 

உதாரணமாக நம்மிடம் ஒருவர் கடன் வாங்கிச் சென்ற பின் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் “அவர் எனக்குத் தொல்லை கொடுக்கிறார்…” என்று தான் எண்ணுகின்றோம். கோபமும் வேதனையும் படுகின்றோம்.

கடனைத் திரும்பக் கொடுக்க முடியவில்லை என்று அடிக்கடி அவர்களும் வேதனைப்பட்டால்
1.அந்த உணர்வுடன் வியாபாரம் செய்தால் நஷ்டம்தான் வரும்… வியாபாரம் ஆகாது…!
2.அவர்களுக்கு வியாபாரம் ஆகவில்லை என்றால் நமக்கும் பணம் வராது.
3.இத்தகைய நிலையில் நாம் அவர்களைத் தேடிச் சென்றாலும்
4.பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களைச் சாபமிடும் நிலைகள் தான் வருகின்றது

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று முதலில் நாம் தியானிக்க வேண்டும்.

பின்… நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
1.அவர் குடும்பத்திலுள்ளோர் அந்தச் சக்தி பெற வேண்டும்
2.அவர் செய்யும் தொழில் முழுவதும் படர வேண்டும்
3.அவருடைய தொழில் நன்கு விருத்தியாக வேண்டும்
4.அவருடைய வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்
5.அவருக்குத் தொழிலில் லாபம் வர வேண்டும்
6.நம்மிடம் வாங்கிச் சென்ற பணத்தினைத் திரும்பக் கட்டும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்
7.அவர்களும் நன்றாக ஆவார்கள்… வர வேண்டிய பணமும் வந்து சேரும்.

இந்த முறைப்படி அவரை எண்ணி நாம் தியானிக்கும் போது அவர் மேல் பட்ட வேதனையோ கோபமோ நமக்குள் அணுவாக உருவாகாது… நோயாகவும் மாறாது… நம்முடைய வியாபாரமும் கெடாது.

ஆனால் கடனை அவர் திரும்பக் கொடுக்கவில்லை என்று வேதனைப்பட்டால் நம் வியாபாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கிறது. மன நோயாகி உடல் நோயும் ஆகின்றது.

ஆகவே நம் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்ற நிலையில் பயன்படுத்தி அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து மேலே சொன்ன மாதிரித் தியானிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அதே போல பிள்ளைகளை நினைக்கும் பொழுது சரியாகப் படிக்கவில்லையே என்று நினைக்கின்றோம். ஆனால் அப்படி நினைத்து வேதனைப்படாது
1.அவன் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும்
2.கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.உலக ஞானம் பெற வேண்டும்
4.குடும்பப் பற்று வளர்ந்து… குடும்பத்தைக் காக்கும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று இப்படித் தான் எண்ண வேண்டும்.

இதே போல் குடும்பத்தில் உள்ளோர் யாராவது குறைகளைக் கூறினால் அவர் குறையிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த உணர்வினை எடுத்தால் அவருடைய குறை உணர்வு நமக்குள் வராது.

இது தான் உண்மையான விரதம்…!

அருள் ஒளியை நமக்குள் பெருக்கப் பெருக்க நம்முடைய சொல்லும் செயலும் பிறருடைய தீமைகளை நமக்குள் விடாதபடி தடுக்கும் சக்தியாக வரும்.
1.அதே சமயத்தில் அவர்கள் நம்மை எண்ணும் போதெல்லாம்
2.இந்த உணர்வுகள் அவர்களைத் திருந்தி வாழச் செய்யும்.

ஆகவே நாம் அதிகாலை எழுந்தவுடன் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை வலு ஏற்றிக் கொண்டு பிறரின் தீமையான உணர்வை நுகராதபடி குறைந்தது 10 நிமிடமாவது இந்த எண்ணத்தைக் கூட்டிப் பழக வேண்டும்.

பின் எங்கள் குடும்பத்தில் பண்பும் பரிவும் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வாடிக்கையாளர்கள் பெற்று நலமும் வளமும் பெற வேண்டும்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அந்த அருள் ஒளி படர வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய நாம் தியானிக்க வேண்டும்.

