மனிதன் தனக்குள் இருக்கும் ஆற்றல்களை ஆக்கபூர்வமான காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மனிதன் தனக்குள் இருக்கும் ஆற்றல்களை ஆக்கபூர்வமான காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

அச்சு ஒன்று பதித்து உருவம் ஒன்று ஆவதில்லை. எந்த விதையைப் போடுகின்றோமோ அந்தச் செடிதான் வளரும்.

நம் எண்ணத்தை எந்த நிலையில் செயல்படுத்துகின்றோமோ அந்த நிலையின் தொடரின் வழி நிலையின் வாழ்க்கைதான் வந்தமையும் நமக்கெல்லாம்.
1.எண்ணப்படிதான் வாழ்க்கை…
2.உன் எண்ணம் போல் வாழ்ந்திடு…! என்ற பெரியோரின் வாழ்த்தைத்தான் நாம் பெறுகின்றோம்.

ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் பல குழந்தைகளின் குண நிலை ஒன்று போல் இருப்பதில்லை. குண நிலை மட்டுமல்ல மன நிலையும் ஒவ்வோர் உடலுக்கும் ஒவ்வொரு வித மனம் உண்டு.

இப்பூமியில் உதித்த ஜீவன் பெற்ற அனைத்திற்குமே ஒவ்வொரு மணம் உண்டு. மணத்தைப் போலவே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு.

ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் அவரவர்கள் எந்நிலை கொண்ட குண நிலையையும் சக்தி நிலையையும் வளர்த்துக் கொள்கின்றார்களோ அந்நிலையின் வளர்ச்சிக்கு அந்நிலைக்கு ஒத்த குண நிலைகளில் உள்ள ஆவி உலகிலுள்ள ஆத்மாக்களின் தொடர்பு நிலையும் இவர்களுக்கு வந்தடைகின்றது.

இன்று இந்நிலத்தில் நீர் எங்குள்ளது..? எந்நிலையில் ஊற்று நிலை உண்டு…? என்பதனையறிய சிலரின் உடல் நிலையிலேயே அச்சக்தி நிலையுண்டு.

அவர் உடலிலேயே அச்சக்தி நிலையும் அந்நிலைக்கு ஒத்த அவர் நிலையில் உள்ள மற்ற ஆத்மாவின் தொடர்பும் அவர் உடலில் இருந்தால் தான் நீர் உள்ள நிலைகளைக் கண்டறிந்திட முடிந்திடும்.

நம் முன்னோரின் வழியில் வந்தது தான் இந்நிலையின் வழி. இவை போலவே இப்பூமியில் உள்ள உலோக நிலையையும் கண்டறியலாம்.

இவ்வுடலில் இப்பூமி எச்சக்தியெல்லாம் எடுத்து வெளிப்படுத்துகின்றதோ அந்நிலைக்குகந்த சக்தி நம் உடல்களிலும் உள்ளது. இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் கலந்துள்ளன.

எப்படி இப்பூமியில் பல நிலை கொண்ட உலோகங்கள் வளர்கின்றனவோ அந்நிலைபோல் ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் பல நிலைகள் கொண்ட சக்தி நிலைகள் உண்டு.

நமக்குகந்த சக்தி நிலையை வளர விட்டு அவற்றின் நிலையை அறிந்து அதன் வழிக்குச் செல்லும் பக்குவ நிலை புரியாமல் வாழ்கின்றோம்.

இன்று பல இடங்களில் மனோவசிய நிலை (மெஸ்மரிஸம்) என்னும் நிலையைச் சிலர் அறிந்து ஒருவரது நிலை அனைத்தையும் கட்டுப்படுத்தி இவர்கள் எச்சக்தியைப் பாய்ச்சுகின்றார்களோ அச்சக்தியின் நிலை கொண்டெல்லாம் மனோவசியத்திற்கு உட்பட்டவர் நடப்பதாகப் பார்த்தும் கேட்டும் இருப்பீர்.

இவற்றின் நிலையென்ன…?

அறிந்து… கல்வி அறிவில் வந்த நிலை என்பர் பலரும். கல்வி அறிவில் மட்டும் வந்த நிலையல்ல அந்நிலை.

அவர்கள் நிலையும் இன்று பல நிலை கொண்ட சாமியார்கள் மந்திரம் செய்து பல பொருட்களை விபூதி புஷ்பம் இப்படிச் செய்யும் நிலைக்கும் இம்மனோவசியம் செய்யும் நிலைக்கும் ஒத்த நிலைதான்.

ஆவியின் தொடர்பு கொண்டு மனோவசியத்தால் யாரை அந்நிலைக்கு வசியப்படுத்துகிறார்களோ அவர்களின் எண்ணத்துடன் இவ்வாவியின் எண்ண அலையும் சப்த அலையும் கலக்கவிட்டு வசியப்பட்டவரின் நிலையை அடக்கி இவர்கள் ஏவிய ஆவியின் நிலைப்படியெல்லாம் அவ்வசியப்பட்டவர்கள் நடக்கும் நிலைதான் இம்மனோவசிய நிலை.

யார் இம்மனோவசியம் செய்கிறாரோ அவரது சொல்லும் அவரது எண்ணமும் இவ்வசியப்பட்டவரின் நினைவில் கலந்துள்ள ஆவியின் நிலைக்கும் தொடர்பு கொண்டு இவ்வசியப்படுத்தியவர் சொற்படியெல்லாம் அவ்வாவி அவ்வசியப்பட்டவரின் உடலில் இருந்து செயல்படுத்துகிறது.

1.அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழை இது
2.வசியப்பட்டவரின் சக்தியும் பாதிக்கப்படுகிறது
3.வசியம் செய்தவரின் சக்தியும் இதனால் பாதிக்கப்படுகிறது.

இதன் நிலையில் அடையும் நல் நிலை என்ன..? கால நிலையும் விரயமாகிறது.

ஆண்டவன் அருளிய சக்திதனை அன்பென்னும் பொக்கிஷமாக்கி அச்சக்தியான ஜெபத்தைக் கொண்டு பல உன்னத அறிவுச் செல்வத்தை நாம் பெற்று இவ்வுலகினைச் செழிப்பான உலகமாக்கி செழித்து வாழ்ந்திடும் இயற்கையின் செழிப்பிற்கு நம் சக்திதனை ஒன்றச் செய்தல் வேண்டும்.

அப்படிச் செய்தால் இவ்வுலகமே செழித்து…
1.இன்று இக்காற்றே கடும் விஷமாகச் சுற்றியுள்ள நிலையை மாற்றி
2.ஆனந்தமான மண நிலையைப் பரவச் செய்யத் தாவரங்களின் நிலையைத் துரிதப்படுத்தி… தாவரங்களை வளரச் செய்து
3.நற்கனிகளையும் நல் தானியங்களையும் நாம் பெற்றே
4.நற்சுவையுடன் நாம் உண்டே நல் மணத்துடன் நாம் வாழும் நிலை ஏற்படுத்திட முடியும்.

அதற்கு நாமெல்லாம் ஒன்றுபட்டு நம் சக்தியின் ஜெபத்தால் அந்த இயற்கைக்கே அடிபணிவோம்.

Leave a Reply