கஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…?

கஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…?

 

நாம் சொல்லும் போது சில நேரங்களில் சிலருக்கு என்ன ஆகின்றது…? சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கின்றார் என்று இலேசாக நினைத்துக் கொள்கின்றார்கள்.

“இந்த மாதிரிச் செய்யுங்கள்…!” என்று வாக்கைக் கொடுத்து நல்லதாகிப் போய்விடும்… என்று சொல்கிறோம். அதை விட்டு விடுகின்றார்கள்.

அதை விட்டு விட்டு மற்றவர்களுக்கெல்லாம் நல்லது செய்கின்றார். எனக்குச் சாமி செய்ய மாட்டேன் என்கிறார் என்று இப்படி எண்ணுகின்றார்கள்.

ஏனெனில் உங்களுக்குள் கடினமான நிலைகள் இருக்கின்றது. அதை நீக்குவதற்காக வேண்டிக் கடினமான வாக்குகளைக் கொடுக்கின்றோம். அது தான் “ஆயுதம்…”

ஒருவர் திட்டுவதை மட்டும் வேகமாக நீங்கள் எடுத்துக் கொள்கின்றீர்கள். குறையாகச் சொன்னாலும் உடனே எடுத்துக் கொள்கின்றீர்கள்.

அந்தக் குறைகளை நீக்குவதற்குண்டான கடுமையான வாக்குகளைத்தான் யாம் கொடுக்கின்றோம்.
1.போங்கள்…, போங்கள்…” எல்லாமே சரியாகப் போகும்…!
2.அந்த மகரிஷிகளின் அருளால் உங்கள் தீமைகள் அகலும்
3.ஆத்ம சுத்தி செய்யுங்கள்…, போங்கள்…! என்று சொல்கிறோம்.

இப்படிச் சொன்னாலும் கூட எங்கெங்க…! என்று ஏற்றுக் கொள்ளாமல் விடுகின்றார்கள்.

நோயுடன் வருவார்கள்…! என்னிடம் வந்து மிகவும் கஷ்டமாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

அப்பொழுது அவர்கள் உணர்வுகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை… என்ன செய்கின்றோம்…?

அவர்கள் உடலிலிருந்து நோய்களை நீக்குவதற்காக வேண்டிக் கோபமாக…, “போங்கள்..! கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும் நோய் நீங்க வேண்டும் என்று கேளுங்கள் போங்கள்…!” என்று சொல்வோம்.

ஏனென்றால் தன் கஷ்டத்தை விடாப்பிடியாகக் பிடித்துக் கொண்டிருப்பவர்களை
1.அதன் மேல் பற்று வராமல் இருப்பதற்காகவும்
2.கஷ்டத்தை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றுவதற்காகவும் அவ்வாறு யாம் சொல்கிறோம்.

கஷ்டத்தைப் போகச் சொன்னாலும் கூட “என் கஷ்டம் என்னை விட்டு எங்கெங்க போகிறது…!” என்று சொல்லி அதை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.

“போங்கள்…” என்று சொன்னால் “நம்மைத் தான் சாமி போகச் சொல்கின்றார்…!” என்று கோபித்துக் கொண்டு போய் விடுகின்றார்கள்.

ஏனென்றால் அவர்கள் உடலில் இருக்கும் அந்தச் சக்தி அவர்களைத் தீமையான நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

திருப்பி நீங்கள் நலம் பெறுவீர்கள்…, நல்லதாகிப் போய்விடும் என்று சொன்னால் அதைக் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

காலையில் இருந்து இரவு வரை ஒரே கஷ்டமாக இருக்கின்றது… இராத்திரி எல்லாம் தூக்கம் வரமாட்டேன் என்கிறது… என் பையன் இப்படிப் பேசுகின்றான்… வியாபாரத்தில் நஷ்டம்… என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

ஐயோ என் குடும்பத்தில் என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான். என் பெண்ணுக்கு மாப்பிள்ளை வந்து விட்டு வந்து விட்டு போகின்றது. என்ன செய்வது என்றே புரியவில்லை…? இப்படித்தான் கேட்கின்றார்கள்…!