1.அப்பொழுது அந்த அதிகாலை நேரத்தில் தீமைகளை நுகராது
2.அருள் ஞானத்தை உணவாக உட்கொள்ளும் பழக்கம் வந்து விடுகின்றது
3.பற்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் வருகின்றது
4.மற்றவர்கள் மீது பற்றற்ற நிலைகளை நாம் மாற்றிக் கொள்ள முடிகின்றது

அதே சமயத்தில் அவர்களையும் அந்த உயர்ந்த உணர்வை துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் படி செய்கின்றோம். இது எல்லாம் இந்த வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்.

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம்

விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் காணுகின்றார்கள்.
1.பல இரசாயண மருந்துகளைக் கொண்டு அதை இஞ்செக்சன் மூலம் மனிதனுக்குள் செலுத்தி இரத்தத்தில் கலக்கப்பட்டு
2.உடலில் இருக்கும் அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
3.மனிதனை 1500 ஆண்டுகள் வாழ வைக்க முடியும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தியானத்தின் மூலம் எடுத்து அந்த உணர்வை நுகர்ந்து இரத்தத்தில் கலக்கச் செய்து நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அதைச் சேர்ப்போம் என்றால் அந்த ஒளியின் உணர்வாக வளர்ச்சி அடைகின்றது.

அது முழுமையடைந்த பின்…
1.உடலை விட்டு எப்போது சென்றாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கின்றோம்
2.என்றுமே அழியாத நிலைகள் கொண்டு ஒளி உடல் பெறுகின்றோம்.

அன்று வாழ்ந்த அகஸ்தியன் தன் உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மையை எப்படி ஒளியாக மாற்றினானோ… அதே உணர்வு “துருவ நட்சத்திரமாக இருக்கும்” அந்த உணர்வினை நாம் கவர்ந்தால் நாமும் ஒளி உடல் பெறலாம்.

உயிருடன் ஒன்றி ஏகாந்த நிலையாக இருளை மாற்றிப் பேரருள் என்ற ஒளியாக மாற்ற முடியும். அந்தத் திறனை நாம் எல்லோரும் பெற வேண்டும்.

அத்தகைய சக்திகளைத் தான் அதிகாலை துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

எந்த ஆலயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிகாலை நான்கிலிருந்து ஆறு மணிக்குள் தான் மணிகளை ஒலிப்பார்கள். ஆலய வழிபாடு என்று சட்டத்தை ஏற்றுவார்கள். எல்லா ஆலயங்களிலும் அந்த நேரத்தில் தான் பூஜைகள் எல்லாம் செயல்படுத்துகின்றனர்.

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை “பிரம்ம முகூர்த்தம்…” என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது பேரருள் பேரொளியாக நமக்குள் வளர்கின்றது. இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.

ஆனால் தீமைகளைச் செயல்படுத்தும் நேரம் இரவு பணிரெண்டு மணி என்று அந்த இரண்டுங்கெட்டான் நேரத்தில் செய்கின்றனர்.

மற்றொருவருக்குத் தீய நிலைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று அந்த இரவு 12 மணிக்குத் தீய தெய்வங்களை வணங்கி மந்திரவாதிகள் அதைச் செயல்படுத்துவார்கள்.

ஆனால் அதிகாலை நான்கு மணிக்கு அருள் உணர்வுகளை நல்வழிப்படுத்தும் நேரமாக இருக்கின்றது. அந்த நேரத்தை நல்லதை உருவாக்கும் காலமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.ஆகவே உங்கள் உயிரைத் தயவு செய்து கடவுளாக மதியுங்கள்.
2.அவன் தான் நம்மை மனிதனாக உருவாக்கினான் என்று…!

அனைத்தையும் தெரிந்து கொள்ளும் உணர்வினை உயிர் ஈசனாக இருந்து நமக்குள் வெளிப்படுத்துகின்றான்.
1.அவன் நம்முள் இருக்கும் பொழுது அவனைப் போன்று நாம் ஆகவேண்டும்.
2.உணர்வுகளை எல்லாம் அருள் ஒளியாக மாற்ற வேண்டும்
3.இனி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று எண்ணுங்கள்.

