மற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்

uplifting hands

மற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்

பதார்த்தங்கள் அனைத்தையும் நாம் சுவையாகச் செய்து வைத்து கடைசியில் ஒரு விஷம் கொண்ட பொருளை அதிலே இணைத்து விட்டால் உட்கொள்வோரை நிச்சயம் மடியச் செய்துவிடும்.

அது போல் உலகில் தோன்றிய மகான்கள் எல்லோருமே உயர்ந்த தத்துவங்களைக் கூறியிருந்தாலும்
1.அங்கே அந்த மகான் காட்டிய உணர்வுக்கு மேல் இன்னொன்றாக
2.தீமை செய்வோர்களை அழித்திடும் கடுமையான உணர்வைத்தான் கடைசியில் சேர்க்கின்றோம்.

இது எல்லாம் காலத்தால் அரசர்களால் உருவாக்கப்பட்டது…!

ஏனென்றால் மகான்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த நிலைகள் அனைத்தும் அரசு காலங்களில் அந்தப் பேருண்மைகள் மறைந்து விட்டது… இன்று நமக்கு அதைக் கிடைக்கவிடாதபடியே செய்து விட்டார்கள்.

அந்த மகான் காட்டிய வழிகள் வரப்படும் பொழுது அன்றைய அரசர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள்…?

1.தீமை என்ற நிலை வந்தால் அதை உடனே அழித்துவிட வேண்டும் வேட்கைகள் தூண்டுகின்றது.
2.தனக்கு அல்லது தன் மதத்திற்கு விரோதமானவர்கள் எல்லாம் “நம் கடவுளுக்கு விரோதமானவர்கள்…!”

ஞானிகள் காட்டிய வழி தவறி… கடைசி நிமிடத்தில் நீ எதிரிகளை (கடவுளுக்கு விரோதமானவர்களை) வீழ்த்திட வேண்டும்… தவறு செய்பவர்களை அழித்திட வேண்டும்… என்ற உணர்வு கொண்டு இந்தத் தாக்குதல் வரப்படும் பொழுது அந்தத் தாக்கிடும் உணர்வே கடைசியில் விளைகின்றது.

“கடவுளுக்கு விரோதமானவர்கள்…” என்று சொல்லிக் கொண்டு அந்தக் கடவுளின் தன்மையில் தான் பல மதங்களை உருவாக்கி விட்டார்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களும் இப்படித்தான்…!

இந்து மதமானாலும் சரி முஸ்லிம் மதமானாலும் சரி புத்த மதமானாலும் சரி கிறிஸ்தவ மதமானாலும் சரி இதைப் போல “தனது கடவுளுக்கு எதிரியானவர்கள்…” என்று எதிரிகளை உருவாக்கி
1.நல்லவைகளைப் பேசினாலும்
2.மற்ற மதங்களைச் சாடும் பொழுது எதிரி என்ற நிலையும்
3.பிசாசு என்ற நிலைகளில் உருவாக்கி விடுகின்றனர்.

இப்படி உலக நிலைகளில்… மற்றவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்று சாரார் சொல்லப்படும் பொழுது மற்ற மதங்களும் இதைப் போல “அவர்களும் பிசாசை வணங்குபவர்கள்…” என்று சொல்வதும்
1.உயர்ந்த குணங்களை எல்லாம்
2.அந்த ஆவேச உணர்வு கொண்டு தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

அன்று நபிகள் சொன்னது:-
1.மனிதனை மனிதன் நீ மதித்து நட
2.மனிதனை உயர்த்த வேண்டும் என்று நீ எண்ணினால் நீ உயர்வாகின்றாய்.
3.மனிதன் பேரன்பைப் பெற்று அனைவரின் தன்மையும் உயர வேண்டும்

ஒரு மனிதன் பசியால் வாடப்படும் பொழுது… அந்தப் பசியைத் தீர்க்கும் எண்ணங்கள் உனக்குள் வந்தால்… அந்தப் பசி தீர்க்கும் உணர்வே உனக்குள் விளையும்… பசி தீர்க்கும் உபாயம் உனக்குள் கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் உண்மையின் சொரூபம் கொண்டு
1.பொய் பேசாதே
2.பொய்யான செயல்களைச் செய்து பிறரை ஏமாற்றாதே
3.தவறான உணர்வுகளை உனக்குள் சேர்க்காதே
4.தவறின் உணர்ச்சிகளை உனக்குள் இயக்கி விடாதே என்று நபிகள் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் வெளிப்படுத்திய பேருண்மையை யாரும் அதைத் தெளிவாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் வந்த அரசர்கள் அவர்கள் நியாத்தை முன் வைத்து அதன் வழிகளில் தான் இவர்கள் ஆட்சி புரிந்தனர்

நபிகள் காட்டிய அந்தக் கடவுளைக் காணும் நெறியை இவர்கள் முன் வைத்துக் கொள்வார்கள். அதே சமயத்தில் இவர்கள் இயற்றும் சட்டத்தைக் கொண்டு இதற்கு மாறாக நடந்தால்
1.அவர்களை ஆண்டவனின் எதிரி என்று மக்கள் மத்தியில் பலியிடுவார்கள்.
2.ஆண்டவனுக்கு விரோதமாக இருந்ததனால்… நீ தவறு செய்ததனால்.. நீ பொய் பேசியதனால்…
3.உன் கைகள் துண்டிக்கப்படும்.. உன் அங்கங்கள் அவமதிக்கப்படும்… உன் சிரசு துண்டிக்கப்படும்…! என்று
4.இப்படி அரசு சட்டங்களை நீதியாக்கி அதை “ஆண்டவன் கட்டளை…” என்று செய்தார்கள்.

அதே உணர்வுகள் தான் இன்றும் உள்ளது.

ஆனால் அந்த அருள் ஞானிகள் தீமைகளைப் பற்றிக் கூறியது என்ன…?

தவறான உணர்வுகள் உனககுள் இருந்தால் அந்த உணர்வின் தன்மை அரக்க உணர்வுகளாக உனக்குள் விளைந்துவிடும். அதனால் உன் அங்கங்கள் சீர்கெடுகின்றன… உன் குணங்கள் மாறுபடுகின்றது… நீ எண்ணிய உணர்வுகள் உனக்குள் மாறுபடச் செய்கின்றது..!

1.உனக்குள் இருக்கும் அந்தத் தவறின் நிலைகளை எல்லாம் அகற்றிவிடு… அருள் ஒளியைக் கூட்டி விடு…
2.ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ வேண்டும் என்று நீ எண்ணு.
3.அவன் பசியைத் தீர்க்கும் உணர்வை ஏங்கு
4.அந்த உணர்வு உனக்குள் இருந்து பேரன்பாக வளர்கின்றது என்று தான் மகான்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஞானிகள் கூறியதை யாரும் பின்பற்றவில்லை…! இன்றைய உலக நிலை இது தான்.

Leave a Reply