சொர்க்க வாசல்… சொர்க்கலோகம்…!

சொர்க்க வாசல்… சொர்க்கலோகம்…!

 

சூரியன் ஒரு காலம் அழிந்தாலும்… இந்த அகண்ட அண்டத்தில் பல விஷத் தன்மைகள் தாக்கினாலும்.. அதை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அதன் வழி வாழ்கின்றது… வளர்கின்றது.

ஆகவே இருண்ட உலகமானது… மனிதனான பின் ஒளியின் உணர்வாகப் பரவுகின்றது. அந்த ஒளியின் உணர்வாகப் பரவும்போது அகண்ட அண்டமே ஒளியின் சிகரமாகிறது.

எத்தனையோ கோடி ஆண்டுகள் ஒளியுடன் ஒன்றாக இருக்கும் பொழுது… அதற்குப் பின் இந்த அகண்ட அண்டமும் ஒளியின் உணர்வாக ஆகும் பொழுது என்றும் நிலையான நிலை பெறுகின்றது

எத்தனையோ கோடி ஆண்டுகள் மனிதனாக வளர்ச்சி அடைந்து…
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது… ஒளிக்கற்றைகளாக மாற்றி
2.விஷத்தை மாற்றிடும் தன்மை ஆங்காங்கு ஏற்பட்டால்
3.இந்த அகண்டமே முழுமையான ஒளியாக மாறுகின்றது.

இப்பொழுது இருண்ட நிலையாக இருக்கும் உணர்வுகளில் (உடலில்) ஒளியாக அறிந்து கொள்ளும் மனிதன் என்ற நிலைகளில்… எப்பொழுதுமே நாம் இதனை வளர்த்துக் கொண்டால் இனி பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

ஆடு சாந்தமானது… ஆனால் நரியோ வலிமையானது. அந்த வலிமையான உணர்வை நுகர்ந்தால் அந்த ஆடு சிவ தனுசால் தாக்கப்பட்டு அதன் உணர்வுகள் மாற்றப்படுகின்றது… ஆடு நரியின் ரூபமாகின்றது…!

ஆகவே மீண்டும் மீண்டும் உடல் பெறும் சிவ தனுசு என்ற அசுர குணங்களை நாம் மாற்றி… நரகலோகத்திற்குச் செல்வதைத் தடுத்து… விஷ்ணு தனுசு என்ற உணர்வின் தன்மையை நாம் எடுத்து… அருள் உணர்வின் தன்மை கொண்டு சொர்க்க பூமியாக ஆக்கி… மகிழ்ந்து வாழும் தன்மை பெற்று…
1.உயிரான சொர்க்கவாசல் வழி சென்றால்
2.என்றுமே பிறவியில்லா நிலை அடைய முடிகின்றது.

ஆகவே மனிதனின் வாழ்க்கையில் நாம் இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை. அதனால்தான் இராமாயணத்தில் “நேரமாகிவிட்டது…” என்று மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி இராமன் பூஜிக்கத் தொடங்கினார் என்று காட்டுகின்றனர்.

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம்… சந்திக்கின்றோம்… பழகுகின்றோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

அப்படி நம்முடன் பழகிய அந்த உணர்வுகள் அனைத்தும்… அதாவது நாம் பழகியோர் அனைவரும்
1.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று பூஜிக்கத் தொடங்கினால்
2.ஒவ்வொரு நிலையிலும் இதன் உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது “இராமலிங்கம்…!”
3.ஆக… எண்ணத்தைக் கொண்டு உணர்வின் தன்மை உயிரை ஒளியாக மாற்றுவது தான் அது..!
4.உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் உயிரைப் போல ஒளியாக மாற்றப்படும் போது தனுசுகோடி.

கோடிக்கரை… பல கோடி உணர்வுகள் கொண்டு இன்றைய மனித உடல் பெற்றது கரையாக (கடைசி நிலை) இருக்கின்றது. தனுசுகோடி என்று ஆகும் பொழுது உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகின்றது

விஷ்ணு தனுசைப் பயன்படுத்தினால் என்றுமே நம்முடைய உணர்ச்சிகள் ஒளிமயமாகும்…! என்ற நிலை தான் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் எப்பொழுதுமே உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து பழகுதல் வேண்டும். அது தான் விஷ்ணு தனுசு.

1.அடிக்கடி இதை நினைவுபடுத்துகிறேன்… (ஞானகுரு)
2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.
3.எந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் இந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது

உடலை விட்டு அகன்றால் நாம் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். ஆகவே…
1.சொர்க்க வாசல் எது…? நம் உயிர் இருக்கும் இடமே…!
2.சொர்க்க உடல் எது…? நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் ஒளியின் தன்மை பெற்றால் சொர்க்கலோகமாகின்றது.

அந்தச் சொர்க்கவாசல் (உயிர்) கூடி என்றும் நிலையான சொர்க்கத்தை அடையும் தன்மையாக உடலை விட்டுப் பிரிந்து செல்கிறது. உயிர் உணர்வின் ஒளியாக மாறுகின்றது… வேகா நிலை ஆகின்றது…!

Leave a Reply