அகஸ்தியரின் ஆற்றலைப் பரிபூரணமாக பெறச் செய்யும் தியானப் பயிற்சி

அகஸ்தியரின் ஆற்றலைப் பரிபூரணமாக பெறச் செய்யும் தியானப் பயிற்சி

 

அகஸ்தியர் அமர்ந்த இடத்தில் குரு காட்டிய நிலைகள் கொண்டு நான் (ஞானகுரு) அமர்ந்து தியானிக்கும் பொழுது அகஸ்தியன் கண்ட விண்வெளியின் ஆற்றலையும் மற்ற பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அறிய முடிந்தது.

அன்று ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்த நிலைகளை அந்த மிக மிகச் சக்தி வாய்ந்த அந்த நிலைகளை குரு பலத்தால் நுகர்ந்தறிய முடிந்தது.

ஏனென்றால் மிக மிகச் சக்தி வாய்ந்த ஞானிகளினுடைய உணர்வின் சக்திகளை நாம் லகுவில் மதிப்பிட முடியாது. காரணம் சாதாரண மக்களின் பிடியில் சிக்காதபடி அவர்கள் விண் உலகம் சென்றவர்கள்.

விஷம் எப்படி மற்றொன்றை வீழ்த்துகின்றதோ அதைப் போல தீய விளைவுகளைச் சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தான் அந்த மெய் ஞானிகள்…!

அவர்களுடைய உணர்வை இந்தச் சாதாரண மனித வாழ்க்கையில் இருக்கும் நாம் பெற வேண்டும் என்றால் நம் நினைவலைகளைச் சுத்தமாக மாற்றிவிடும்… செயலற்ற நிலைகளாக ஆகிவிடும்….! நம்முடைய சாதாரண எண்ணத்தால் அதைக் கவர்ந்து இழுக்க முடியாது.

அரசர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விஷத்தை சிறுகச் சிறுகக் கொடுத்து அந்த விஷத்தின் தன்மையை உடல் முழுவதும் சேர்க்கச் செய்து அதன்பின் பெரும் கொண்ட விஷத்தைக் குடித்தாலும் தன் குழந்தைகளைப் பாதிக்காத வண்ணம் அன்று எப்படிச் செயல்படுத்தினார்களோ அதைப் போன்று தான் குருநாதரும் எனக்குள் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களை பெறும்படி செய்தார்.

முதலிலே அவர் உணர்த்தும் போது வேறோரு நிலையில் தான் எனக்குக் காட்டினார். பின்பு அதன் வழியில் சிறுகச் சிறுக என்னுடைய எண்ணத்தின் ஏக்கத்தை நிலைபடுத்தச் செய்து அகஸ்தியர் சென்ற இடங்களுக்கெல்லாம் மலைப் பிரகாரங்களில் சுற்ற வைத்தார்.

அகஸ்தியன் தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். இந்த ஸ்டேஷனை நீங்கள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் இன்று மகரிஷிகள் ஆகிவிட்டார்கள் – நீங்களும் அவ்வாறு மகரிஷியாகலாம்.

1. அகஸ்தியர் தாய் கருவில் பெற்ற பல அற்புத சக்திகளையும் பச்சிலைகள் மூலிகைகளின் வாசனைகளையும் அருள் தாவர இனச் சத்துகளையும் நறுமணங்களையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2. தாய் கருவிலிருக்கும் போது நஞ்சையே ஜீரணித்து அடக்கிடும் சக்தியாக விளைந்த அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3. அகஸ்தியன் பிறந்த பின் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற பிரபஞ்சத்தின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4. அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளை தன் இன மக்கள் பெறவேண்டும் என்ற இச்சையில் வெளிப்படுத்திய மூச்சலைகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5. அகஸ்தியர் உணர்வுகள் அனைத்தும் எங்களுக்குள் பதிவாகி கருவாகி அணுவாகிட அருள்வாய் ஈஸ்வரா… அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே நாங்கள் சென்றிட அருள்வாய் ஈஸ்வரா
6. வானஇயல் புவியியல் உயிரியல் மூன்றையும் அறிந்த அகஸ்தியரின் ஆற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
7. தன்னை அறிந்த… விண்ணை அறிந்த அகஸ்தியரின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
8. தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி எதனையும் அறிந்திடும் ஆற்றலை வளர்த்துக் கொண்ட அகஸ்திய மாமகரிஷியின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
9. எல்லாவற்றையும் வென்றிடும்… அடக்கிடும்… இயக்கிடும்… ஆற்றல் கொண்ட நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்த அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
10. ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்ற அகஸ்தியரின் நுண்ணிய ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
11. மின்னலைப் போன்று எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லும் அகஸ்தியருடைய நினைவாற்றல் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
12. அகண்ட அண்டத்தையும் தன் எண்ணத்தால் எட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்ட அகஸ்தியரின் அருளாற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
13. 27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்து ஒளியாக மாற்றிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
14. விண்ணின் ஆற்றலைப் பஸ்பமாக்கிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற்று என்றுமே அழியாத வேகா நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா
15. சர்வ ரோகங்களையும் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களையும் போக்கக் கூடிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
16. நஞ்சினை வென்றிடும் அகஸ்தியரின் அருள் உணர்வுகள் எங்கள் இரத்தங்களில் கலந்து அணுக்கருக்களாக உருவாகி நாங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
17. அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை நாங்கள் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
18. நாங்கள் அனைவரும் அகஸ்தியரின் ஈர்ப்பு வட்டத்திலே என்றுமே இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
19. நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகளைச் சேர்த்து சேர்த்து உயிரைப் போன்று ஒளியாக மாற்றிய எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இப்படி அகஸ்தியன்பால் கூர்மையாக நினைவாற்றல் செல்லும் பொழுது அவனின் உணர்வுகள் பதிவாவதும் அதை நுகரும் சக்தி பெறுவதும் உயிருடன் ஒன்றி உடலுக்குள் பரப்பும் சந்தர்ப்பம் உருவாகின்றது. இதன் மூலம் நாம் அனைவரும் ஒளி உடல் பெறுகின்றோம்.

Leave a Reply