நமக்கு வரும் கஷ்டங்களிலிருந்து மீட்டிக் கொள்ளத்தான் ஆண்டவனை வணங்குகிறோமா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Power of atma - soul.jpg

நமக்கு வரும் கஷ்டங்களிலிருந்து மீட்டிக் கொள்ளத்தான் ஆண்டவனை வணங்குகிறோமா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய உலகில் உள்ள பெரும்பகுதியானோர் தன் உயிரின் உண்மை நிலையையும்… கடவுளின் நிலையையும்… தான் வாழும் வாழ்க்கை நிலையையும்… புரியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஈஸ்வர சக்தி பெற்ற… பிறப்பிலிருந்து நல்லவர்… கெட்டவர்… என்ற பாகுபாடு இல்லாமல் அச்சக்தியில் இருந்து அவர்களுக்கு அளித்த மாபெரும் சந்தர்ப்பத்தை “நலமாக வாழ்ந்திடத்தான்” ஒவ்வொருவரும் பிறக்கின்றார்கள்.

பிறவி எடுத்த நிலையில் அவரவர்கள் வளர்ந்த நிலை… மண் வாக்கு… மன நிலை… சுவாச நிலையைக் கொண்டு வாழும் பொழுது “தன் சுவாச நிலையிலே தான்” அவர்களுடைய நிலை எல்லாமே நடக்கின்றன.

1.இன்றைய காலத்தில் மக்கள் ஆண்டவனை வணங்குவது என்பதே
2.தன் கஷ்டங்களுக்கு மீட்கும் வழியை வகுத்துத் தரத்தான் பல கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள்.
3.பல காணிக்கைகளைக் கட்டி பல வேண்டுதல்களையும் செய்து
4.ஆண்டவனையும் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் பாகஸ்தனாக்கி
5.இவர்கள் செய்யும் பாவத்திற்கும் ஆண்டவனின் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

நான் அள்ளி அள்ளி ஆண்டவனுக்கு அளித்தேன்… எல்லா ஆண்டவனுக்கும் பல நிலையில் பூஜை செய்கிறேன்… அந்த ஆண்டவனுக்குக் கண்ணில்லையா…? என்றெல்லாம்
1.இவர்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது
2.அந்த ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்.

இவர்கள் எண்ணி ஏங்கும் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் எந்தக் கோவிலுக்காவது சென்று வந்தால் அந்த நிலையிலிருந்து பொருள் வந்தவுடன் ஆண்டவனை… “எல்லாம் அவன் தான்…!” என்கிறார்கள்.

(ஆனால்) இவர்கள் மன நிலையில் இருந்து தான் அவ்வாண்டவனின் சக்தியே செயல்படுகிறது.

அந்தச் சூரிய சக்தியிலிருந்து இவர்கள் ஈர்க்கும் நிலையிலிருந்து தான் அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை இதைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து
1.அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்…
2.அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை உணருங்கள்.

நம் சித்தர்கள் பல வழிகளில் பல உண்மைகளைச் செய்யுள்களின் (பாடல்கள்) வடிவில் மனிதர்களின் எண்ணத்திற்குப் பதியும்படி முதலிலேயே வெளியிட்டுள்ளார்கள்.

ஆட்டை வெட்டுபவனுக்கு… ஒவ்வொரு நாளும் பல ஆடுகளை அடித்து வியாபார நிலைக்கு அவன் அதை விற்கிறான். ஆட்டை வெட்டுபவனுக்குத் தான் பாவம்… உண்ணுபவனுக்கு அல்ல…! என்று எண்ணுகின்றோம்.

அவன் எதற்காக ஆட்டை அடிக்கின்றான்…?

அவன் எண்ணமெல்லாம் அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்திடத்தான்…! அதைச் செய்கிறான். பாவ புண்ணியத்தை அவன் எண்ணத்தில் கொண்டு வருவதில்லை.

பாவ புண்ணியத்தை அவன் எண்ணி விட்டால் அவன் எண்ணத்திலேயே அது ஊன்றி.. அவன் அந்தத் தொழிலை ஒரு நாளும் செய்திட முடியாது.

பல தண்டனைகள் பெற்ற கைதிகளை ஒருவன் தூக்கிலிடுகின்றான். ஒரே நாளில் அவன் பலரைத் தூக்கிலிட்டாலும்.. அவனுக்கு அந்தப் பாவம் அண்டுவதில்லை.

அவன் பொருள் வாங்க அந்தப் பணியைச் செய்கிறான். தன் மேல் தவறை எண்ணும் பொழுது தான் அவனுக்கு அந்நிலை தோன்றிடும். அவன் தொழில் அது தான்; அவன் ஊதியத்தைப் பெறுகின்றான்; அவன் எண்ணமெல்லாம் அந்த ஊதியத்தின் மேல் தான் உள்ளது.

அவன் ஆத்மாவில் அவன் நல்ல நிலைகள் பெற்றிருந்தால் அவனை எந்தப் பாவ புண்ணியங்களும் அண்டுவதில்லை. அவன் நிலையும் உயர்ந்து நிற்கிறது.

1.பல பாவங்கள் செய்துவிட்டு
2.செய்த பாவங்களைத் தன் எண்ணத்திலேயே கலக்கவிட்டு
3.தன் சுவாச நிலையை மேலும் கடினமாக்கிக் கொண்டு
4.பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இன்றைய மனிதர்கள்.

இந்நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் உயிரணுவிற்கு ஊட்டம் தந்து அவ்வுயிரணுவிற்கு அழியாச் செல்வத்தைத் தேடிடத்தான் இந்தப் பாட நிலையை எடுத்து இயம்புகிறோம்.

1.உயிரணுவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
2.இனி வாழும் நாட்களை நல்ல நிலையில் வாழ்ந்திடுங்கள் என்பதற்கே இதை வெளியிடுகின்றோம்,

Leave a Reply