வியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…?

Real bahkti

வியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…? 

 

நிறையப் பேர் என்ன சொல்கிறார்கள்… அல்லது நினைக்கின்றார்கள்… என்றால் “சாமி (ஞானகுரு) கோவிலுக்கே போகவேண்டாம்” என்று சொல்கிறார்… என்கிறார்கள்.

கோவிலுக்குள் செல்லும் பொழுது அந்த ஞானிகள் சொன்னதை நினைவுபடுத்தி அந்தத் தெய்வ நிலையை நாம் செயலாக்க வேண்டும் என்பதைத் தான் யாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் முதலில் பிளானைப் (PLAN) போடுகின்றீர்கள். வீட்டை எப்படிக் கட்ட வேண்டும் என்று அந்த அளவுகளைப் படத்தின் மூலம் எடுத்துக் கொண்டோம் என்றால் “இன்னென்ன இடத்தில் இது இது வருகிறது…” என்று அந்தப் படத்தைப் பார்த்தே அறிந்து கொள்கிறோம்.
1.இந்தப் படத்தைப் போட்ட பின் தான் எங்கே வீடு கட்டப் போகிறோமோ அந்த இடத்திற்குச் செல்கிறோம்.
2.அப்படி இல்லாமல் அங்கே போய் வரைகிறோமா…?

அதே போல் தான் கோவிலுக்குச் சென்று நாம் அந்தத் தெய்வ குணத்தின் சக்திகளை எடுக்கச் சொல்கிறோம். அதை எடுத்துக் கொண்ட பின்
1.உங்கள் வீட்டிலே…
2.உங்கள் வாழ்க்கையிலே..
3.உங்கள் தொழிலிலே…
4.நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் மற்ற எல்லாவற்றிலுமே
5.அதை எப்படி எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும் என்ற அந்த எண்ணங்கள் தெளிவாக வருகின்றது.
6.ஏனென்றால் கோவில் அவ்வளவு புனிதமான இடம்…!

பல கோடிச் சரீரங்களில் நல்ல குணங்களை வளர்த்து அதை உருவாக்கி மனிதனைச் சிந்திக்கச் செய்யும் சக்தி நம் உடலில் இருக்கின்றது.
1.அந்தத் தெய்வ குணத்தை உயர்த்து…!
2.அந்தத் தெய்வ நிலையை நீ பெறு…! இதற்குத் தான் கோவில்.

உதாரணமாக நாம் ரோட்டில் போகும் பொழுது ஒரு கண்ணாடி நம் காலில் பட்டு இடறுகின்றது. அடிபட்டதும் இரத்தம் வருகின்றது. உடனே நாம் என்ன சொல்கிறோம்…? நடு ரோட்டில் இப்படி அறிவு கெட்டதனமாகக் கண்ணாடியைப் போட்டிருக்கின்றார்கள் பார்…! என்று சொல்வோம்.

அந்த உணர்ச்சி வேகத்தில்… யார் போட்டார்களோ அவர்கள் நாசமாகப் போகவேண்டும்…! என்றும் சொல்கிறோம். இதே உணர்வு நமக்குள் என்ன செய்கிறது..?

அதே நாசப்படுத்தும் எண்ணங்களை அதிகப்படுத்தி நம் நல்ல குணங்களை அழிக்கின்றது.

ஏனென்றால் “நாசமாகப் போக வேண்டும்…” என்ற நினைவை எடுக்கின்றோம். அடுத்தாற்போல் நம்முடைய வியாபாரத்திற்காக வேண்டிய ஒரு சரக்கை வாங்கச் செல்கிறோம் என்றால் அங்கே சென்றவுடன் நம் கண்களில் அந்த (நாசமாக்கும்) உணர்வு தான் வரும்.

நல்ல சரக்கை நீங்கள் பார்க்கவே முடியாது.

உங்கள் மனம் என்ன செய்யும்…? அங்கே இருக்கும் மட்டமான சரக்கை எடுத்து அதை வாங்கி இதை வைத்து வியாபாரம் செய்யலாம்… விலை மிகவும் சகாயமாக இருக்கின்றது… என்று நினைப்போம்.

