ஆசை ஒரு பக்கமும் எண்ணம் ஒரு பக்கமும் இருந்தால் ஏற்படும் விளைவுகள்

ஆசை ஒரு பக்கமும் எண்ணம் ஒரு பக்கமும் இருந்தால் ஏற்படும் விளைவுகள்

 

ரோட்டிலே நாம் செல்கின்றோம். ரோட்டிற்கு அந்தப் பக்கம் பார்க்கப்படும் பொழுது அங்கே ஒரு தங்க ஆபரணம் கிடைக்கின்றது.
1.உடனே ஆசை வருகின்றது… அதை எடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுகின்றது.
2.அந்த ஆபரணத்தின் மீது தான் நமக்கு எண்ணம் வருகின்றது.
3.எதிர்த்து வண்டி வருகின்றதா…? குறுக்கே வேறு எதுவும் வருகிறதா…? என்று அப்பொழுது சிந்திப்பதில்லை.

ஆனால் அதை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லப்படும் பொழுது எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்கவில்லை என்றால் அடித்து நொறுக்கி விடுகின்றது. பொருளை எங்கே எடுப்பது…?

இதைப் போலத்தான் மனித வாழ்க்கையில் இந்தத் தெய்வத்தை வணங்கினால் சக்தி கிடைக்கும் என்று அர்ச்சனையும் அபிஷேகமும் செய்கிறோம்.
1.செய்த பின் அதன் வழி நமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால்
2.நிச்சயம் நமக்குள் வரும் தீமைகளை அறிய முடியாது
3.அந்த ஆசை ஒன்று தான் வளரும்.

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது இப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புடன் சென்றால் ஆசை உருவாகும். ஆனால்
1.தீமைகளையும் துன்பங்களையும் அகற்றும் வழி வராது
2.சிந்தித்துச் செயல்படும் தன்மைகளும் வராது.

உதாரணமாக ஒரு தொழில் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பாதுகாப்பான எண்ணங்கள் தேவை. அது வளர வேண்டும்.

ஆனால் வெறும் ஆசையை மட்டும் வளர்த்து விட்டால் என்ன நடக்கிறது…?

அடுத்த கடையில் வியாபாரம் அதிகமாக நடந்தால் போதும்…! பார்… அவன் எப்படி எப்படியோ மோசமான பொருளை வைத்து வியாபாரம் செய்கின்றான். அதை வாங்க அங்கே கூட்டம் கூடுகின்றது. என்னிடம் யாரும் வாங்குவதில்லை…!

அவருக்கு வியாபாரம் ஆகிறது என்ற எண்ணத்தைத் தான் தனக்குள் வளர்க்கின்றோம். மேலும் எனக்கு இப்படி ஆகிறதே…! சமுதாயம் ஏமாந்து கொண்டிருக்கிறதே…! என்று இப்படித்தான் எண்ணுகின்றோம்.

ஆக… இதை வளர்த்துக் கொண்டபின் இதே உணர்வுகள் அந்த சிந்திக்கும் திறனை இழந்து விடுகின்றோம். அடுத்து நம் கடையின் விற்பனைக்காகத் துணிகளை வாங்கச் சென்றாலும் அல்லது ஒரு பொருளின் தரத்தைப் பார்த்தாலும் சிந்தனை இல்லாத இயக்கமாகவே வருகின்றது.

அந்த உணர்வுக்கு ஏற்ப
1.“விலை குறைவாக இருக்கிறது…” என்று
2.அதை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று
3.அத்தகையை பொருளை வாங்கி வந்து விடுவோம்.

வாங்கி வைத்த பின்னாடி இது விற்குமா…! என்று அப்போது தெரியாது. இந்த உணர்வு வரப்படும் பொழுது வியாபாரம் ஆவதில்லை.

அதே சமயத்தில் ஒரு நல்ல சரக்கு என்று வாங்கிக் கொண்டு வந்து “தரமான பொருள்” என்று வைப்போம். இது விலை அதிகமாக இருக்கின்றதே… வாங்குவார்களா…? என்ற உணர்வு வந்துவிடுகிறது.

இதைத் தனக்குள் பதிவாக்கப்படும் பொழுது இந்தப் பொருளை ஒருவர் கேட்கிறார் என்றால் அதற்கு முன் இந்த மனம் (மேலே சொன்ன நினைவு) வந்துவிடும்.

சரக்கைப் பார்க்கப்படும் பொழுது நம் மனம் குறைந்த உணர்வு அவருக்குச் சாடி “இந்தச் சரக்கு வேண்டாம்…” என்று சொல்லிவிடுவார். இப்படி நம்முடைய மனமே அங்கே இப்படி இயக்கப்படுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்த ஆலயம் வருவோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும். நம்மிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நாம் “கூடுதுறை…” ஆக வளர்க்க வேண்டும்.

நமக்குள் இப்படிப்பட்ட உணர்வை வலுவாக்கும் சக்தியாக வளர்த்துக் கொண்டோம் என்றால் தீமைகளை அகற்ற முடியும். நம் சொல்லும் இனிமை பெறும்.

காரணம்… நாம் எண்ணும் எண்ணங்கள் எதுவோ அதை உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

1.ஞானிகள் காட்டிய வழிப்படி தீமையை நீக்கும் சக்தியை எண்ணி எடுத்தால்
2.அது நமக்குள் விளைந்து தீமையை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

Leave a Reply