எமனுக்கு நாம் எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும்…?

Lord Markandeya

எமனுக்கு நாம் எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும்…?

காட்டிற்குள் சென்று தனித்து உட்கார்ந்தாலும் இந்த உடலான காட்டிற்குள் இருந்து யாரும் தப்ப முடியாது. இங்கே புலியும் இருக்கின்றது கரடியும் இருக்கின்றது பாம்பும் இருக்கின்றது.

ஒருவன் கோபமாகப் பேசினான் என்றால் அதை நாமும் கேட்டால் நமக்குள்ளும் இந்தக் கோபம் வரும். அதற்குச் சாப்பாடு வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் பதிவான அந்தக் கோப உணர்வு என்ன செய்யும்…?

இவர் ஜம்… என்று மகிழ்ச்சியாக உட்கார்ந்திருப்பார். அடுத்தாற்படி அது என்ன செய்யும்…?
1.யாராவது குறை கூறியிருந்தார்கள் என்றால் அதை எல்லாம் இழுத்துக் கொண்டு வரும்.
2.உடனே அந்தக் குறையான எண்ணங்கள் வரும்… வரிசையாக் ஓடும்.
3.இரு… நான் கொஞ்சம் சாப்பிட்டுக் கொள்கின்றேன் என்று அது தன் உணவை எடுத்துக் கொள்ளும்.

பையன் மேல் பாசமாக இருப்பார்கள்…! ஆனால் இவ்வளவு தூரம் சொல்லி அவனுக்காகச் சம்பாரித்து வைத்தேனே. அவன் அதைப் புரிந்து கொள்ளாதபடி “இப்படிச் செய்கின்றானே…!” என்ற அந்தக் குறையான எண்ணம் வரும்.

ஆக… ஒருமித்த நிலைகளில் (மன அலை பாயாமல்) நான் இருக்க வேண்டும்…! என்று நினைக்கின்றேன். என்னால் முடியவில்லையே…! என்பார்கள்.

எந்தச் சாமியாராகப் போனாலும் சரி… குடும்பத்தை எல்லாம் துறந்து விட்டு “நான் காட்டிற்குள் சாமியாராகப் போவேன்…” என்றால் இந்த உடலான காட்டிற்குள் இருந்து தப்பவே முடியாது.

அதனால்தான் சீதாராமா…! என்ற நிலையில் அவர்கள் சீதாவும் இராமனும் காட்டிற்குள் சென்றார்கள். ஆனால் இந்த எண்ணத்திற்குள் எந்த சீதா இராமனாக இருக்க வேண்டும்…?

சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணங்கள்.
1.சுவைமிக்க உணர்வுகள்
2.சுவையாக என்றும் சுவைத்திட்ட உணர்வுகள் கொண்டு
3.சுவையான அந்த மகரிஷிகளின் உணர்வை
4.சீதா…! என்ற அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து
5.இராமனாக நம் சொல்லின் நிலைகளும் நினைவின் ஆற்றலும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

ஒருவன் தூய்மையற்று அவதூறாகப் பேசுகின்றான் என்றால் உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா.. என்று இந்த சுவையைக் கூட்டிக் கொண்டு அதை தூய்மைப்படுத்திட வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வைச் சித்திர புத்திரனாக்கி… அதன் மீது பாசமாகி… அதையே நாம் தொடர வேண்டும்.
1.அந்தக் கயிறின் தன்மை கொண்டு எமனுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும்.
2.நீ அல்ல… சீவலிங்கம்…! என்று உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.அவனைப் (உயிரான ஈசனை) பற்றிட வேண்டும்…!

அதைத் தான் ஒரு உருவத்தை வைத்து மார்க்கண்டேயன் என்று காட்டுகின்றார்கள். என்றும் பதினாறு…! என்ற நிலை அடைவதற்கு அந்த மார்க்கண்டேயன்…
1.ஆவடை… உடலைப் பற்றிக் கொள்ளவில்லை
2.லிங்கம்… தன் உயிரைப் பற்றிக் கொண்டுள்ளான் என்ற நிலையை
3.ஒரு சித்திரத்தை எழுதி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் வைத்துள்ளனர் ஞானியர்.

அதை எல்லாம் நாம் புரிந்து கொள்ளாதபடி அபிஷேகம் ஆராதனை சாங்கியம் என்ற நிலைகளைச் செய்து கொண்டுள்ளோம். நம் நல்ல குணங்களைக் காக்க முடியாது அவைகளளைச் சீர் குலையச் செய்து விடுகிறோம்.

இதிலிருந்து மீள வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் இதை நினைவுபடுத்திக் கொண்டு வருகின்றோம்.

குரு கொடுத்த வழிகளில் நிலைகளில் அதைச் சித்திர புத்திரனாக்கி அதனில் விளைந்த அந்தக் கணக்கின் பிரகாரம் இங்கே அந்தச் சொல்லாக வெளிப்படுகின்றது.

அந்தச் சொல்லின் நிலைகள் தான் சீதா ராமா….! ஞானிகளைப் பற்றிய இந்தச் சொல்லின் தன்மை (உபதேசம்) உங்களுக்குள் ஊடுருவி அவர்களின் உணர்வின் நினைவாற்றலாக உங்களுக்குள் அது உந்தச் செய்யும்.

சீதா ராமா என்று அத்தகைய சொல்லாக உங்களுக்குள் சொல்லும்போது அருள் ஞானியின் உணர்வுகளுடன் உங்கள் உணர்வுகள் ஒன்றும்.

வாழ்க்கையில் என்றுமே
1.உங்களின் நினைவின் ஆற்றல் விண்ணை நோக்கிச் சென்று…
2.அந்தச் சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம்
3.உயிரோடு ஒன்றிய நிலைகளாக உங்கள் உணர்வுகள் செல்லும்.

எல்லா உணர்வையும் அறிவிக்கும் ஆறாவது அறிவு கொண்டு அறிந்து கொண்டது போல் ஒளியின் உணர்வாகப் பெருகி… ஒளி பட்டபின் இருள் விலகுவதுபோல் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் நிலை கொண்டு வாழ்ந்திட முடியும் என்பதைத்தான் உங்களுக்குள் தெளிவாக உணர்த்துவதும்… இதனைப் பதிவு செய்வதும்…!

 

Leave a Reply