குறை காணும் பழக்கத்தை மாற்றி குறைகள் அகல வேண்டும் என்று எண்ணத்திற்கு நாம் வர வேண்டும்…!

குறை காணும் பழக்கத்தை மாற்றி குறைகள் அகல வேண்டும் என்று எண்ணத்திற்கு நாம் வர வேண்டும்…!

 

நான் நல்லதைத் தான் செய்கிறேன்… என் பையனுக்கு எத்தனையோ நல்லதைச் செய்தேன் ஆனால் என் பையன் சொன்னபடி கேட்கவே மாட்டேன் என்கிறான்…! என்று தாய் தந்தையர் சொல்வார்கள்.

முதலில் அவனைப் பற்றி உயர்வாகப் போற்றித் தான் பேசுகிறோம். ஆனால் சிறு தவறுகள் நடந்த பின் “நான் நல்லதைச் சொன்னேன் கேட்க மாட்டேன் என்கிறான்…!” என்ற நிலையில் பக்குவம் தவறி நாம் என்ன செய்கிறோம்…!

அவனைக் குறை கூறும் உணர்வு வந்து விடுகிறது. குறை கூறும் நிலை வரப்படும் பொழுது அந்தக் குறை நமக்குள்ளும் வந்து நம்மையும் குறை உள்ளவனாக மாற்றுகிறது.

1.ஆனால் குறை காணும் பொழுதெல்லாம் அவனுக்கு ஞானிகள் காட்டும் அருள் வழியைக் காட்டினால் அது நன்மை பயக்கும்
2.சிறிது பொறுமையுடன் இருந்து அந்த மகரிஷிகளின் உணர்வை ஊட்டினால் அவன் ஞானியாக ஆவான்.

தொழில் செய்கிறோம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் வருகிறது.
1.அன்றைக்குக் கொடுத்தேன்… ஏண்டா திரும்பக் கொடுக்கவில்லை…? என்று சொல்லி அதட்டிக் கேட்கும் பொழுது
2.அங்கே அந்தப் பக்குவம் தவறுகிறது… வெறுப்பின் தன்மை அதிகமாகி கொடுத்த பணமும் வராது போகிறது.

இதே போல் நம் வாழ்க்கையில் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ அந்தப் பக்குவம் தவறிவிட்டால் மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் மாற்றித் தீய உணர்வுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

இதைப் போல் நம் வாழ்க்கை முழுவதற்கும்… ஒவ்வொரு நொடியிலும் நாம் சந்திக்கும் இடங்களில் குடும்பத்திலும் சரி… மற்ற எந்த இடத்திலும் சரி… சில தவறுகளும் ஏற்பட்டாலும் பக்குவப்படுத்தும் முறை கொண்டு நாம் நடக்க வேண்டும்.

வீட்டில் மருமகள் கூட்டிக் கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

மாமியார் பார்த்து.. வீட்டைப் பெருக்கி இருப்பதைப் பார்…! அன்று மருமகளிடம் சொல்லும். இப்படிக் குறையாகச் சொல்லும் பொழுது மாமியார் மீது மருமகளுக்குக் கோபம் வருகிறது.

உடனே போய் தன் வீட்டுக்காரரிடம் சொல்கிறது… நான் எந்த வேலையைச் செய்தாலும் உங்கள் அம்மா இப்படிக் குறை சொல்கிறார்கள் என்று…!

ஆனால் இதை மாமியார் காதிலே கேட்டால் “நான் என்னத்தைச் சொன்னேன்..? நீ என்னைக் குற்றம் சொல்கிறாய்…!” என்று இந்தப் பகைமை வரும்.

இந்த மாதிரி நேரங்களிலும் நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கை என்றாலும் குறைகள் வரும். அது வளராதபடி உடனுக்குடன் துடைத்துப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால்…
1.சந்தர்ப்பம் இது போன்ற தீமைகளை நமக்குள் வளர்க்கும்
2.நாம் அருள் ஒளி கொண்டு எடுத்துத் தூய்மையாக்கிடல் வேண்டும்.

இதே மாதிரித் தான் பள்ளியில் படிக்கும் குழந்தைகளாக இருந்தாலும் ஏதோ சந்தர்ப்பம் படிப்பில் குறைவாக இருந்தால் ஆசிரியர்கள் கோபமாகத் திட்டுவார்கள் அல்லது அடிப்பார்கள்.

ஆனால் திட்டுவதனாலேயோ ஏசுவதனாலேயோ மிரட்டுவதனாலேயோ அந்தக் குழந்தையின் கல்வியின் தரம் உயராது.

பக்குவப்படுத்தி உண்மையை உணர்த்தினால் தான் அந்தக் குழ்ந்தைகளை ஞானிகளாக மாற்ற முடியும். இதைச் செய்யத் தவறினால் நாம் கற்றுணர்ந்தும் பயனற்ற நிலை ஆகிறது.

1.ஏனென்றால் பள்ளிக் குழந்தைகளிடம் எது பதிவாகின்றதோ
2.ஒரு தரம் மிரட்டி விட்டால் ஆசிரியரைப் பார்த்தாலே வெறுப்பு வரும் பயமும் வரும்…
3.பயத்தால் சிந்தனை குறையும்… சிந்தனை குறைந்தால் பாடத்தை எப்படிச் சரியாகப் படிப்பான்…?

இதைப் போன்ற நிலைகளில் ஆசிரியர்களும் ஞானிகளை உருவாக்க வேண்டும் என்றால் அந்தப் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.

பள்ளியில் படிப்பவர்களைப் பற்றி நிறைய உயர்வாகச் சொன்னாலும் இது போன்று பக்குவம் தவறி குறைகள் வளர்ந்து விட்டால் குழந்தைகளை உயர்த்துவதற்கு மாறாக வெறுப்பின் உணர்வை வளர்த்து விடுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு நாம் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் கூட்டி அந்தப் பரிபக்குவ நிலை கொண்டு சிந்தித்துச் செயல்படும் பழக்கம் வர வேண்டும்.

ஆகவே ஒருவர் தவறு செய்கிறார்… என்று எண்ணும் பொழுது “அவர்களை அறியாமல் அது இயக்குகிறது…!” என்பதை நாம் உணர்தல் வேண்டும். அதற்காகத் தான்
1.நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
2.உடலைக் கோவில் என மதிப்போம்
3.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம் என்று சொல்வது.

ஈசனால் உருவாக்கப்பட்ட ஆலயம் தான் அந்த உடல். அவர்களை அறியாமலே அந்தச் செயல்களும் அந்தச் சொல்களும் வெளிப்படுகிறது என்று சொன்னால்
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
2.அந்த நேரத்தில் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் நம்முடைய நல்ல உணர்வுகளும் காக்கப்படுகின்றது. நம் மனதில் அமைதியும் கிடைக்கின்றது. அருள் சக்திகளும் நமக்குள் கூடுகின்றது. நம் சொல்லைக் கேட்கும் மற்றவருக்கும் நல்லதாகின்றது.

அதனால் தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டும்படி சொல்கிறோம்.

Leave a Reply