நல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய… பக்குவம் தேவை

நல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய… பக்குவம் தேவை

 

நம் குழந்தையைச் செல்வமாக வளர்க்கின்றோம். அப்படி அவன் வளரப்படும் பொழுது “அவன் சொன்னபடி கேட்கவில்லை…!” என்று வைத்துக் கொள்வோம்.

எல்லாம் செய்தேன்… இவன் இப்படிச் செய்கின்றான்…! என்றுதான் கடைசியில் சொல்கின்றோம். அவனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல மனது நமக்கு வருகின்றதா… என்றால் இல்லை.

1.நல்லதைச் செய்தேன் என்று சொல்லி வேதனையையும் ஆத்திரத்தையும் வளர்க்கும் நிலை தான் வருகின்றது.
2.நல்லதைச் சொல்ல முடியாது போய்விடுகின்றது.

அதே போல் நண்பராகப் பழகுகிறோம். தொழில் செய்யும் போது கடனைக் கொடுக்கின்றோம். இத்தனாவது தேதி பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றோம்.

ஆனால் கொடுக்க வேண்டிய தேதி வந்தபின் பணம் வரவில்லை என்றால் என்ன செய்கிறோம்…?

சொன்ன நேரத்திற்குக் கொடுக்கவில்லையே என்று கேட்கின்றோம். ஒரு இரண்டு தடவை கேட்டு விட்டு மூன்றாவது தடவை கேட்கும் போது நம் சொல்லில் கடினம் வந்து விடுகின்றது. பக்குவமாகச் சொல்லிக் கேட்கும் நிலை இல்லை… அந்தப் பண்பை இழந்து விடுகின்றோம்.

அழுத்தமாகக் கேட்டு வெறுப்பின் தன்மை ஆகும் பொழுது பக்குவம் தவறி விடுகின்றோம்.

1.ஆனால் முதலிலே அவருக்கு நாம் உதவி தான் செய்தோம்.
2.இருந்தாலும் செய்த உதவியை நாம் காக்க முடியாதபடி வெறுப்பின் தன்மை வளர்கிறது.
3.இரண்டு பேருக்கும் இடையே பகைமை ஆகிவிடுகின்றது… உதவி செய்தும் பயனற்றுப் போகின்றது
4.உதவி செய்தோம்… நண்பருடன் மகிழ்ச்சியாக இருந்தோம்… என்று அந்தச் சந்தோஷத்தை எடுத்து வளர்க்க முடியவில்லை.

ஆனால் உங்களுக்கு வர வேண்டிய வரவு வரும், என் பணத்தை எப்படியும் நீங்கள் திருப்பிக் கொடுப்பீர்கள் என்று சொல்லி இருந்தால் அங்கே வெறுப்பாக வராது… பகைமையும் ஆகாது.

ஆகவே பக்குவம் தவறும் பொழுது அதனால் பின் விளைவுகள் எத்தனையோ வருகிறது.

உதாரணமாக நாம் பலகாரம் சுடுகின்றோம். அதைச் சுடும் போது பக்குவமாக எடுத்து வைத்தால் பரவாயில்லை. அப்படிப் போடும் பொழுது தட்டிலே நிறைந்து விட்டால் மேற்கொண்டு போட்டால் கீழே தான் விழுகும்.

கீழே விழுந்தால் மண் ஒட்டிக் கொள்கின்றது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் பக்குவம் தவறும் போது பலகாரம் மண்ணாகி விடுகின்றது.

சுடச்சுட எடுத்துப் போட வேண்டுமென்று தான் விரும்புகின்றோம். ஆனால் கீழே விழுந்த பிற்பாடுதான் எடுத்துப் போடும் நிலை வருவகிறது. சில நேரம் இப்படி ஆகிவிடுகிறது.

அதை நிதானித்துப் பொறுமையாகப் பக்குவமாக நிறுத்தி வைத்து மற்ற பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்தால் இது போன்று ஆகாது. கீழே தரையில் விழுந்த பின்பு தெரிகின்றது.

