குரு இட்ட கட்டளை

tapovanam

குரு இட்ட கட்டளை 

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வருகின்றான். அந்த அருளை எந்நாட்டவரும் பெற முடியும்.

அவன் எப்படி ஒளியாக ஆனானோ அதே தென்னாட்டிலே வாழ்ந்த அவன் உணர்வுகள் இங்கே அதிகமாக உண்டு.
1.ஆகவே அவன் அருளை நாம் பெறுவோம்.
2.நமக்குள் அறியாது புகுந்த இருளை அகற்றுவோம்.
3.மெய்ப் பொருளைக் காண்போம்.

உலக மக்கள் அனைவரும் இருளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தியும்… சகோதரப் பண்புடன் அரவணைத்து வாழும் சக்தியும்… பேரன்புடன் வாழும் திறனும் பெறவேண்டும் என்று தியானிப்போம்.

குடும்பத்தில் கருவில் வளரும் சிசுக்களுக்கு அந்தப் பத்து மாதம் பொறுமையாக இருந்து நீங்கள் செயல்பட்டு அகஸ்தியன் உணர்வைப் பெறச் செய்து “அருள் ஞானிகளை நீங்கள் உருவாக்க வேண்டும்…” அவன் இந்த நாட்டைக் காப்பான்… ஊரையும் காப்பான்…!

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் என்னைக் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அங்கெல்லாம் அலைந்து திரிந்து இயற்கையின் உண்மைகளை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அறிந்தேன்… உணர்ந்தேன்.

அப்படி அறிந்து உணர்ந்ததை உங்களுக்குள் அமர்ந்த இடத்திலேயே அத்தனை உணர்வையும் சேர்க்கச் செய்கின்றேன். ஆனால் நான் தெரிந்து கொள்ள காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தேன். எத்தனையோ சிரமங்கள் பட்டேன்.

1.குருநாதர் உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக மதிக்கச் சொன்னார்.
2.உடலைக் கோவிலாக மதிக்கச் சொன்னார்.
3.மனிதனாக உருவாக்கிய அரும் பெரும் சக்தியைத் தெய்வங்களாக மதிக்கச் சொன்னார்.
4.தெய்வங்கள் வீற்றிருக்கக்கூடிய அந்த ஆலயங்களைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றார்.

அதற்காக வேண்டி இப்பொழுது கொடுக்கும் இந்த உபதேச உணர்வுகளை அவர்கள் நுகர்ந்தாலே அந்தத் தீமைகள் அகன்று புனித உணர்வு பெறுவார்கள்…! ஆகவே உடல் என்ற அந்த ஆலயதைப் பரிசுத்தப்படுத்தும் நிலையை நீ செய்ய வேண்டும் என்றார் ஈஸ்வரபட்டர்.

அதன் மூலம் உனக்கு அனைவரின் உணர்வும் கிடைக்கும். எத்தனையோ இலட்சம் பேரின் உணர்வுகளும் அவர் கொடுக்கும் பேரருள் உனக்குள் பல கோடி உணர்வுகளாகப் பெருகும் என்றார்.

விண்ணிலிருந்து வரும் எதையுமே பேரொளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அனைவரையும் பெறச் செய்ய வேண்டும் என்றார்.

குருநாதர் இட்ட அந்தக் கட்டளைப்படி உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்த எனது (ஞானகுரு) உபதேசம் உங்களுக்குப் பயன்படும்.
1.உங்கள் உயிரான ஈசனுக்கு நல் உணர்வு ஊட்டும் அபிஷேகங்கள் நடக்கின்றது.
2.உங்கள் உடலான சிவனுக்கு நல்ல அமுதாகக் கிடைக்கின்றது.
3.அருளைப் பெறுவோம்… மெய்ப் பொருளைக் காண்போம்.
4.இனிப் பிறவியில்லா நிலையை நாம் அனைவரும் அடைவோம் என்று பிரார்த்திக்கின்றேன்.

தியான நிலையையும் சுவாச நிலையையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

inner light glow

தியான நிலையையும் சுவாச நிலையையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தியான நிலை சுவாச நிலை வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்…!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்றிட்டார். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நால் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…! உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும் நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்திவிட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா…! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இந்நிலையைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் கலந்திடலாம்…!