நாம் வெளிப்படுத்தும் சுவாசம் (மூச்சலைகள்) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

நாம் வெளிப்படுத்தும் சுவாசம் (மூச்சலைகள்) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

 

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் சரீரமான அந்த உணர்வினை நாம் நுகர்ந்து அந்த உணர்வுகளை மூச்சலைகளாகப் பரப்பினால் இந்த ஊரும் உலகமும் நலமும் பெற உதவுகின்றது.

நம் மூச்சும் பேச்சும் உலகை நன்மை பயக்கச் செய்கிறது. இதே உணர்வுகள் மேகங்களில் படர்ந்து நல்ல மழை நீராகப் பெய்யத் தொடங்குகிறது. அந்த உணர்வுகள் அனைத்தும் தாவர இனங்களில் படரப்பட்டு தாவர இனங்களும் செழித்து வாழத் தொடங்குகிறது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இன்று மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டு வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு ஒன்றுடன் ஒன்று கலந்து மேகங்களில் கலக்கப்படும் பொழுது அது விஷத் தன்மை கொண்ட மழை நீராகத் தான் படர்கிறது.

மழை நீராகக் கொட்டும் பொழுது எந்தப் பகுதியில் இது அதிகமானதோ அப்பகுதி எல்லாம் இந்தத் தீமையை விளைவிக்கும் சக்திகளாகவும் புதிய நோய்களாகவும் உருவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட நாம் ஒவ்வொரு ஊரிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூட்டுத் தியானங்கள் மூலம் பெற்று வலுவாக்கிக் கொண்டு
1.இந்த ஊர் நலம் பெற வேண்டும்
2.இந்தத் தெரு நலம் பெற வேண்டும்
3.எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
4.நாங்கள் பழகியவர் அனைவருக்குள்ளும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
5.அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும் என்று உணர்வைப் பரவச் செய்ய வேண்டும்.

இப்படிப்பட்ட உணர்வைத் தோற்றுவிக்கத்தான் நாம் பார்க்கும் இடங்களில் எல்லாம் விநாயகரை வைத்தது.

விநாயகரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாம் வானை நோக்கி ஏங்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
1.ஊர் மக்கள் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும்
2.ஊரில் அமைதி பெற வேண்டும்
3.எங்களுக்குள் பற்றும் பாசமும் வளர்ந்து பகைமை அகற்றப்பட வேண்டும்.
4.ஊரில் விளையும் தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்
5.நாங்கள் ஒற்றுமையுடன் வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
6.இந்த முறைப்படி எண்ணி வளர்த்து இந்த உணர்வை நாம் பரப்புதல் வேண்டும்.

அப்பொழுது நமது தெரு மக்களும் ஒற்றுமையாக வாழ்வார்கள். நம் வீட்டிலும் ஒற்றுமையாகும். ஊருக்குள்ளும் ஒற்றுமையாகும் அன்பும் வளரும்…. அரவணைப்பும் வளரும்…! பண்பும் வள்ரும்… பரிவு கொண்டு வாழவும் முடியும். பேரின்பப் பெருவாழ்வு வாழ முடியும்.

தீமை என்ற நிலையை அறவே அகற்றவும் முடியும். இல்லற வாழ்க்கையில் இருளை அகற்ற முடியும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவோம் என்றால் பிறவியில்லா நிலை பெறும் அந்த அருள் சக்தியை நாம் பெற முடியும்.

இந்த உடலுக்குப் பின் இனி பிறவியில்லை. உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நாம் பெறுகின்றோம். அத்தகைய நிலை பெறச் செய்யத்தான் விநாயகர் தத்துவம்.

ஆகையினால் இந்த முறைப்படி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவாக்கி வலுவாக்கி
1.உங்கள் ஊர் நலம் பெற வேண்டும்
2.உங்கள் வீடு நலம் பெறவேண்டும்
3.மக்கள் நலம் பெற வேண்டும்
4.மக்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும்.
5.ஒருவருகொருவர் அரவணைத்து வாழும் அருள் சக்தி வளர வேண்டும்
6.பண்பும் பரிவும் வளர வேண்டும்… பற்றுடன் வாழ்ந்திடும் அருள் சக்தி எங்கள் ஊரிலே வளர வேண்டும்.
7.இந்த உலகம் முழுவதும் இந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே போல் விவசாய நிலம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்துப் பாய்ச்சுதல் வேண்டும்.
1.பயிரினங்கள் செழிக்க வேண்டும்
2.அதில் விளைவதை உணவாக உட்கொள்ளும் மக்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்ற
3.இத்தகைய உணர்வை நாம் செயல்படுத்துவோம் என்றால்
4.நாம் வாழும் பூமியும் நலம் பெறுகின்றது.. மக்களும் உடல் நலம் பெறுகின்றனர்.

நம் உணர்வுகள் நல்ல உயர்வு பெறுகின்றது. நம் மூச்சும் பேச்சும் உலக மக்களை உயர்வு பெறச் செய்கிறது. உலகை நன்மை பெறச் செய்கிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்தி உலகில் பெருகத் தொடங்கும் போது…
1.அங்கே பகைமைகள் அகற்றப்படுகின்றது… அன்பு மலரத் தொடங்குகிறது.
2.ஒவ்வொருவரும் பிறவி இல்லா நிலை அடைய முடிகிறது.

ஆகவே இந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று நமது குரு அருள் உங்களுக்குள் பரவப்பட்டு இருளை அகற்றி மெய் உணர்வைக் கண்டு…
1.உயிருடன் ஒன்றி உங்கள் உணர்வுகள் ஒளியின் சரீரமாகட்டும்.
2.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் அருள் சக்தி பெற்று பேரின்பப் பெருவாழ்வு பெறும் அந்த அருள் சக்தி உங்களிலே வளரட்டும்.
3.உங்கள் மூச்சும் பேச்சும் பிறரை மகிழச் செய்யட்டும்… மகிழ்ந்த உணர்வைப் பெறச் செய்யட்டும்.
4.உலக மக்களை நலம் பெறச் செய்யும் சக்தியாக உங்களுக்குள் மலரட்டும்
5.உங்கள் உடலில் இருக்கும் அனைத்து உணர்வுகளும் நலம் பெறும் உணர்வாக மலரட்டும்.
6.அருள் உணர்வுகள் பெருகி… அருளானந்தம் பெருகட்டும்…! பேரானந்தமும் பெருகட்டும்…!

இது அனைத்திற்கும் குரு அருள் உறுதுணையாக இருக்கும். இந்த விஞ்ஞான உலகில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெருகிட எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆகவே இருளை அகற்றிடும் நல்வினைகளாக… ஞான வித்துக்களாக… நீங்கள் நுகரும் உணர்வுகளை எல்லாம் உங்கள் உயிர் ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய… என்று உங்கள் உடலாக்கி…
1.ஒளியாக உருவாகும் உணர்வின் தன்மை
2.உங்களிலே உருப்பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply