ஞானிகள் காட்டிய நெறிகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்

path way of Eswarapattar

ஞானிகள் காட்டிய நெறிகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்

 

இன்று நாம் பேசிக் கொள்கின்றோம் இராமன் கடவுள் என்று. அதே போல் கீதாச்சாரத்தில் கூறப்படும் நிலைகள் கொண்டு கண்ணன் கடவுள் என்றும் சொல்கிறோம்.

இவ்வாறு அவர்கள் சொன்ன நிலைகள் எதுவோ அதைத்தான் எண்ணி நாம் வாழ்கின்றோமே தவிர மூலக்கூறுகளைப் பிரித்து “மூலம் எது…?” என்று அறிந்துணர முடியவில்லை.

பேருண்மைகளைத் தனக்குள் உணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் நிலை கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள் காட்டிய சாஸ்திரங்கள் காலத்தால் மறைந்து போய் விட்டது.

இன்று சாங்கிய சாஸ்திரம் செய்வதும்… நைவைத்தியங்கள் செய்வதும்… யாகங்கள் வளர்ப்பதும்… ஜோதிடங்கள் பார்ப்பதும்… அதன் வழி கொண்டு இந்தச் சாங்கியங்களைச் செய்து விட்டால் “கடவுள் நம்மைக் காப்பார்” என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறோம்.

கடவுளின் அருளைப் பெறுவதற்காக யாகங்களைச் செய்வோம். கடவுளால் உருவாக்கப்பட்ட ஜோதிடங்கள் என்ற நிலையில் அதிலே சொல்லப்பட்ட சாங்கியத்தைச் செய்துவிட்டு கடவுளிடம் வரம் கேட்போம்.

1.இது போன்ற சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி…
2.நம்மையே நாம் அறிய முடியாத நிலைகளும்…
3,நமக்குள் புகுந்து தீமைகளைச் செய்யும்… வேதனைப்படச் செய்யும்… தீமையிலிருந்து நாம் விடுபடாத நிலைகளிலும்
4.எவருக்கோ பணம் கொடுத்து அவர் தான் நமக்கு நன்மை செய்வார் என்ற நிலைகளில்
5.தீங்கினையே நாம் நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர
6.நமக்குள் அறியாது புகுந்த தீவினைகளை அகற்றும் ஞானிகள் காட்டிய நெறிகளை நாம் பின்பற்றவில்லை.

காரணம்… இந்தத் தியான வழியில் வந்த அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும்போது மற்றவர்களுடைய தவறான செயலைக் கண்டு வேதனைப்படுகின்றனர்.

ஆனால் அவர்கள் நல்ல வழியில் திருந்தி வரவேண்டுமென்ற எண்ணங்களைச் செய்வதில்லை.
1.உண்மையை அறிந்தும்… சாமி (ஞானகுரு) சொல்லியும்
2.அவர்கள் பிழைகள் செய்கிறார்கள் என்ற வேதனையைத்தான் வளர்க்க முடிகின்றதே தவிர
3.பிழைகள் செய்வோர் அவர்கள் தவறை உணர வேண்டும்…
4.மூலக்கூறுகளை அறிந்து தெளிந்து தெளிவான நிலையில் அவர்கள் செயல்பட வேண்டும்…! என்று
5.தனக்குள் இந்த நல் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா என்றால் இல்லை.

ஆக… சாங்கிய உணர்வுகளை நாம் வளர்த்துத் கொண்ட வழியின் துணை கொண்டே பிறர் செய்யும் செயல்களைக் குறைவாக எண்ணி அந்த குறைவு என்ற நிலைகளில் “பலவீனப்படுத்தும்… வேதனைப்படும்…” நிலைகளையேதான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உபதேசித்து உணர்வின் தன்மையை உங்களுக்குள் தெளிவாகக் காட்டிக் கொண்டு வருகிறோம்.

பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வேதனை என்ற நிலைகளில் நமக்குள் புகுந்து தீமையை விளைவிக்கா நிலைகள் பாதுகாக்கும் உணர்வினை உங்களுக்குள் ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று முறைப்படுத்தியும் கொடுத்துள்ளோம்.

அந்த ஆயுதத்தின் வலுக் கொண்டு பதிந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவு கொள்ளும் பொழுது உங்களில் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும் என்று உங்களைத் தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கவும் செய்கிறோம்.

இப்படிச் செய்தாலும்…
1.அவரவர்கள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலுப் பெற்ற நிலைகள் கொண்டு
2.அது தன்னைச் சீர்படுத்தும் நிலைகள் மாறித் தியான வழியில் உள்ளோரும் இந்த நிலையில் சிக்குண்டு
3.மீளும் நிலையே இல்லாது தவிக்கும் பலர் உண்டு.

ஒரு சிலரே இதனின் உணர்வை உணர்ந்து அறிந்து செயல்படுகின்றனர். தீமைகளை அகற்றிடும் உணர்வினை வலுப்பெற்று
1.தன்னுள் தீமையை நாடா நிலையும்
2.தன்னைச் சார்ந்தோருக்குத் தீமைகள் நாடாதபடி சொல்வாக்கின் நிலைகளைப் பதிவு செய்து
3.வளர்ந்து கொண்டுள்ள தியானவழி அன்பர்களும் உண்டு.

ஆகவே இதை இப்பொழுது தெரிந்து கொண்டோம்… இனி நாம் தெரிய வேண்டியது என்ன…? என்பதைத் தெளிந்து… வாழ்க்கையை புரிந்து…
1.இருள் சூழும் நிலைகளில் இருளைப் பிளந்து
2.பொருள் காணும் உணர்வினை நமக்குள் வளர்த்து
3.என்றென்றும் மெய்ப் பொருள் கண்டுணரும் திறன் பெற்று
4.தீமைகளைப் பிளந்திடும் நிலையை நிச்சயம் நம்முள் வளர்க்க முடியும்.

நம்மை அறியாது இயக்கும் இது போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கே மீண்டும் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

Leave a Reply