தினசரி உறங்கப் போகும் முன் நாம் செய்ய வேண்டிய பயிற்சி – ஈஸ்வரபட்டர்

தினசரி உறங்கப் போகும் முன் நாம் செய்ய வேண்டிய பயிற்சி – ஈஸ்வரபட்டர்

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு… “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே…” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்… தெரியாதது இல்லை)

அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால் மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது.

அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்… உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது… பல நன்மைகளும் ஏற்படுமப்பா…!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்…
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால் கெட்டது ஜீவன் பெறாது… அதனின் வினைச் செயலை மாற்றி… நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்…!” (இது மிகவும் முக்கியமானது).

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

Leave a Reply