ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்கு எப்படி ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்…?

ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்கு எப்படி ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்…?

 

ஒரு தீமை செய்பவனைப் பார்த்துப் பதிவு செய்து கொண்டபின் “இப்படிச் செய்தான்… செய்தான்…” என்று தீமையின் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் பொழுது அந்த கணக்கின் அளவுகோல் கூடும் பொழுது நாமும் தீமை செய்யத் தொடங்கி விடுகின்றோம்,

தீமை செய்பவன் என்று அவனைச் சொல்கின்றோம்…! ஆனாலும் அவன் மீது இருக்கும் தீமையான எண்ணம் நமக்குள் அதிகமாக வரும் பொழுது தீமைகள் வளர்ந்து வளர்ந்து… தீமையின் கணக்கே கூடிக் கூடி தீமையின் விளைவே வருகின்றது.

தீமை செய்யும் நினைவுகள் வரும் பொழுது தீமையின் உடலாக மாறுகின்றது… அந்தத் தீமையின் நிலைகளினால் உடலில் நோயாக மாறுகின்றது.

அதனால் வரும் வேதனையின் தன்மை கூடினால் இதனின் கணக்கின் பிரகாரம் அந்தத் தீமையின் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின்…
1.எவனால் தீமையானதோ அவனின் இடத்தைத் தேடிக் கொள்கிறோம்
2.அங்கேயும் தீமையை உருவாக்குகின்றோம்
3.அவனுக்குள் சென்று அதையே முழுமையாக்குகின்றோம்
4.அந்த உடலையும் வீழ்த்துகின்றோம்…!

எவன் எவ்வாறு சொன்னானோ அவனை வீழ்த்தி… “நீ அவ்வழியே செல்…! நானும் என் வழியிலே செல்கின்றேன்…” என்று கீதையிலே நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்பது போல ஆகிவிடுகின்றோம்.

ஆக… எந்த நஞ்சின் தன்மை அளவுகோல் கணக்கு எந்த அளவு அதிகமாகின்றதோ இதைப் போல ஆன பின் தேளிடமோ பாம்பிடமோ நரியிடமோ நாயிடமோ இதைப் போன்ற உயிரினமாக நாம் உருவாக நேரிடும்.

1,நம் உயிரின் வேலை அது தான்.
2.ஏனென்றால் உயிர் நெருப்புக்குச் சமம் தான்
3.நெருப்பிலே எந்தப் பொருளைப் போட்டு நாம் கலக்கின்றோமோ
4.அதில் வேக வைத்த அந்தப் பொருளின் சுவையும் மணமும் தான் வரும்.

அது போல நம் உயிரின் தன்மை நாம் நுகரும் உணர்வின் தன்மை எதுவோ… அதை உயிரணுக்களாக மாற்றிப் படைத்து விடுகின்றது.

நாம் கண்ணால் பார்க்கும் பொழுது பதிவாகி உணர்வால் நுகரும் தன்மை வருகிறது. எதனின் உணர்வைத் தனக்குள் எடுக்கின்றோமோ இந்த உணர்வின் அலையாக உடலின் அமைப்புகள் வருகின்றது.

சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் என்று சொல்வது போல்… நாம் எதனின் நிலைகள் கொண்டு உற்று நோக்கி அதைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் சத்து நமக்குள் பதிவாகி உடலிலே விளைந்து அதனின் கணக்கின் பிரகாரம் அந்தக் கூட்டமைப்புக்குள் செல்வோம்.

1.ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வு கொண்டு என்றும் பிறவா நிலை என்ற நிலையை அடைய
2.அவர்கள் அருளுடன் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் கூட்டி
3.அந்த ரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்…!

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்…! உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி வரும் இடையூறுகளுக்கு மத்தியில் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை இணைத்து இணைத்துக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

பயிரினங்களில் வீரிய வித்தாக்கி அதிலே மகசூலைப் பெருக்க வேண்டும் என்றால் முதலில் ஒரு முறை உரத்தை இடுகின்றோம். அது எடுத்துக் கொண்ட பின் அடுத்த முறை அந்தத் தாவர இனத்தை மீண்டும் புதுப்பிக்கின்றோம்.

அதிலே வரும் வளர்ச்சிக்குத் தக்கவாறு இணைத்து இணைத்துத்தான் வித்தின் தன்மை வீரியமாகப் புதிதாக மாற்ற முடியும். ஒரு வித்தின் தன்மைக்குள் இணைத்து வளரும் பருவத்தில்

ஒரே தடவையில் நேரடியாகக் கொண்டு வர முடியாது.

அதனைப் பல முறைகள் கொண்டு இணைத்து இணைத்து… அது மாற்றுப் பொருளாக உருவாக்கி உருவாக்கி… அதன் பின் அதைச் சீரான வளர்ச்சிக்குக் கொண்டு வந்து ஒன்றிணந்து இயக்கும் நிலைக்குக் கொண்டு வர முடியும்.

ஏனென்றால்…
1.நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்
2.பகைமையான உணர்வின் வித்துகளாக எடுத்துக் கொண்டது ஏராளம் ஏராளம்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மைக்கு கோபத்தின் தன்மை எடுத்துக் கொண்டதும் ஏராளம் ஏராளம்.

இதைப் போல நமக்குள் வித்துக்கள் அதிகமாகப் பெருக்கி இருக்கும் நேரத்தில் இது அனைத்தையும் ஒருங்கிணைத்து இதையெல்லாம் இணைத்து அரவணைத்து அதை அடக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு இதைச் செயல்படுத்த முடியும்.

1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உங்களில் இணைந்து வரும் குணத்துடன்
2.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை இணைத்து இணைத்து
3.இந்த உணர்வின் தன்மை இரண்டு முறை மூன்று முறை என்று
4.தொடர்ந்து கொடுக்கும் இந்த உபதேச உணர்வுகளைப் பிணைத்துப் பிணைத்து
5.அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை எடுக்கும் தகுதியை
6.உங்களை எப்படியும் பெறச் செய்ய வேண்டும் என்று தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

அது அல்லாதபடி வெறுமனே பாடப் புத்தகங்களைப் படித்து விட்டு… “நன்றாக இருக்கிறது…!” என்ற நிலையில் தூக்கி எறிந்து விடுவது போன்று செய்து விட்டால் அதற்கு அடுத்து அந்த மகரிஷிகளின் நினைவு வராது.

ஆகவே அதைப் போன்று ஆகாதபடி… “எந்த ஞானிகளின் அருளாற்றலை இங்கே உங்களிலே பதிவு செய்கின்றோமோ…” இந்தப் பதிவின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி ஓங்கி வளர வேண்டும் என்று உங்கள் மனதில் இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்…!

அது உங்களை அங்கே அந்த ரிஷிகள் வாழும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்…!

Leave a Reply