நம் நல்ல குணங்களை மறையச் செய்யும் தீமைகளைக் கிழித்தெறிய வேண்டும்

நம் நல்ல குணங்களை மறையச் செய்யும் தீமைகளைக் கிழித்தெறிய வேண்டும்

 

“சித்ரா பௌர்ணமி…” அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போல் நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆனால் பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசித்தாலும் அதற்கடுத்து நாள் மற்ற கோள்களின் தன்மைகள் சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை மறைத்தால் அந்த நிழல் பட்டு ஒளி மங்கத் தொடங்குகின்றது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று அறிந்திடும் அறிவாக கார்த்திகேயா என்று நாம் அறிவின் தெளிவாக இன்று இருக்கின்றோம்.

ஆனால் ஒரு மனிதன் வேதனைப்படும்படியான சொல்களைச் சொல்லும்போது அந்த உணர்வை நுகர்ந்தால் நம் நல்லறிவு இங்கே இருண்டு விடுகிறது.

நல்ல குணத்துடன் தான் நாம் இருக்கின்றோம். அந்த நல்ல குணம் கொண்டு தான் வேதனைப்படுபவரை உற்றுப் பார்க்கின்றோம்.
1.ஆனால் நாம் நுகரும் வேதனைப்படும் உணர்வுகள்
2.நல்ல அறிவை மேலே மூடுகின்றது திரை போன்று…!

ஏனென்றால் எந்தக் குணத்தை கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மை இங்கே உண்டு. அந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் தான் காட்டுகின்றது. ஏனென்றால் முதலில் கண்கள் வழியாகத் தான் நமக்குள் எதுவுமே பதிவாகின்றது.

கண்ணால் பதிவாகும்போது…
1.“ஒரு தவறு” என்று இருந்தால் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகரும்போது எண்ணமாகின்றது.
2.அதாவது கண்களால் பதிவானது உயிரிலே நுகரும் போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.ஆனால் பதிவானதை எண்ணும்போது மீண்டும் கண்ணுக்கே வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).

“எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணும்போது அந்த மனிதனின் நினைவு கண்ணுக்கு (திரைப்படம் போல்) வருகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் “தப்பு செய்திருக்கின்றான்…” என்றால் கண்ணிலே அவனைப் பார்த்தவுடனே… நமக்குள் பதிவான இந்த எண்ணங்கள் “இவன் எனக்கு துரோகம் செய்தான் பாவி…!” என்ற வெறுப்பின் உணர்வை ஊட்டுகின்றது.

1.அது தான் கண்ணால் பதிவு செய்வதும்
2.கண்ணால் பதிவானதை மீண்டும் எண்ணும் போது எண்ணத்தால் நம்மை இயக்குவது என்பது
3.(அதாவது அந்த எண்ணம் தான் நம்மை அடுத்து இயக்குகிறது)
4.எண்ணம் என்பது உணர்வுகள் உணர்ச்சிகள் தூண்டுவது.

ஆகவே புறத்தில் இருப்பதை நாம் நுகர்ந்த பின் இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் தீமைகளாக உருவாகாதபடி துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தரையில் அழுக்கு இருந்தால் துடைத்துவிடுகின்றோம் நம் உடல் மீது அழுக்கு இருந்தால் துடைத்து விடுகின்றோம். துணியில் அழுக்குப் பட்டால் துடைத்து விடுகின்றோம்.

ஆனால் நம் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைக்கின்றோமா…! அதைத் துடைத்துப் பழக வேண்டும். இல்லை என்றால்… அழுக்கு சேர்ந்தால்… நம் மனம் இருளாகிவிடும்.

முழு நிலாவாக இருக்கும் சந்திரன் அதற்கடுத்து மற்ற கோள்களின் மறைவு வர…வர வர…வர பௌர்ணமி சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் அது சிறிதாகி விடுகின்றது.

இதைப் போல் தான் நம்முடைய மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பழி தீர்த்தல் பழி வாங்குதல் என்ற இந்த உணர்வுகள் வந்து விட்டால் நம் நல்ல குணங்கள் முழுமையாகத் தேய்ந்து விடுகின்றது.

ஆனால் உயிரின் உணர்வுடைய கடைசி தொக்குகள் உண்டு. அதாவது உயிரணு விண்ணிலிருந்து பூமிக்குள் வந்து தாவர இனச் சத்தைக் கவர்ந்து ஆரம்பத்தில் எப்படிப் புழுவானதோ அதே போல நல்ல குணங்கள் தேய்ந்து விட்டால் உயிரின் தன்மையில் இருண்டுவிடும்.

1.அப்படி இருண்டு விட்டால் விஷம் என்ற நிலைகள் ஆகி
2.அந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டே அடுத்த உடல் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.

ஆகவே மனிதனாக இருக்கும் நாம் மீண்டும் தேய்பிறையாகக் கூடாது. அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து இனி என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை பெறுவதே இந்த மனித உடலின் முழுமை…!

நான் யார்…? நம் உடல் என்று அல்ல…! உயிரால் வளர்க்கப்பட்டது தான் மனிதனின் உடல்.

1.உயிருடன் (ஒன்றி) இருக்கப்படும்போது நான் என்று வருகின்றது.
2.நான் நானாக அந்த நானாக (உயிராக) வேண்டும்.
3.உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால்தான் “நான் நானாகின்றேன்…!”
4.உயிர் நம்மை இயக்கும் போது நானாகின்றது
5.நான் என்ற சொல்லுக்கு உயிரே மூலமாகின்றது.

ஆகவே உயிரின் உணர்வின் ஒளி எவ்வாறோ அதனின் ஒளியின் தன்மையை நமக்குள் வளர்த்தல் வேண்டும்

இன்றைய மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் நீங்கள் தீமைகளில் இருந்து விடுபடுவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

Leave a Reply