ஆற்றல்மிக்க சக்திகளை உங்கள் கண்களுக்குக் கொடுக்கின்றோம்…!

ஆற்றல்மிக்க சக்திகளை உங்கள் கண்களுக்குக் கொடுக்கின்றோம்…!

 

இங்கே கொடுக்கப்படும் உபதேசத்தின் மூலம் மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மையை நீங்கள் கேட்டறிகின்றீர்கள். கூர்ந்து கவனித்தால் இது உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

ஆக… விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும்…
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை
2.உங்கள் கண்கள் மூலம் நுகர்ந்தெடுக்கும் அந்த உணர்வின் சக்தியாக
3.உங்கள் கண்களை ஆற்றல்மிக்க உணர்வின் ஈர்ப்பு சக்தியாக வளர்க்கச் செய்வதற்குத்தான் இதை உபதேசிப்பது.

இந்த உபதேசத்தை நீங்கள் எந்த அளவுக்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ பதிவாக்குகின்றீர்களோ… அதனின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.

அப்படிப் பெருகச் செய்து உங்கள் எண்ணத்தால் விண்ணை நோக்கி ஏகும் பொழுது… அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் அலைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் எளிதில் சுவாசிக்க முடியும். அதன் மூலம் உங்களை அறியாது வந்த தீய வினைகளைத் துடைத்திட முடியும்.

மனிதர்களுக்குள் பழகிய நிலைகள் கொண்டு பத்திரிக்கை வாயிலாகப் படிக்கப்படும் போது ஒவ்வொரு நாளும் எங்கெங்கோ நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டறிகின்றோம்.

நம் எண்ணத்தை அதிலே கூர்ந்து செலுத்தி விட்டால்…
1.எங்கோ விபத்தான நிலைகள் அதனின் உணர்வின் நிலைகளைப் படித்தறியப்படும் போது
2.அதிர்ச்சி… பயம்… வேதனை… இது போன்ற உணர்வுகள் உடலிலே விளைந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள என்று நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கிவிடுகின்றது.

இதுகள் எல்லாம்…
1.சாதாரண ஆண்டென்னாவை உபயோகப்படுத்துவது போல் தான்
2.எதைப் பத்திரிக்கையில் படித்தோமோ… டி.வி.யில் பார்த்தோமோ அந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவாகி
3.அதை நாம் மீண்டும் எண்ணும் போது நம் எண்ணத்தால் படித்து நுகர்ந்து விடுகின்றோம்.

ஆனாலும் நாம் படித்த… பார்த்த அந்த உணர்வலைகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
1.மீண்டும் (தினசரி) எண்ணும் போது நமக்குள் பதிவான அதே அலைகள் காற்றிலிருந்து குவித்து நம்மை உணரச் செய்கின்றது
2.அதனின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகின்றது.
3.எந்த வேதனைப் பட்டோமோ… எப்படி ஆத்திரப்பட்டோமோ… அதுவே நமக்குள் விளையும் தருணம் வந்து விடுகின்றது
4.உடலில் விளைந்தால் கடும் நோயாக மாறும் சந்தர்ப்பமும் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத் தான் அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து இதைத் துடைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்று உபதேசிக்கின்றோம்.

1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை எல்லாம் பருகினேன்.
2.அவரைக் கூர்ந்து கவனிக்கும் போது அதனின் உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக எனக்குள் பதிவானது.
3.அவரை நினைவு கொள்ளும் போதெல்லாம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தி வாய்ந்த உணர்வுகளை நுகர்ந்து
4.அதனின் ஆற்றலை எனக்குள் பெருக்கி வளர்த்துக் கொண்டேன்.

அப்படிப் பெருக்கிய ஆற்றலின் துணை கொண்டு தான் நீங்கள் துயரப்பட்டு வரும் போது “உங்கள் துன்பங்கள் நீங்கிப் போகும்…” என்று வாக்கால் சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன்.

அதை மீண்டும் நீங்கள் நினைவு கூறுவீர்கள் என்றால் உங்கள் துன்பங்கள் நீங்கி மெய் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையத் தொடங்கும்.

1.ஒவ்வொரு நிமிடமும் துன்புறும் உணர்வுகளை எனக்குள் பாய்ச்சி
2.அந்தத் துன்பப்படுத்தும் உணர்வின் தன்மையை நீக்குவதற்காக
3.விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று உபதேசித்து
4.அதனின் அனுபவபூர்வமான செயலைத் தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்.

அந்தப் பக்குவத்தின் தன்மை கொண்டு தான் இருபது வருட காலம் அனுபவரீதியாக உலகம் சுற்றி வந்து… மனிதர்கள் நல்லவராக இருக்கின்றனர் ஆனால் நல்லதைக் காக்க முடியாது சந்தர்ப்பத்தால் எவ்வாறு அவதிப்படுகின்றனர்…? என்று மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்தார்.

அவர்கள் உணர்வுகள் எவ்வாறு இயங்குகிறது….? அந்த நல்லதை எப்படி மீட்டிட வேண்டும்…? என்று அதன் மூலம் அனுபவபூர்வமாகப் பெற்ற ஆற்றல் மிக்க உணர்வுகளைத் தான் உங்களையும் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு)… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Reply