வாழும் நாட்களை வீண் விரயம் செய்யாமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Life meditation.jpg

வாழும் நாட்களை வீண் விரயம் செய்யாமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்த மனிதப் பிறவி எடுக்க அவ்வாண்டவனின் சக்தியில் பல நாள் தவமிருந்து நாம் பெற்றதே இப்பாக்கியம்.

ஆனால் நாம் எடுத்த மனிதப் பிறவியையே பெரும் பயத்துடனும் கலக்கத்துடனும் வாழ் நாட்களை வீணடித்துக் கொண்டு வாழ்கின்றோம்.

நாம் எடுத்த பிறப்பின் பயனைப் பெறுவது என்பது நம் வாழ் நாட்களை வீண் விரயம் செய்யாமல் வாழ்ந்து காட்டுவது தான்…!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயத்தை ஆண்டவன் சக்தியிலிருந்து பெற்றுள்ளான். மனிதப் பிறவி எப்பொழுது எடுத்துள்ளோமோ அப்பொழுதே அந்த ஆண்டவனின் “பரிபூரண சக்தி” பெற்றவர்களாகத்தான் தாயின் கருவுக்கே வந்து உதிக்கின்றோம்.

இந்த நல்ல நிலையில் வந்தவர்கள் எல்லாம் நல்ல நிலையில் வாழ்ந்திடாமல்
1.பெரும் பேராசை நிலை கொண்டு பல விஞ்ஞான ரூபங்கள் எடுத்து
2.கடைசியில் தன்னைத் தானே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள் (இன்றைய உலக நிலை இது தான்).

விஞ்ஞான ரூபத்தில் வந்த மனிதர்கள் எல்லாம் தன்னுள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவ்விஞ்ஞானத்தையே வெல்லும் மெய் ஞானத்தைக் கண்டிடலாம்.

கூடுவிட்டுக் கூடு பாய்கின்றார்கள் சித்தர்கள்… என்றெல்லாம் கதைகளாகவும் காலப்போக்கிற்காகவும் படிக்கின்றார்கள். ஆக இன்றைய மனிதர்களின் குண நிலையெல்லாம்… பெரும் உல்லாசத்தைக் காணும் குணமாகவே உள்ளது…!

கனவும் நினைவும் உள்ள காலமாக உள்ளதப்பா இந்தக் காலம்.
1.கருத்துடன் நமக்குப் பல பெரியோர்கள் போதித்த கருத்தையெல்லாம்
2.தன் உல்லாச வாழ்க்கைக்காக வியாபாரமாக்கத்தான் தெரிந்தது
3.தன்னுள் இருக்கும் உண்மை நிலைகளை வீண் விரயமாக்கி வாழ்கிறார்கள்.

“வாழும் வரை வாழலாம்…!” என்ற எண்ணம் தான் மக்களின் மனதிலே பதிந்துள்ளது. இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு “அழியாத ஆத்மா” எப்படியெல்லாம் வட்டமிட்டுக் கொண்டுள்ளது…? என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை.
1.எண்ணிப் பார்ப்பதில்லை என்றால்
2.எண்ணத்தில் பயம் வருவதால் தான் எண்ணிப் பார்ப்பதில்லை…!

இன்றுள்ள நிலையில் நாம் நமக்குத் தெரிந்த ஒரே வழி… அச்சக்தியின் நிலை கொண்டு சகல ஜீவராசிகளையும் காத்து வாழ்ந்திட… அவ் ஈஸ்வர ஜெபம் இருப்பது ஒன்றே தான்.

அச்சக்தியின் நிலை கொண்டு ஒவ்வொருவரும் இந்த உலகில் உள்ள பல கோடி உண்மை நிலைகளைத் தன்னுள் ஈர்க்க முடியும்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்…! என்று நம் முன்னோர்கள் சொல்லவில்லையா…! “எந்நிலையும் ஜெயம் கொண்டு வாழ்ந்து காட்டிட வேண்டுமப்பா…!”

Leave a Reply