நம் முன்னோர்களை விண் செலுத்தும் பயிற்சி

eternal heaven

நம் முன்னோர்களை விண் செலுத்தும் பயிற்சி

 

யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து… சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துத் தியானித்ததனால் அதனின் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை விண் செலுத்த முடியும்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற
1.நம் குலதெய்வங்களான உயிராத்மாக்களும் சரி
2.நண்பர்களின் உயிரான்மாவும் சரி
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று உந்தித் தள்ளினால்
4.அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது.

சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளுடன் இந்த ஆன்மாக்கள் பட்டபின் இந்த உடலில் பெற்ற நஞ்சு என்ற உணர்வை கரைத்துவிட்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழத் தொடங்கும்.

1.துருவ நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் இருந்து வரும் உணர்வை உணவாக எடுத்துக் கொள்கின்றது.
2.துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை உணவாக உட்கொண்டு தான்
3.சப்தரிஷி மண்டலம் வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டு உள்ளார்கள்.

நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலங்களில் அவர் உடலில் பெற்ற உணர்வு நமக்குள் இருப்பதனால்… நாம் தியானத்தை வலுக்கூட்டி இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களை விண் செலுத்தினால் அது பிறவியில்லா நிலை அடையும்.

இதை மனிதன் ஒருவன் தான் செய்ய முடியும்…!

நண்பர்களுடன் பழகுகின்றோம்… நம் குடும்பத்தில் பழகுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். சந்தர்ப்பத்தால் நண்பர் வேதனையோடு அவதிப்படும்போது அவர் மேல் இருக்கும் பற்றால் அந்த வேதனையான உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் நம் உடலுக்குள் அது வளர்கின்றது.

வேதனை வரும் பொழுதெல்லாம் நாம் எந்த உடலில் இருந்து வேதனையை எடுத்தோமோ அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்து அவர் பெற்ற அவதியெல்லாம் நாமும் பெறுகின்றோம்.

அல்லது… ஒருவரிடத்தில் அந்த ஆன்மா சென்றாலும் மற்றவர்கள் கேட்டறிந்த அந்த உணர்வுகளில் அவர்கள் பட்ட உண்ர்வுகளை நாம் நுகர்ந்தறியும்போது அதை அடுத்து “மரபணுக்கள்” நமக்குள் விளைய தொடங்கி விடுகின்றது.

இது போன்ற நிலைகள் நமக்குள் வளராது தடுக்க வேண்டும்.

ஆகவே கூட்டு தியானத்தின் மூலம் நாம் அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தால் அது அங்கே கரைந்து விடுகின்றது.

சப்தரிஷிகளுடன் ரிஷிகளாக அவர்கள் வாழப்படும்போது…
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் நாம் எளிதில் பெற்று
3.நம் உடலில் ஏற்படும் தீமைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள முடியும்

இப்பொழுது விஞ்ஞானி செய்கின்றான்…! அதாவது கண்ணாடி மூலம் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் வானில் உள்ள கோள்களைப் பதிவாக்கி அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றான்.

அந்த உணர்வு அதற்குள் பதிவானபின் அதை நாடாக்களில் பதிவாக்கி அதை ராக்கெட்டில் வைத்து விண்ணிலே பூமியைக் கடந்து வெளியே வீசச் செய்கின்றான்.

1.எந்த கோள்களில் இருந்து அலைகள் வருகின்றதோ
2.அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு வீசப்படும்போது
3.அந்த நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ராக்கெட்
4.கோள்களின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அழைத்துச் சென்று விடுகின்றது.

அங்கே சென்ற பின் அந்த உணர்வுகளைக் கலந்து அதைக் கவர்ந்து மீண்டும் நாடாக்களில் பதிவாக்கி அலைகளாக மாற்றித் தரையில் இருக்கும் அந்த நிலைகளுக்கு மாற்றுகின்றது.

இதைப் போலத்தான் நம் மூதாதையர்களின் ஆன்மாக்காளையும் நண்பர்களின் ஆன்மாக்களையும் சப்தரிஷி மண்டலத்தினுள் செலுத்தி விட்டால் இந்த உடலில் பெற்ற நஞ்சுகளை கரைத்துவிட்டு
1.அந்த உணர்வின் தன்மை அதற்குள் பதிவாக்கப்படும்போது
2.அவர் உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் நம்முடைய எண்ணம் அவர் ஒளியான உணர்வை எளிதில் கவர்ந்து
3.நாம் அந்த பேரருள் என்ற உணர்வை நமக்குள் வளர்க்கவும்
4.பிறவியில்லா நிலை அடையவும் உதவும்.

அதே சமயத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் நம் உடலுக்குள் இருக்கும் தீமையின் உணர்வுகள் அதாவது.. அவர் உடலில் நோய்வாய்ப்பட்ட உணர்வுகள் நமக்குள் வளராது தூய்மைப்படுத்த முடிகின்றது. (இது முக்கியம்)

அதே சமயத்தில் அவர் விண் சென்ற உணர்வின் பால் நம் பற்று வரப்படும்போது இந்த உடலுக்குப் பின் அதைப் பற்றுடன் பற்றி நாம் பிறவியில்லா நிலைகள் அடையவும் முடிகின்றது.

இல்லையென்றால் இந்த வாழ்க்கையில் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக நமக்குள் வளர்த்துக் கொண்டால் மீண்டும் பிறவியின் நிலைக்கே நம்மை அழைத்து வருகின்றது.

ஆகவே பிறவியில்லா நிலை என்ற அந்த ஏகாந்த நிலைகள் பெறுவதற்குத் தான் இதைச் சொல்கின்றோம். இப்பொழுது உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களை விண் செலுத்தத் தியானிப்போம்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் எஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் நினைவைச் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசித்து அதை உங்கள் உடலில் உருவாக்குங்கள்.

அந்த வலுவின் துணை கொண்டு… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் மூதாதையரான அந்தக் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் அந்த உடலில் பெற்ற உணர்வுகள் நஞ்சுகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் கலந்து உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உந்தித் தள்ளுவோம்.

எங்களுடன் நண்பர்களாகப் பழகி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

Leave a Reply