1.அதற்கப்புறம் எடுக்கின்றோம்… எடுத்தாலும் அதிலே மண் ஒட்டி இருக்கின்றது.
2.மற்ற நல்ல பலகாரத்துடன் இதைக் கொண்டு போட்டால் நன்றாக இருக்கும் அதிலேயும் மண் ஓட்டி விடுகின்றது.
3.சுட்டும் பலன் இல்லாது சுவை கெடும் நிலை ஆகின்றது.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் எந்தச் செயலை எடுத்தாலும்… எந்தச் சொல்களைப் பேசினாலும்… பக்குவம் தவறி விட்டால் நமது வாழ்க்கையில் மீண்டும் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் என்ற உணர்வு வளர்ந்து நம் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது.

ஆகவே…
1.இந்த வாழ்க்கையில் நாம் எல்லாம் நல்லதைச் சொன்னாலும்
2.அந்த நல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய…
3.அந்த உணர்வுகள் நமக்குப் பக்குவம் தேவை.

ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் மற்றவருக்கு உதவி செய்கின்றோம். ஆனால் உதவி செய்த நிலைகள் பக்குவம் தவறி விட்டால் பகைமையாகி விடுகின்றது.. வேதனை வெறுப்பு கோபம் என்று எத்தனையோ உணர்வுகள் வருகிறது.

ஒருவர் கஷ்டமாக இருக்கிறது என்று கேட்டால்… அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட்டு… இந்த நிலை இருக்கின்றது பார்த்துச் செய்கிறேன்…! என்று சொல்லிப் பழக வேண்டும்.

அப்படிப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்கவில்லை என்றால் நம்மை எங்கேயோ கொண்டு போய்ச் செலுத்திவிடும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தனித்த நிலையில் நாம் இருந்தாலும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்விலும் செயலிலும் ஒன்றியே இருக்க வேண்டும்

தனித்த நிலையில் நாம் இருந்தாலும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்விலும் செயலிலும் ஒன்றியே இருக்க வேண்டும்

 

மெய்யுடன் மெய்யாக நாம் வாழ வேண்டும். ஏனென்றால் உயிர் என்பது மெய்…! உணர்வுகள் அனைத்தும் மெய் ஆகி ஒளி என்ற உணர்வாகும் பொழுது உயிருடன் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

அதனால்தான் இங்கே இராமேஸ்வரத்தில் நேரமாகி விட்டது என்று உணர்வின் (மனதை) தன்மையைக் கூட்டி இராமன் பூஜிக்கத் தொடங்கினான்.

இதைப் போல நாமும்
1.நம் வாழ்க்கையில் சந்தித்தோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும்
3.பகைமை அற்ற வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்துக் கூட்டினால்
4.பேரருள் என்ற உணர்வுகள் பெருகி… பேரொளியாக மாற்றிடும் தன்மை வரும்.

ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை இங்கே உணர்த்துகின்றோம்.

உடல் என்று இருந்தாலும் அது நாளடைவில் கரையும் தன்மை தான் வளர்கின்றது.
1.உடல் கருகும்… ஆனால் உணர்வுகள் வளரும்
2.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… அந்த அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
3.அந்த அருள் ஒளியைப் பெறுவதற்கே நாம் ஒவ்வொரு நிமிடமும் முயற்சிப்போம்.

உடல் வாழ்க்கையில் சேர்த்த எந்தச் செல்வமும்… இந்த உடலும் நம்முடன் வருவதில்லை.

ஆகவே அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளர்த்திடும் பருவம் கொண்டு உயர்ந்த நிலையாக இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியாக நாம் செல்வோம்…! என்று வேண்டுகின்றேன் (ஞானகுரு).

ஒவ்வொரு குடும்பங்களிலும் இதைப் போலச் செயலாற்றிப் பழகுங்கள். பண்பட்டு வளரும் தன்மையாகக் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழுங்கள்.

நாம் தனித்து இருந்தாலும்… அன்புடன் பண்புடன் தனித்திருக்கும் நிலை வர வேண்டும்… உணர்வுகள் ஒன்றி வாழ வேண்டும். அதாவது தனித் தனியாக என்ற நிலை இருந்தாலும் உணர்வுகள் ஒன்றி வாழலாம்.

