நல்ல அணுக்கள் வலு குறையும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை வைத்துச் சார்ஜ் செய்து வலுவாக்க வேண்டும்

நல்ல அணுக்கள் வலு குறையும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை வைத்துச் சார்ஜ் செய்து வலுவாக்க வேண்டும்

 

சாதாரணமாக… ஒரு பேட்டரி இயங்கிக் கொண்டே உள்ளது. அதிலே சார்ஜ் குறைந்து விட்டால் செல்கள் எதுவும் இயங்காது. மீண்டும் ஏற்றினால் தான் இயக்கம் இருக்கும்.

இதைப் போன்று
1.நம் உயிரின் உணர்வு கொண்டு உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமை கிடைக்கும்.

மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பெற்று
2.நமக்குள் வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பேட்டரி சரியாக இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்ட எல்லா இயந்திரங்களும் சீராக இயக்கும்… அதிலே இருக்கும் சார்ஜ் உறுதுணையாக இருக்கும்.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சார்ஜ் செய்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு வீரிய சக்தி ஊட்டித் தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்… இதனால் உங்கள் வாழ்க்கையே தியானமாகும்…!

வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி… அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

நம் உறவினர்களையும் நண்பர்களையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைப் பற்றும்படி செய்து
1.அவர்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றிடும் உணர்வுகளை ஊட்டினால்
2.அவர்களும் நலமாகின்றார்கள்… நாமும் நலமாகின்றோம்.
3.நம் உடலும் நலமாகும்… நம் வாழ்க்கையும் நலமாகின்றது… தொழிலும் நலமாகிறது.

இந்த முறையை ஒவ்வொரு குடும்பத்திலும் பழகிக் கொள்ளுங்கள்.

சங்கடம் சலிப்பு வேதனை வெறுப்பு பகைமை வந்தால் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும்… அவர் உடல் உறுப்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் தெய்வீக அன்பைப் பெற வேண்டும்… தெய்வீக அருளைப் பெற வேண்டும்… தெய்வீக சக்தி பெற வேண்டும்… தெய்வீக வழியில் நடக்கும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

பண்பும் பரிவும் அன்பும் பாசமும் எங்கள் குடும்பத்தில் வளர வேண்டும்… அரவணைத்து வாழும் அருள் ஞானம் பெற வேண்டும். நாங்கள் அனைவரும் மகரிஷி வட்டத்தில் இணைந்து வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு சமயமும் அந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்

1.இது போன்று நாம் செயல்படுத்தினால் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த இது உதவும்.
2.வேறு யாரும் சொல்லி நாம் செயல்படுத்த முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை இந்த முறைப்படி செய்து பெற்றால் அருள் ஞானம் பெற்று இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெறுவீர்கள்.

இல்லை… வெறுப்பு வேதனை என்ற உணர்வு வந்தால் வேதனையான உணர்வுக்கொப்ப உங்கள் சொல்லும் உங்கள் செயலும் அமைந்து
1.பிறிதொருவர் நல்லது சொன்னால் ஈர்க்காதபடி அந்த நியாயத்தைத் தான் பேசுவீர்கள்.
2.பண்பை ஏற்றுக்கொள்ளும் தன்மையோ… பண்பை நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலையோ
3.வரும் தீமைகளை அகற்றிடும் நிலையோ வருவது மிகவும் சிரமம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி குருநாதர் காட்டிய வழிப்படி நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply