துருவ தியானத்தின்… துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்

LTM - Polaris

துருவ தியானத்தின்… துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் அனைவரும் பெறக்கூடிய சக்திக்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன். பதிவாக்கினாலும் அதை மீண்டும் பெறுவதற்கு நினைவுபடுத்துகிறேன், ஏனென்றால் பல நிலைகள் உங்களை மூடி மறைக்கின்றது.

இப்பொழுது இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் படிக்கும் பொழுது உடனே அது வீரியம் பெறும். இங்கே நல்லதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அடுத்தாற்போல் ஒரு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வீர்கள்…!

1.பார்…! சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…?
2.இங்கே இப்படிச் சண்டை போடுகிறார்கள்..! என்று நான் சொல்வதை உடனே விட்டுவிடுவீர்கள்…!
3.சண்டையிடுபவர்களின் உணர்வுகளை எடுத்துக் கொள்வீர்கள்.
4.அப்பொழுது அந்தத் தீய அணுக்களுக்குச் சாப்பாடு நிறையக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால் அதற்கு ஏற்கனவே வீரியம் அதிகம். ஆகவே அந்த அணுக்கள் நமக்குள் அதிகமாக இருக்கும் பொழுது அதை மாற்றும் சக்தியை எடுத்து… அதை வலுவாக எண்ணி… சண்டையிடுபவர்களின் உணர்வுகளை அடக்கச் செய்ய வேண்டும்.

அப்படி என்றால் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும் (துருவ தியானம்). அதை வைத்துத் தான் தீமைகளை அடக்க வேண்டும்.

சண்டை செய்கிறார்கள் என்றால் நாம் கண்ணில் பார்க்கின்றோம். அந்த மனிதர்களைப் பதிவாக்கிவிடுகின்றோம். தவ்று செய்கிறார்கள் என்று பார்க்கிறோம்… அந்த உணர்வை நுகர்கின்றோம்… அதே அணுவாக நம் உடலில் மாற்றிவிடுகின்றது.

இங்கே உபதேசத்தைக் கேட்கின்றீர்கள்.
1.ஆனால் நான் ஒருவன் தானே இங்கே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் நீங்கள் பார்த்தால் ஆயிரம் பேர் ஆயிரம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லவா..!
3.அதைப் பார்த்ததும் அது தான் உங்களுகுள் பெருகுகின்றது. (நான் சொல்வது சிறுத்துவிடுகின்றது.

கோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுகின்றோம். அங்கே மற்றொருவரும் வந்து கும்பிடுகின்றார்.

நாம் கும்பிடும் பொழுது அவரைப் பார்த்தவுடன் அவர் பல தவறுகள் செய்பவர் என்று தெரிகிறது. அர்ச்சனை செய்து… அந்தப் பரிவட்டம் கட்டி… அபிஷேகம்… ஆராதனை…! என்று பல நிலைகள் அவருக்கு நடக்கின்றது.

1.எத்தனையோ கொலை செய்கின்றான்
2.அவனுக்குச் சாமி எல்லாம் கொடுக்கின்றது… உதவி செய்கின்றது பார்..!
3.கோவிலையே அந்த நேரத்தில் வெறுக்கின்றீர்கள்… இல்லையா…?

ஆக கோவிலுக்குப் போன இடத்தில் ஒரு தவறு செய்பவன் அபிஷேக ஆராதனை செய்து அவனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தவுடன் உங்களுடைய எண்ணம் எப்படி வருகிறது…?

மற்றவர்கள் செய்யும் தவறைப் பார்த்தவுடன் “என்றைக்குத் தான் இது நல்லதாகப் போகிறதோ…? தெரியவில்லையே…! என்று எண்ணுகின்றீர்கள். அப்பொழுது அந்த எண்ணத்திற்குத்தான் சக்தி கொடுக்கின்றீர்கள்.

அந்த நேரத்தில் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்ற முடிகின்றதா…? என்றால் இல்லை..! அந்த உணர்வுகளே வருவதில்லை.

அதை எல்லாம் மாற்றுவதற்காக வேண்டித்தான் இந்தக் காலைத் துருவ தியானத்தை முக்கியமாக உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

1.ஈஸ்வரா…! புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று எண்ணி
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கோபம் வெறுப்பு வேதனை போன்றவைகளை உடனே துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும், இங்கே வருவோர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் காணும் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தச் சோர்வு வராது. மன பலம் கிடைக்கும். தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆற்றலும் கிடைக்கும்.

இவ்வுலகில் தோன்றிய எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Sages worlds.jpg

இவ்வுலகில் தோன்றிய எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகாள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…! இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.