நம் குரு காட்டிய அருள் வழியில் அன்புடன் அரவணைத்து வாழும் உணர்வுகளை உடலிலே வளர்த்து
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும்போது செயல்கள் ஒன்றாக இணையும்.
2.செயல் ஒன்றானாலும் உடல் தனித்தனிதான்
3.உடல்கள்… உணர்வுகள்… தன் தன் நிலைகள் ஒன்றாக உருவாக்கும் பொழுது
4.பிறிதொரு உணர்வு நமக்குள் வந்தாலும் ஒன்றி வாழ்கின்றது… நமக்கு அது நன்மை பயக்கிறது.

ஆகவே ஒன்றி வாழும் உணர்வே என்றும் நிலையானதாக மாறுகின்றது. அந்த அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அருள் ஞானம் பெருக வேண்டும் இந்த உடலிலேயே பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.

வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ மகரிஷியின் அருள் உணர்வை நீங்கள் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு பெற எமது ஆசியும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அழியாச் செல்வமான பேரருளைப் பெற்று பேரின்பப் பெருவாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

கூட்டுத் தியானத்தின் மிக முக்கியமான பலன்

கூட்டுத் தியானத்தின் மிக முக்கியமான பலன்

 

நாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் ஒன்று சேர்த்த உணர்வு கொண்டு வெளிப்படுத்துகின்றோம்.
1.எல்லோருடைய செவிகளிலும் இந்த உணர்வின் ஒலிகள் படுகின்றது
2.அந்த உணர்வுகள் கண்களால் கவரப்படுகின்றது… அதே சமயத்தில் உயிரிலே மோதுகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.

அந்த அருள் சக்தியைப் பெற்று “எல்லோரும் பெற வேண்டும்…” என்று அதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளை மாற்றும் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

கூட்டுத் தியானத்தின் மூலம் இந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது பூமியில் உள்ள காற்று மண்டலத்திலிம் இது அடர்த்தியாகப் பரவுகின்றது.

உதாரணமாக ஒரு நோயாளியை நீங்கள் பார்க்க நேர்ந்தாலும் அடுத்தகணம் ஆத்ம சுத்தி செய்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து… நோயிலிருந்து விடுபட்டு அவர்கள் குடும்பமும் தொழிலும் நலமாக வேண்டும்…! என்று சொல்லுங்கள்.

இப்படிச் சொல்லப்படும் பொழுது அவர்கள் நோய்களை மாற்றியமைக்கக் கூடிய திறனும் உங்களுக்குக் கிடைக்கின்றது. அவர்கள் நோய் உங்களுக்குள் வராது தடுக்கும் சக்தியாகவும் உங்களுக்குள் இது வருகின்றது.

ஏனென்றால் பிறர் படும் துயரங்கள் வேதனைகளை எல்லாம் நாம் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதே வேதனைப்படும் அணுக்களை நமக்குள்ளும் வளர்த்து விடுகின்றது. அதனால் நம் உடலிலும் நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.

கோபப்படுவோரை அடிக்கடி உற்று நோக்கினால் அந்த உணர்வுகள் நமக்குள் இரத்தக் கொதிப்பாக மாற்றி விடுகின்றது. ஆஸ்த்மா நோயால் அவதிப்படுவோர் சொல்வதைக் கேட்டு உணர்ந்தால் நமக்குள்ளும் அந்த ஆஸ்மா நோய் வந்துவிடுகின்றது.

சர்க்கரைச் சத்து உள்ளோர் நிலைகளைக் கேட்டறிந்தால் அவர்களிடம் பேச நேர்ந்தால் அதே சர்க்கரை நோய் உங்களுக்குள் மாறி வந்து விடுகின்றது.

வாத நோய் முடக்குவாதம் போன்றவர் உணர்வுகளைக் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்பட்டு அதே தீமை இங்கேயும் வந்து விடுகின்றது.