இதையெல்லாம் நீக்க வேண்டும் என்று கேளுங்கள்…! என்று யாம் சொன்னால் அதற்குத் தான் வந்தேன் என்று சொல்கிறார்கள்.

1.கஷ்டத்தை எல்லாம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டு வருகின்றார்கள்
2.கஷ்டத்தை நீக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இல்லை.
3.கஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஏனென்றால் வளர்த்துக் கொண்ட அந்த உணர்வு அவ்வாறு பேசச்
செய்கின்றது. வினைக்கு நாயகனாக அது இயங்குகின்றது. இதை நிறுத்திப் பழக வேண்டும்.

இந்த உணர்வு மற்றவர்கள் சொல்வதை இந்த விஷமான சொல்லைச் சொல்லும் பொழுது
1.அது எனக்குள் வரக்கூடாது என்று அதை நான் நிறுத்தி என்னைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றேன்
2.மகரிஷிகளின் அருள் உணர்வை நான் எடுத்து…
3.“அட போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை…!” என்று சொல்கிறோம்.

என் கஷ்டத்தைச் சொன்னால் “சாமி கேட்கக் கூட மாட்டேன் என்கிறார்… என்னைக் கோபிக்கின்றார்…!” என்று இந்த மாதிரி எண்ண ஆரம்பித்து விடுகின்றார்கள்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன். என்னிடம் வந்தவுடனே
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும்.
3.என் உடல் நன்றாக இருக்க வேண்டும்
4.வாழ்க்கையில் வந்த கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்
5.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இப்படி நீங்கள் எண்ணி வந்தால் என்னிடம் கேட்கும் பொழுது அதையே கேட்கும் எண்ணம் வரும்.
7.அப்பொழுது .நான் கொடுக்கும் ஞான வித்துகள் விளைந்து உங்கள் தீமைகள் அகலும் என்று சொல்கிறோம்.

நான் சொன்னதை மறந்து விடுகிறார்கள். நோயைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதால் அந்த உணர்வுதான் வரும். அதே வார்த்தை தான் வரும்.

சாமியிடம் உபதேசம் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் உடல் நோயோ வலியோ இருந்ததா…? வலி விட்டுவிட்டதா…! என்று கேட்டால் “இப்பொழுது இல்லை…!” என்பார்கள்.
1.நேற்று வலித்தது… இப்போது இல்லைங்க…! என்பார்கள்.
2.ஆனால் இங்கிருந்து வெளியில் போய் விட்டால் மீண்டும் வந்துவிடும் என்பார்கள்.

தீமைகளை நீக்கிடும் ஞானிகளின் சக்தி வாய்ந்த அருள் வாக்குகளை ஞான வித்துக்களாகக் கொடுத்தாலும் இப்படித்தான் சொல்கின்றார்கள்.

அவர்களிடமிருந்து திரும்பத் திரும்ப வரும் தீய சொல்களைத் திட்டி யாம் விரட்டினோம் என்றால் “தீமைகள் அகலட்டும்…” என்று யாரும் அதை நினைக்க மாட்டேன் என்கின்றார்கள்.

காரணம் தன்னால் மீள முடியவில்லை என்ற நிலையில் நுகர்ந்த அந்த உணர்வு தான் அங்கே வேலை செய்கின்றது. இதையெல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

ஏனென்றால் எதை நீங்கள் ஆழமாகவும் அழுத்தமாகவும் எண்ணுகின்றீர்களோ உங்கள் உயிர் அதைத்தான் படைக்கும்.. அதைத்தான் இயக்கும்…! என்று மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

உங்களைக் காத்துக் கொள்ளும் சக்தியை நீங்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்…!

Leave a Reply