வாங்கி வந்த பின் வியாபாரம் சரியாக இருக்காது… யாரும் வாங்கவில்லை என்கிற போது நஷ்டமாகிவிடும். அந்த நேரத்தில் ஒரு நல்ல சரக்கை எடுத்துக் கொடுத்தாலும் கூட அதைப் பயன்படுத்துபவனுக்கு அது மட்டமாகிவிடும். அப்பொழுது
1.அதை வாங்கிச் சென்றவன் என்ன சொல்வான்…?
2.இந்தக் கடைக்குப் போனால் வெறும் மட்டமான சரக்கைக் கொடுக்கின்றான் என்று
3.வாடிக்கையாக வாங்கும் ஆளும் நம்மை விட்டுப் போய்விடுவார்.
4.ஆக… கடைசியில் நாசமாகப் போவது யார்…? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்…!

நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள்… அதைத்தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ… நீ அதுவாகின்றாய்…! என்று கண்ணன் சொல்வதாக வியாசகர் தெளிவாக்குகின்றார்.

நாம் எடுக்கும் எண்ணங்கள் அந்தக் கண்களுக்குத் தான் வரும். அதன் உணர்வு கொண்டு தான் நாம் தேர்ந்தெடுப்போம்.

வேதனையான உணர்வுடன் இருக்கும் பொழுது பாருங்கள்…! சமைக்க வேண்டும் என்று அரிசியை எடுத்தால் அதிலே கல் நிறைய இருக்கும்.

கோபமான நிலையில் இருக்கும் பொழுது பாருங்கள்… மிளகாயைப் பார்த்தால் மிகவும் இரசிப்பாக இருக்கும். சமையல் செய்யும் பொழுது ஒரு மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவோம். சாப்பிடுபவர்கள் உஸ்…உஸ்… எரியுதே..! என்பார்கள்

கண்களின் இயக்கத்தைப் பற்றி அன்று வியாசகர் எவ்வளவு தெளிவாகக் கீதா உபதேசத்திலும் மகாபாரதத்திலும் எழுதியிருக்கிறார் என்று பார்த்தீர்கள் என்றால் அந்தப் பேருண்மைகளை நீங்கள் அறிய முடியும்.

நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரும் தீமைகளைத் தன் ஆறாவது அறிவு கொண்டு எப்படிச் சமப்படுத்தி வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்.

1.கண்களால் பல நிலைகளை அறிந்து பதிவாக்குவதும்
2.கண்களால் கவர்ந்த உணர்வுகளை உயிருடன் இணைப்பதும்
3.உயிரின் நிலைகள் அதைச் செயலாக்குவதும்
4.அந்த உணர்ச்சிகள் நம்மை எப்படி இயக்கி.. நமக்குள் உருவாக்கி.. அதுவாக நம்மை எப்படி ஆக்குகிறது..? என்றும்
5.ஆயிரத்தி எட்டு குணங்களாக ஆலயத்திலே தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதே கண்கள் கொண்டு உற்றுப் பார்த்து அந்தத் தெய்வச் சிலைகளில் காட்டிய தெய்வ குணங்களை நமக்குள் எடுத்து அதை நாம் பெறவேண்டும்… எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெறவேண்டும்… இங்கு வருவோர் அனைவரும் அந்தத் தெய்வ குனத்தைப் பெறவேண்டும்.. என்று எண்ணினால் எப்படி இருக்கும்…!

1.நாம் அந்தத் தெய்வமாகவே ஆகின்றோம்…!
2.பண்படுத்தும் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது,
3.நம் சொல் செயல் பிறரைப் பண்படுத்தும் நிலையாக உருவாகின்றது.

இந்த உடலுக்குள் இருக்கும் சக்தியின் நிலைகளைத்தான் அங்கே தெளிவாக்குகின்றார்கள். நீ எதை எப்படி வளர்க்க வேண்டும்… எதன் வழி நீ வாழ வேண்டும்…? என்றும் ஞானிகள் காட்டுகின்றார்கள்,

Leave a Reply