அதைப் போன்ற தீமைகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் அவசியம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

பின்…
1.நாம் மொத்தமாக ஒரே உணர்வுடன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் பெற வேண்டும் என்று சேர்ந்து சொல்லும் பொழுது
3.எல்லோர் செவிகளில் பட்டு இந்த உணர்வலைகள் எல்லோர் உயிர்களிலும் மோதப்பட்டு
4.உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது தீமைகளைப் போக்கிடும் சக்திகளாக நாம் பரப்ப முடிகின்றது.

இப்படிப் பரப்பபடும் இந்த உணர்வலைகள் காற்று மண்டலத்தில் பரவும் போது அந்த உணர்வுகளை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் பெறலாம்.

அந்த வலுக் கொண்ட உணர்வுகள் மூலம்
1.பிறருடைய தீமைகளை போக்கும் வல்லமையும் நீங்கள் பெறலாம்.
2.பிறருடைய தீமைகள் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் அந்த ஆற்றலையும் நீங்கள் பெறலாம்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாருடைய நோய்களையும் நீங்கள் கவர்ந்து விடாதீர்கள். அவர்கள் நோயைப் போக்கிடும் சக்தியாகவே நீங்கள் செயல்படுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… குடும்பத்தில் பற்றுடன் பாசத்துடன் பண்புடன் வளர வேண்டும்… அவர்கள் உணர்வுகள் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்… தொழில்கள் வளம் பெற வேண்டும்…! என்று நாம் இப்படித்தான் எண்ணிச் செயல்படுதல் வேண்டும்

மாறாக… பிறரைப் பழித்துப் பேசுவதோ தவறு செய்வோரை உற்று நோக்கித் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான் என்ற உணர்வுகளை அடிக்கடி எடுத்துக் கொண்டாலோ… நாமும் தவறு செய்வோராக மாறி விடுகின்றோம்.

அந்தத் தவறு செய்வோர் உணர்வுகள் நமக்குள் வராது அருள் உணர்வு கொண்டு நாம் தூய்மைப்படுத்தி அவர்களும் தவறிலிருந்து விடுபட்டு மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணி விட்டால்
2.அந்த மனிதனை நாம் எண்ணுவதில்லை…. அந்த உயிரை ஆண்டவனாக எண்ணுகின்றோம்.
3.அவனால் உருவாக்கப்பட்ட நல்ல குணங்களைத் தெய்வமாக எண்ணுகின்றோம்.

நல்லது எண்ணும் பொழுது நல்லது செய்கின்றோம். தக்க சமயத்தில் நண்பன் நமக்கு நன்மை செய்தான் என்றால் அவனைத் தெய்வமாகக் கருதுகின்றோம்.

ஆனால் தொழிலிலோ மற்ற நிலைகளிலோ நண்பருக்குள் குறையானால் துரோகி என்று பழித்துப் பேசி ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகின்றது.

இருவருடைய உணர்வும் இங்கே தான் உள்ளது…!

நல்லது செய்கிறான் என்று எண்ணினால் நல்லவனாக மாற்றுகின்றது. தீமை செய்கிறான் என்ற உணர்வாக மாற்றினால் இருவருடைய உணர்விலும் பகையாகி விடுகின்றது.

நண்பன் எதிரியாக மாறுகின்றான். எதிரியான உணர்வே வளர்க்கின்றது. நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற பகைமையை அகற்றிட ஒவ்வொரு நொடியிலும் அருள் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் அது விஷ்ணு தனுசு. எல்லாவற்றிலும் முழுமையாக அந்த அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் வேகா நிலை அடைகின்றோம். இதைத் தான் தனுசுகோடி என்று சொல்வது.

1.நம் உடலில் எல்லா குணங்களிலும் மற்ற எல்லாருடைய உணர்வுகளிலும்
2.அருள் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக மாற்றிடும் போது எல்லா குணங்களையும் மாற்றி
3.உயிருடன் ஒன்றிடச் செய்யும் போது ஒன்று என்ற நிலையை அடைகின்றது.

அதை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு). அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தான் உங்களிலே தொடர்ந்து பாய்ச்சுகின்றேன்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தீமையிலிருந்து விடுபட்டுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இருளை அகற்றும் வல்லமை பெற வேண்டும்.