குறைகளைச் சொல்லி முறையிடுவதை விடுத்துவிட்டு “நல்லது நடக்க வேண்டும்…” என்று வேண்டி உருவாக்க வேண்டும்

குறைகளைச் சொல்லி முறையிடுவதை விடுத்துவிட்டு “நல்லது நடக்க வேண்டும்…” என்று வேண்டி உருவாக்க வேண்டும்

 

தீமையை நீக்க வேண்டும்… தீமையை நீக்க வேண்டும்… என்று தன் உணர்வை எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றியவன் தான் கல்கியின் அவதாரமாக விண்ணிலே உள்ளான்.

ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

அவர்களைப் போன்று நாமும் இருளைப் போக்கிடும் அருள் சக்தியைப் பெற்றுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட வேண்டும் என்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் அதைப் பாய்ச்ச வேண்டும்.

ஆனால் வெறுமனே இப்படிச் சொன்னால் மற்றவர்கள் உணர்வு நமக்குள் புகுந்து விடும்.

1.ஈஸ்வரா… என்று நம் உயிரிடம் வேண்டி
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.கேட்டறிந்த தீமையான உணர்வு ஆன்மாவில் இருப்பதைப் பிளக்க வேண்டும்.. அது தான் நரசிம்மா.

அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் இதன் வழி சேர்க்க வேண்டும். நரசிம்மா…! என்று அந்தத் தீமையைப் பிளக்கும் உணர்வின் தன்மை எடுத்தால் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றும்… மற்றோருக்கும் வழிகாட்டும். நஞ்சினை வென்றிடும் உணர்வின் சக்தியாக இதைக் கொண்டு வர வேண்டும்.

இப்படி இல்லை என்றால் நாம் எதிலே போய் மூழ்குவோம்…?

பிறருடைய பாசத்தால் நாம் அந்த வேதனையை உருவாக்கப்படும் போது அந்த உணர்வின் தன்மையே இங்கே மாற்றி அமைக்கும். அப்போது நாம் எதை உருவாக்குகின்றோம்…?

கலி…!

1.தீமையின் நிலையைத் தனக்குள் உருவாக்கி
2.அந்தத் தீமையையே செயல்படுத்தச் செய்து
3.தீமையையே ரசித்திடும் உணர்வுகள் வரும்.

பாசத்தால் தன் பிள்ளைகளை எண்ணி அவர்கள் செய்யும் தவறுகளினால் வேதனைப்பட்டு அந்த உணர்வுகள் உடலிலே வளர்ச்சி ஆகி விட்டால் “அவர்களைப் பற்றி அடிக்கடி நாம் வேதனைப்பட்டால் தான்… நமக்கு ஏற்றுக் கொள்ளும்…!”

யாராவது வந்தால் அதைச் சொல்லி… இப்படி எல்லாம் வளர்த்தேனே… தப்பு செய்து கொண்டே இருக்கின்றார்களே….! என்று வேதனப்படுவோம்.

1.நம்மை அறியாமலே அந்தச் சொல்லைச் சொன்னால் தான் இங்கே மகிழ்ச்சி… நிம்மதி…!
2.அடுத்தவர்களிடம் சொன்னால் தான் நிம்மதி…!

ஆனால் அந்த நிம்மதி எப்படி வருகிறது..?
1.வேதனைப்படும் உணர்வின் தன்மை வரும் போது அதைச் சொல்லும் போது
2.நம் உடலில் உருவான அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.

ஆனால் நாம் நினைக்கின்றோம் அடுத்தவரிடம் சொன்னால் தான் நம் பாரம் குறையும்… நிம்மதி கிடைக்கும் என்று. அந்த வேதனை உடலுக்குள் வளரும் போது அதே வழியில் தனக்குள் நோயாக மாறுகிறது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. நம்மை அறியாமல் இயக்கும் நிலைகள் இது. இருந்தாலும் இதை எல்லாம் மாற்றி நம் நல்ல குணங்களைக் காப்பதற்குத் தான் ஆலயத்தைக் கட்டியுள்ளார்கள் ஞானிகள்.

1.சிலையைக் கல்லாக நினைக்கின்றோம்… தெய்வமாகவும் மதிக்கின்றோம்.
2.ஆனால் அந்தச் சிலை (தெய்வம்) நமக்குச் செய்யும் என்ற நிலையில் தான் நம் எண்ணம் பூராம் இருக்கிறது.

எப்படி…?

தன் மனக் குறைகளை எல்லாம் சொன்னால் அந்தத் தெய்வம் பார்த்துக் கொள்ளும்.
1.இந்தக் குறைகளைச் சொல்லிச் சொல்லி… அதே உணர்வின் தன்மையை நமக்குள் வளர்க்கின்றோம்
2.ஆக நம்மை அறியாமலே தீமையைத் தான் வளர்க்கின்றோம் என்று நமக்குத் தெரியவில்லை.

கீதையில் சொன்னது… நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்ற நிலைகள் தான். ஆகையினால் நாம் எதை எண்ண வேண்டும்… எதுவாக ஆக வேண்டும்…?

சந்தர்ப்பத்தில் வரும் பகைமையான உணர்வுகள் நமக்குள் வளரக்கூடாது என்பதற்குத் தான் கோவிலை உருவாக்கி வைத்தனர்.

கோவிலுக்கு வருபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்… மலரைப் போன்ற மணம் பெறவேண்டும்… மகிழ்ச்சி பெறும் தன்மை வர வேண்டும் என்று
1.நான் உங்களை வேண்டுகின்றேன்
2.நீங்கள் என்னை வேண்டுகின்றீர்கள்.

இப்படி ஒவ்வொருவரும் செய்தால் தெய்வ குணத்தைப் பெறுகின்றோம்… நாம் தெய்வமாகின்றோம்… மகரிஷிகள் ஞானிகளுடன் ஒன்றுகின்றோம்.

Leave a Reply